Lekha Books

A+ A A-

சப்தங்கள் - Page 2

sapthangal

"பல வருடங்களுக்கு முன்னாடி எல்லாருக்கும் தெரிஞ்சு அம்மாவும் அப்பாவும் இல்லாத ஒரு இளைஞன் இருந்தான். அவன் நிறைய கொலைகள் செய்தான். தன்னோட இருபத்து நாலாவது வயசுல அவன்...''

"இடையில நான் ஒண்ணு கேட்கட்டுமா? கதையை ஆரம்பிச்சிட்டீங்களா?''

"ஆமா...''

"நீங்க யாரைப்பத்தி சொல்றீங்க?''

"என்னைப் பற்றித்தான்!''

"அப்படியா?''

"எங்கே வச்சு வேணும்னாலும் கதையை ஆரம்பிக்கலாம்னு நீங்கதானே சொன்னீங்க?''

"ஆமா... ஆமா... அதைப் பற்றி நான் ஒண்ணும் சொல்லல. நான் நினைச்சேன்... நீங்க ஒரு...''

"பைத்தியக்காரனா இருப்பேன்னு... அப்படித்தானே?''

"உங்களுக்கு என்ன பிரச்சினை?''

"பைத்தியம்!''

"அதனால என்ன? சொல்லப்போனா பைத்தியத்தோட அம்சம் உலகத்துல இருக்குற எல்லார்கிட்டயும் இருக்கு. கொஞ்சம் அளவுல ஏறக்குறைய இருக்கும். அவ்வளவுதான். ஆமா... நீங்க பல் தேய்க்க வேண்டாமா? குளிக்க வேண்டாமா? உங்களோட பார்வையும் தாடியும் முடியும் நாத்தம் பிடித்த ஆடைகளும்... எது எப்படி இருந்தாலும் குளிச்சு சுத்தமா இருக்க வேண்டாமா?''

"தண்ணி பூமியோட ரத்தம்னு நான் நினைக்கிறேன்.''

"பிறகு? வேற என்ன விசேஷங்கள்?''

"மாற்றி அணியிறதுக்கு வேற ஆடைகள் கிடையாது. உடுத்தி குளிக்கிறதுக்கு துண்டு இல்ல...''

"இந்த ராத்திரி நேரத்துல உங்களை யார் என்கிட்ட அனுப்பி வைச்சது?''

"யாரும் சொல்லி நான் இங்கே வரல. பகல்ல உங்களை நான் பார்த்தேன். உங்களோட பேரை நான் கேள்விப்பட்டிருக்கேன். அது நீங்கதான்னு ஆளுங்க விரலை நீட்டி பேசுறதைக் கேட்டேன். அதுனால உங்க பின்னாடியே நான் வந்துட்டேன். உங்ககூட வேற சில ஆளுங்களும் வழியில வந்து சேர்ந்தாங்க. நீங்க எல்லாரும் இந்த அறைக்குள்ள உட்கார்ந்து இவ்வளவு நேரமும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கிட்டு இருந்தீங்க. வாதங்களும் பிரதிவாதங்களும் ஆர்ப்பாட்டங்களும் சிரிப்பும்... எல்லாம் முடிஞ்சு அவங்க வெளியே போறதைப் பார்த்து நான் உள்ளே வந்தேன்!''

"இதுவரை நீங்க வழியில இருந்த இருட்டுக்குள்ள நின்னுக்கிட்டு இருந்தீங்களா?''

"ஆமா!''

"என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?''

"நான் உங்களோட புத்தகங்களைப் படிச்சிருக்கேன்!''

"அது எங்கே இருந்து உங்களுக்குக் கிடைத்தது?''

"நான் காசு கொடுத்து வாங்கினேன்!''

"அதுக்கு பணம்?''

"நான் பட்டாளத்துல இருந்தேன்!''

"அப்படித்தான் நீங்க கொலையாளி ஆனதா?''

"ஆமா... நான் எதிரிகளை மட்டுமில்ல கொன்னது! எதிரிகள்! நண்பர்கள்! இதுக்கு அர்த்தம் ஏதாவது இருக்கா என்ன?''

"நீங்க என்னோட ரசிகர்தானே?''

"ஆமா!''

"நீங்க எனக்காக என்ன கொண்டு வந்திருக்கீங்க?''

"என்கிட்ட கொண்டுவர ஒண்ணுமே கிடையாது!''

"பிறகு?''

"கொலை செய்யிறதைப் பற்றி உங்களோட கருத்து என்ன?''

"நல்லதா கெட்டதான்னு கேக்குறீங்களா?''

"ஆமா!''

"நான் என்ன சொல்லணும்?''

"ஒண்ணுமே சொல்றதுக்கு இல்லியா?''

"வருத்தப்படக்கூடாது. நான் எது வேணும்னாலும் சொல்லுவேன். என்னை யாரும் கொல்றது எனக்குப் பிடிக்காது. சாதாரணமா நான் செய்றது என்னன்னா... என்னைக் கொல்ல வர்ற ஆளுங்களுக்கு என்னைவிட பலம் அதிகம் இருக்கான்னு பார்ப்பேன். அவங்க என்னைவிட பலம் கம்மியானவங்களா இருந்தா, நான் அவுங்ககிட்ட போராடுவேன். என்னைவிட அவுங்க பலசாலியா தெரிஞ்சா, எவ்வளவு வேகமா ஓடணுமோ, அவ்வளவு வேகமா நான் ஓடிருவேன்!''

