Lekha Books

A+ A A-

சப்தங்கள் - Page 8

sapthangal

"அந்த வீட்ல உங்களுக்கு என்ன வேலை?''

"பெரிசா சொல்ற மாதிரி ஒண்ணுமில்ல. நாலஞ்சு சின்னப் பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லித்தரணும். அவங்களை கவனமா பார்த்துக்கணும்!''

"அந்த வீட்ல இருக்குறவங்களுக்கு உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களும் தெரியுமா?''

"சில விஷயங்கள் தெரியும். பொதுவா அவங்க எல்லாருமே என் மேல நிறைய அன்பு வச்சிருந்தாங்க. உண்மையிலேயே மனிதர்கள் எவ்வளவு அற்புதமானவர்கள்!''

"அதிலென்ன சந்தேகம்? நீங்கள்கூட ஒரு அற்புத மனிதர்தான்!''

"என் மனசுல ஒரு கவலை இருக்கு. மணம் வீசுற கவித்துவமான ஒரு கவலைன்னுகூட இதைச் சொல்லலாம். சந்திரன் உதிச்சிக்கிட்டு இருக்குற இரவு நேரங்கள்ல எனக்கு இப்படி ஒரு கவலை மனசுல தோணும். உங்களுக்கு அப்படித் தோணியிருக்கா?''

"சில நேரங்கள்ல எல்லாருக்குமே இப்படித் தோணும்!''

"சரி... நிலவுல உயிர்கள் இருக்கா என்ன?''

"அங்கே ஒண்ணுமே இல்லைன்னுதான் விஞ்ஞானிகள் சொல்றாங்க. அது ஒரு செத்துப்போன உலகம்தான். அவங்க சொல்லியிருக்காங்க!''

"நட்சத்திரங்கள்ல?''

"சிலவற்றில் உயிரினங்கள் இருக்குன்னு சொல்றாங்க. இனி கொஞ்சம் காலம் போனா... அதாவது- எதிர்காலத்துல என்னவெல்லாம் நடக்கும்? கோடி கோடி வருடங்களுக்கு முன்னாடி, அந்தக் காலத்துல உலகத்துல ஒண்ணுமே இல்ல...''

"எதுவுமேவா?''

"ஆமா... அதாவது- பூமியும், சந்திரனும், சூரியனும், நட்சத்திரங்களும்- அற்புதமான, அதிசயிக்கத்தக்க, பயங்கரமான, அறிவுக்கெட்டாத இந்தப் பெரிய பிரபஞ்சமும்...''

"பிறகு எல்லாம் எப்படி உண்டானது?''

"கடவுள் சூனியத்தில் இருந்து படைச்சதுதான் எல்லாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க சொல்றாங்க- பூமியும், நாமும், பிரபஞ்சமும் தானே உண்டாச்சுன்னு!''

"எது சரியானது?''

"என்ன சொல்றது? சில மத நூல்கள்ல பூமிதான் பெரிசுன்னு சொல்லப்பட்டிருக்கு. வேறு சில நூல்கள்ல பூமியும், சூரியனும், சந்திரனும், சில நட்சத்திரங்களும் சேர்ந்ததுதான் பிரபஞ்சம்னு சொல்லப்பட்டிருக்கு. சில நூல்கள்ல பூமியை தேவின்னு வழிபட்டிருக்காங்க. சூரியனும், சந்திரனும் கடவுள்கள்னு சொல்லப்பட்டிருக்கு. சில நூல்கள்ல பூகோளம் வெறும் மண்ணாங்கட்டின்னு கூறப்பட்டிருக்கு. சில மத நூல்களும் விஞ்ஞானிகளும் பூமி உருண்டையானதுன்னு சொல்லி இருக்காங்க. இதுல எது சரியானது? நீங்க மதங்களை நம்பாத ஒரு ஆளாச்சே! உங்களுக்கு எது சரின்னுபடுதோ, அதை ஏத்துக்கோங்க...''

"சில மத நூல்கள்ல நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - கடவுள் எரிய வைத்த விளக்குகள்னு சொல்லப்பட்டிருக்கு. உங்க அபிப்ராயத்தில மனிதர்கள் எப்படி உண்டானாங்கன்னு நினைக்கிறீங்க?''

"மனிதர்கள் மட்டுமில்ல... இங்க எவ்வளவு உயிரினங்கள் இருக்கு! இவை எல்லாமே எப்படி உண்டாயின? அது பற்றி நீங்க சொந்தமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான். அதாவது- இதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாதுன்னும், நான் ஒண்ணும் புதுசா எதையும் கண்டுபிடிக்கலைன்னும் இதற்கு அர்த்தம். விஞ்ஞானிகள் சொல்றதைக் கேட்டிருக்கேன். அவங்க வேற வேற மாதிரி சொல்லியிருக்காங்க. சுருக்கமா நான் சொல்றேன். ஆனா, கேட்க அவ்வளவு நல்லா இருக்காது. உலகத்தோட ஆரம்பத்திற்குப் போவோம். கோடி வருடங்கள்... பாருங்க... பத்து வருடம், நூறு வருடம், ஆயிரம் வருடம்... நீங்களும் நானும் வர்றதுக்கு முன்னாடி... மனிதப் பிறவிகள் உண்டாவதற்கு முன்னாடி... உயிரினங்கள் உண்டாவதற்கு முன்னாடி... நீரும் மண்ணும் உண்டாவதற்கு முன்னாடி... கோடிக்கணக்கான யுகங்களுக்கு முன்னால்... பூமி உருகி எரிஞ்சு சுத்திக்கிட்டு இருக்குற ஒரு பிரம்மாண்டமான சிவந்த நிறம் கலந்த ஒரு வெளுத்த தீக்கட்டைன்னு  மனசுல நினைச்சுக்கோங்க. அதற்கு முன்னாடி இந்த பூமியான சிவந்த நிறம் கலந்த வெளுத்த தீக்கட்டை- பயங்கர வெப்பத்துடன் எரிந்து கொண்டிருக்கிற சூரிய குடும்பத்துல சாதாரண ஒரு துகள்...''

"பிறகு?''

"அதுல இருந்து சிதறிப்போய் அப்படி அது சுத்திக்கிட்டு இருக்கு. நூறு நூறாயிரம் யுகங்களா... இரவும் பகலுமா... இல்ல... அப்போ பகலும் ராத்திரியும் இல்லியே! அப்படி... எரிஞ்சிக்கிட்டு இருக்கு.''

"பிறகு?''

"கொஞ்சம் கொஞ்சமா அது குளிர்ச்சியாகுது. யுகங்கள் கடந்துபோகுது. நீரும் மண்ணும் உண்டாகுது. பிறகும் யுகங்கள் கடக்கின்றன. கடல்களும், நதிகளும், ஏரிகளும், நீர்வாழ் உயிர்களும், பாசிகளும், செடிகளும், மரங்களும் உண்டாகின்றன. நூறாயிரம் யுகங்களா... பறவைகளும், புழு- புச்சிகளும், மிருகங்களும் உண்டாகின்றன. காலம் நீங்குகிறது. நூற்றுக்கணக்கான யுகங்கள் பாய்ந்தோடுகின்றன. மனிதர்கள் தோன்றுகிறார்கள். நிர்வாணமான ஆண்கள்- பெண்கள்! அதற்குப் பின்னாடி நூறு நூறாயிரம் யுக பரம்பரைகளின் இரவிலும் பகலிலுமாக மனித வாழ்க்கை தொடருது. நான் இப்போ சொன்னதுல இங்கேயும் அங்கேயுமா சில தவறுகள் இருக்கலாம். இருந்தாலும் சுருக்கம் இதுதான். உயிரினங்கள்ல மனிதர்கள் மட்டும் வளர்ந்திருக்காங்க. வேட்டையாடுபவர்களாக, குகைவாசிகளாக, விவசாயிகளாக, கிராமங்கள், மதங்கள், தேவாலயங்கள், பட்டணங்கள், இயந்திரங்கள், வாகனங்கள்- இப்படி வந்து கொண்டிருக்கு மனிதர்களின் கதை. இது ஒரு முடிவே இல்லாம போய்க்கிட்டிருக்கு.''

"இனி நம்ம எதிர்காலம் எப்படி இருக்கும்?''

"மனித சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கேக்குறீங்களா?''

"ஆமா...''

"வீரமும் காதலும் கட்டாயம் நமக்குத் தேவை ஆயிற்றே! பயங்கர நோய்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதைப் போக்க நம்ம கைவசம் ஆயுதங்கள் இருக்கும். மருந்துகளைச் சொல்றேன். வாகனங்கள் இருக்கு. மின்சாரம் இருக்கு. பூமிக்கு மேலே... ஆகாயத்தில், நீரிலும் அதற்கு அடியிலும்... ஏன் பூமிக்கு அடியிலும்கூட ஓடுகிற வாகனங்கள்... மிகப்பெரிய சக்தி கொண்ட வாகனங்கள்... தூர... அதிதூர கிரகங்கள்...''

"இந்த பூமிக்கு உள்ளே என்ன இருக்கு?''

"நெருப்பு மலைகள் வெடித்து ஒழுகுகின்றன... உலோகங்களும் மற்ற பல பொருட்களும் உருகி... இரும்பும் மற்ற சில பொருட்களும் பூமிக்கு உள்ளே பயங்கர வெப்பத்துடன் உருகி எரிஞ்சு... இப்படி எத்தனையோ இருக்கின்றன பூமிக்கு அடியில்!''

"பூமி ஒருகாலத்தில் அழிஞ்சு போகுமா என்ன?''

"நானும் நீங்களும் ஒருகாலத்தில் இந்த உலகத்தில் இருக்கப் போறதில்ல என்பது உண்மைதானே! பூமியைப் பற்றி, பிரபஞ்சத்தின் எதிர்காலத்தைப்பற்றி இப்போ எதற்கு நினைச்சுப் பார்க்கணும்?''

"சந்திரன் ஒரு இறந்துபோன உலகம்னு தெரிஞ்சு போயிருக்கே?''

"அதற்கு முன்னாடி அந்தக் காலத்துல ஏதாவது இருந்ததான்னு நமக்குத் தெரியாது. நமக்கு கொஞ்சம்கூட பிடிபடாத விஷயங்களைப் பற்றி நாம் ஏன் வீணா மண்டையைப்போட்டு குழப்பிக்கணும்? எல்லாமே கடவுள் படைச்சவைதான்னு நினைச்சுக்கோங்க. சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்- இவை எல்லாமே கடவுள் நமக்காக எரிய வச்ச விளக்குகள்னு நினைச்சுக்கோங்க!''

"அப்படின்னா மதங்கள், சொர்க்கம், நரகம்- இவற்றையும் நம்பணும்ல?''

"நீங்க நம்புறீங்களா?''

"நம்புங்க. யார் வேண்டாம்னு சொன்னது?''

"நான் நம்புறேனா இல்லையான்னு நீங்க தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க?''

"தெரிஞ்சுக்கலாம்னுதான்!''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel