Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

அமெரிக்காவில் வாழும் தமிழ் நடிகர்!

அழியாத கோலங்கள்சுரா (Sura)

அமெரிக்காவில் வாழும் தமிழ் நடிகர்!

ன்று என் வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான சம்பவம் நடைபெற்றது. திரைப்பட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சரும், என் ஆருயிர் நண்பருமான நெப்போலியனை அவருடைய ராயப்பேட்டை அலுவலகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடிக் கொண்டிருந்தேன்.  

இருவரும் மறக்க முடியாத பல நிகழ்ச்சிகளையும் மீண்டும் மனதில் அசை போட்டு மகிழ்ந்தோம்.

என் மனம் பின்னோக்கி பயணித்தது. 1991 ஆம் வருடம். அந்த வருடத்தில் திரைக்கு வந்த பாரதிராஜாவின் 'புது நெல்லு புது நாத்து' படத்தின் மூலம் குமரேசன் என்ற நெப்போலியன் நடிகராக அறிமுகமானார். அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே அவருக்கு இன்னொரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. அந்த படம் ஆர். பி. சவுத்ரியின் 'எம். ஜி. ஆர். நகரில். 'புது நெல்லு புது நாத்து' படத்தில் பேசப்பட்டவர்களே நெப்போலியனும், சுகன்யாவும்தான். அந்த படத்தில் நெப்போலியனின் மிகச் சிறந்த நடிப்பைப் பார்த்து உண்மையிலேயே நான் வியந்து போனேன். தன் வயதிற்கு மீறிய பாத்திரத்தில் நடித்து முத்திரை பதித்திருந்தார் நெப்போலியன்.

அந்தச் சமயத்தில்தான் எனக்கு அவர் அறிமுகமானார். நான் அவருடைய பி. ஆர். ஓ. வாக ஆனேன். அந்த இரண்டு படங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து நெப்போலியனுக்கு படங்கள் ஒப்பந்தமாயின. நாடோடித் தென்றல், சின்னத்தாய், முத்துக்காளை என்று தொடர்ந்து அவர் நடித்த படங்கள் திரைக்கு வந்தன. விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார், கார்த்திக், முரளி என்று அந்த காலகட்டத்தில் கதாநாயகர்களாக நடித்த அனைத்து நடிகர்களின் படங்களிலும் பிரதான வில்லனாக நடித்தார் நெப்போலியன். எல்லா படங்களிலும் அவருக்கு நல்ல பெயர்.

அப்போது நெப்போலியனுக்கு கிடைத்த மிகப் பெரிய உயர்வு - 'எஜமான்'பட வாய்ப்பு. ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, நெப்போலியன் வில்லனாக நடித்தார். ரஜினியுடன் சரிசமமாக மோதும் பாத்திரம். ரஜினிக்கு இணையான காட்சிகள். அந்த கிராமத்து கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் நெப்போலியன் என்பதே உண்மை. அந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து நெப்போலியனின் கலையுலக பயணத்தில் மைல் கல்லாக அமைந்த படம் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'கிழக்குச் சீமையிலே'. மிகவும் கனமான கதாபாத்திரம் நெப்போலியனுக்கு. படத்தில் அவருக்கு ஜோடி ராதிகா. விஜயகுமார், நெப்போலியன், ராதிகா மூவரும் போட்டி போட்டு நடித்திருந்தனர். நெப்போலியன் அந்த கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியிருந்தார். நெப்போலியனின் இயல்பான நடிப்பாற்றலால் அந்த பாத்திரம் சிறப்பு பெற்றது. 25வாரங்கள் ஓடி அந்த படம் மகத்தான சாதனை புரிந்தது. 'கிழக்குச் சீமையிலே'படத்தைப் பார்க்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்பதுதான் அப்படத்தின் சிறப்பு.

தமிழைத் தொடர்ந்து மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்பும் நெப்போலியனைத் தேடி வருகிறது. மோகன்லால் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில் நெப்போலியன் நடிக்கிறார். படத்தின் பெயர் 'தேவாசுரம்'. படத்தின் கதாநாயகி ரேவதி. இயக்கியவர்:ஐ. வி. சசி. படம் வெள்ளி விழா கண்டு சாதனை புரிந்தது. நெப்போலியன் அப்படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு நூறு சதவிகிதம் உயிர் தந்திருந்தார். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் என்று கூறுவதே சரியானது. தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. படத்தின் பெயர்:'ராவண பிரபு'.  படத்தை ரஞ்சித் இயக்கினார். மீண்டும் மோகன்லால், நெப்போலியன், ரேவதி. . . . மூவரும் அவரவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்தார்கள். நான் இந்த இரண்டு மலையாள படங்களையும் பார்த்திருக்கிறேன். படங்களைப் பார்த்து எவ்வளவோ வருடங்களாகி விட்டன. இப்போது கூட அந்த படங்களும், கதாபாத்திரங்களும் என் மனதில் பசுமையாக வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பதிலிருந்தே அவற்றின் மேன்மையைப் புரிந்து கொள்ளலாம். இப்போது சந்தித்தபோது கூட நெப்போலியன் 'தேவாசுரம்' படத்தில் தான் பேசிய மலையாள வசனங்களை ஒரு வார்த்தை கூட விடாமல் என்னிடம் பேசி காட்டினார். உண்மையிலேயே அவரின் ஞாபக சக்தியைப் பார்த்து நான் வியந்து போனேன்.

மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்குப் படவுலகமும் நெப்போலியனை வரவேற்றது. நாகார்ஜுனா கதாநாயகனாக நடிக்க நெப்போலியன் வில்லனாக நடித்தார்.

ஏராளமான படங்களில் வில்லனாக நடித்து முத்திரை பதித்த நெப்போலியனின் கலைப் பயணத்தில் இன்னுமொரு உயர்வு. கதாநாயகனாக ப்ரொமோஷன். 'ஜூனியர் விகட'னில் தொடராக வெளிவந்து பல இலட்சம் வாசகர்களால் வாசிக்கப்பட்ட 'சீவலப்பேரி பாண்டி' திரைப்படமாக எடுக்கப்பட்டது. கதாநாயகன் பாண்டியாக நெப்போலியன் நடித்தார். படத்தை இயக்கியவர் பிரதாப் போத்தன். மனம் திறந்து கூறுவதாக இருந்தால், நெப்போலியனைத் தவிர வேறு எந்த நடிகரும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவே மாட்டார்கள். நெப்போலியனுக்கென்றே படைக்கப்பட்டதைப் போன்ற பாத்திரம். அவர் பாத்திரத்திற்கு உயிர் தந்தார். நெப்போலியன் கண்ணீர் மல்க பேசும்போது, அவருடன் படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் சேர்ந்து அழுதார்கள். வில்லன் நடிப்பில் மட்டுமல்ல-உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களையும் தன்னால் ஏற்று நடிக்க முடியும் என்பதை செயல் வடிவில் காட்டினார் நெப்போலியன்.

தொடர்ந்து கதாநாயகனாக பல படங்கள். . . தாமரை, தமிழச்சி, மாமனிதன், பொன்விழா, என் பொண்டாட்டி நல்லவ, ராஜமுத்திரை, முஸ்தபா, சின்னமணி, மணிரத்னம், பகத்சிங், கேப்டன் மகள், எட்டுப்பட்டி ராசா, எதிரும் புதிரும், கிழக்கும் மேற்கும், வனஜா கிரிஜா, கரிசல் காட்டு பூவே, தென்காசி பட்டிணம், வீரண்ணா, ரிமோட். . . . . . . பட்டியல் தொடர்கிறது.

இதற்கிடையில் அரசியல் களத்தில் நெப்போலியனின் பயணம். வில்லிவாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மக்கள் சேவையில் களம் இறங்குகிறார். அதனால் படவுலக பயணத்தில் ஒரு சிறிய இடைவெளி.

அந்த இடைவெளிக்குப் பிறகு படவுலகில் நெப்போலியனுக்கு கிடைத்த இரண்டு அருமையான வாய்ப்புகள்-விருமாண்டி, தசாவதாரம். கமல்ஹாசனின் அந்த இரண்டு படங்களிலும் பேசப்படும் கதாபாத்திரங்கள் நெப்போலியனுக்கு கிடைத்தன. இது தவிர, சரத் குமாருடன் 'ஐயா' விஜய்யுடன் 'போக்கிரி' ஆர்யாவுடன் 'வட்டாரம்' ஆகிய படங்கள். . . . .

இப்போது மீண்டும் அரசியல் களம். பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நெப்போலியன். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவி.

நெப்போலியனின் இரண்டு மகன்களும் தற்போது அமெரிக்காவின் டென்னஸ்ஸியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மனைவியும் அங்குதான் இருக்கிறார். பேசிக் கொண்டிருக்கும்போதே நெப்போலியன் அலைபேசியை என்னிடம் தந்தார். நெப்போலியனின் மனைவி பேசினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் கணவருடன் நான் இருந்ததைப் பார்த்து அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அது குரலிலேயே தெரிந்தது.

நெப்போலியனிடம் 'மீண்டும் நடிக்கலாமே?' என்று கேட்டேன். சிறிது நேரம் யோசித்துவிட்டு நெப்போலியன் சொன்னார்:'நடிக்கலாம். ஆனால், வில்லனாக நடிக்க முடியாது. இப்போதிருக்கும் கதாநாயகர்களிடம் அடி வாங்குகிற மாதிரி நடிக்க முடியாது. கதாநாயகர்களுக்கு இணையான கதாபாத்திரங்கள், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக் கூடிய அருமையான கேரக்டர் ரோல்கள்  கிடைத்தால் நான் நடிக்க தயார்'.

நெப்போலியன் கூறும்போதே, படவுலகில் அவர் மீண்டும் பவனி வரப் போவது உறுதி என்று என் மனதில் பட்டது.

இன்றைய தலைமுறை இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நெப்போலியனைப் போன்ற அனுபவசாலியான, பன்முக திறமை கொண்ட ஒரு சிறந்த நடிகர் நிச்சயம் தேவைதானே!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version