"நீங்க என்கிட்ட விளையாடுறீங்களா?''

"ஆமா... உங்களுக்கு என்ன வேணும்?''

"என்னைப் பொறுத்தவரை- என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்ல. என் வாழ்க்கையில, உங்கக்கிட்ட சில கதைகளை நான் சொல்லணும்!''

"நாளைக்குச் சொன்னா போதாதா? இங்க இவ்வளவு நேரம் இருந்த ஆளுங்க பேசினதைக் கேட்டுக் கேட்டு நான் ரொம்பவும் களைச்சுப் போயிருக்கேன். நான் இப்ப ஏதாவது சாப்பிட்டுட்டு தூங்கப் போறேன். நீங்க நாளைக்கு வாங்க. அதுக்காக காலையிலேயே வந்துற வேண்டாம். பதினொண்ணு... பன்னிரண்டு மணிக்கு வந்தா போதும். அப்பத்தான் நான் தூக்கத்தை விட்டே எந்திரிப்பேன்!''

"நான் அதுவரை எங்கே போறது?''

"போறதுக்கு வேற இடமே இல்லியா?''

"இல்ல!''

"இங்க உங்களுக்குப் பழக்கமானவங்க யாரும் இல்லியா?''

"இருக்காங்களா? இந்த உலகத்துல எனக்குப் பழக்கமானவங்க யார் இருக்காங்க?''

"ஆமா... ஏதாவது சாப்பிட்டீங்களா?''

"இல்ல!''

"கையில பணம் இருக்கா.''

"இல்ல!''

"நல்ல விஷயம்தான்!''

"நீங்க என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?''

"என்ன நினைக்கிறேனா?''

"ஆமா...''

"ஒண்ணு... நீங்க நான் சொல்றேன்னு வருத்தப்படக்கூடாது. ரெண்டு- நீங்க இவ்வளவு பயங்கரமா என்னையே உத்துப் பார்க்கக்கூடாது. மூணு- நீங்க பல் தேய்ச்சு குளிக்கணும். நாலு- நான் தர்ற நல்லா துவைச்ச ஆடைகளை அணியணும். அஞ்சு- உங்களோட தாடியையும் முடியையும் வாரணும்னா என்கிட்ட சீப்பு எதுவும் கிடையாது. ஆறு- என்கிட்ட ஒரு ஆள் சாப்பிடும் அளவுக்குத்தான் சாப்பாடே இருக்கு. ஏழு- அதை நாம ரெண்டு பேரும் பங்கு போட்டு சாப்பிடுவோம். சம்மதம்தானா?''

"சரி...''

"அப்படின்னா... அங்கே போயி என்னோட படுக்கையைத் தொடாம அடுத்த அறைக்குள்ள போயி, அங்கே இருக்குற துண்டையும் மூலையில பேப்பர்ல மடிச்சு வச்சிருக்கிற பல்பொடியையும் எடுத்துக்கிட்டு வந்து, அந்த டார்ச் விளக்கையும் கையில வச்சுக்கிட்டு அங்கே இருக்குற குளியல் அறைக்குள் போயி நல்லா குளிச்சிட்டு வாங்க. கொஞ்சம் நில்லுங்க. துவைச்ச ஒரு ஆடை தர்றேன். நீங்க இப்போ போட்டிருக்கிற ஆடையைத் திரும்பவும் இங்கே கொண்டுவர வேண்டாம். அடுத்த அறையில இருக்குற படுக்கைதான் உங்களுக்கு உள்ளது. தூங்குற சமயத்துல நான் இந்தக் கதவை அடைச்சிடுவேன். அடுத்த அறையை உங்க விருப்பப்படி பயன்படுத்திக்கலாம். உங்களுக்கு எப்போ வெளியே போகணும்னு தோணுதோ, அப்போ போகலாம். முழு சுதந்திரம் உங்களுக்கு. இப்போ போயி குளிச்சிட்டு வாங்க. பிறகு நாம உட்கார்ந்து இருக்குற சாப்பாட்டைச் சாப்பிடுவோம். அதற்குப் பிறகு தூங்குவோம். பேச வேண்டிய விஷயங்களை நாளைக்குப் பேசிக்குவோம். என்ன, சரியா?''

"சரி...''

"இடையில ஒண்ணு கேட்கட்டுமா? உங்களைப் பட்டாளத்துல இருந்து விலக்கிட்டாங்களா?''

"ஆமா!''

"என்ன காரணம்?''

"தெரியாதா? போர்ல வெற்றி பெற்றாச்சு?''

"எத்தனைப் பேரை பட்டாளத்துல இருந்து போகச் சொன்னாங்க?''

"நாலோ, அஞ்சோ லட்சம் வரும்!''

"நீங்க அவுங்களோட பிரதிநிதியா?''

"நான் யாருடைய பிரதிநிதியும் இல்ல. நான் எனக்கு மட்டும்தான் பிரதிநிதி. நான் சில விஷயங்களை மனம் திறந்து சொல்லலாம்ல...?''

"தாராளமா!''

"எனக்கு தனிப்பட்ட முறையில- ஒரு மண்ணாங்கட்டியோடயும் வெறுப்பு கிடையாது. நான் இந்த உலகத்தை ரொம்பவும் நேசிக்கிறேன். பிரபஞ்சங்களான எல்லா பிரபஞ்சங்களையும். நான் என்ன இருந்தாலும் பிறந்தது இந்த பூமியிலதானே! இங்கே இருக்குற எல்லாருமே என்னோட தொடர்பு உள்ளவங்கதான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel