Lekha Books

A+ A A-

என் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த சாவி!

அழியாத கோலங்கள்சுரா (Sura)

என் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த சாவி!

1979ஆம் வருடம் செப்டெம்பர் மாதத்தில்தான் நான் 'சாவி' வார இதழின் உதவி ஆசிரியராக சேர்ந்தேன். நான் சிறிதும் எதிர்பாராமலேயே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. பலரும் பத்திரிகையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், வேலைக்கு முயற்சிக்காமலேயே  ஒருவனுக்கு வேலை கிடைக்கிறது என்றால். . . ?

என் விஷயத்தில் அதுதான் நடந்தது. 'சாவி' வார இதழைச் சொந்தத்தில் ஆரம்பித்து ஆறு இதழ்களை திரு. சாவி அவர்கள் அப்போது கொண்டு வந்திருப்பார். 'வாஷிங்டனில் திருமணம்'வாசித்து சாவி மீது நான் உயர்ந்த மரியாதை கொண்டிருந்தேன். அப்போதே தமிழகத்தில் வெளியாகும் அனைத்து பத்திரிகைகளையும் நான் தொடர்ந்து வாசிப்பேன். அந்த அனுபவங்களை வைத்து நான் திரு. சாவி அவர்களுக்கு ஒரு இன்லேன்ட் லெட்டர் எழுதினேன். அதில் நான் 10 ஐடியாக்களை எழுதியிருந்தேன்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகக் கூடிய பிரபல பத்திரிகைகள் பலவற்றையும் வாசிக்கும் ஒரு வாசகன் என்ற முறையில் நான் எழுதிய கடிதமே அது. நான் எழுதிய இன்லேன்ட் லெட்டரில் தமிழகத்தில் அப்போது வந்து கொண்டிருந்த பத்திரிகைகளில் என்னவெல்லாம் வருகின்றன, என்னவெல்லாம் வராமல் இருக்கின்றன, புதிதாக எதை எதையெல்லாம் பண்ணினால் ஒரு பத்திரிகை வித்தியாசமாக இருக்கும் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.

அந்த கடிதத்தை எழுதி விட்டு கிட்டத்தட்ட அதை நான் மறந்தே விட்டேன். இரண்டு வாரங்களுக்குப் பிறகு திரு. சாவி அவர்களிடமிருந்து எனக்கு 'சாவி' லெட்டர் பேடில் அவரே கைப்பட எழுதிய ஒரு கடிதம் வந்தது. அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு விட்டேன். 'அன்புள்ள திரு. சுரா அவர்களுக்கு, வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. உடன் சென்னை வந்து என்னை சந்திக்க முடியுமா?சில விஷயங்கள் பேசி முடிக்கலாம். அன்புடன், சாவி' -இவைதாம் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள்.

எதற்கு என்னை சாவி சென்னைக்கு அழைத்திருக்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் அப்போது நான் சிறிதும் நினைக்கவில்லை. 5நாட்களுக்குப் பிறகு நான் சென்னை வந்தேன். அமைந்தகரை அருண் ஹோட்டலின் தரைத் தளத்தில் அப்போது 'சாவி'பத்திரிகையின் அலுவலகம் இருந்தது. அந்த இடத்தில்தான் இப்போது 'ஸ்கைவாக்'இருக்கிறது.

நான் சென்று  திரு. சாவி அவர்களை பார்த்தேன். 'சாவி'வார இதழின் உதவி ஆசிரியராக சேருகிறீர்களா?'என்று என்னை பார்த்து கேட்டார் சாவி. என்னால் ஒரு நிமிடம் நம்பவே முடியவில்லை. நடப்பது உண்மையா இல்லாவிட்டால் கனவா என்று கூட நினைத்தேன். 'எப்போது வரலாம் சார்?' என்று நான் கேட்க, 'நீங்கள் நாளைக்கே வேலைக்கு வரலாம்'என்றார் சாவி. நான் அந்த வாரத்திலேயே 'சாவி'வார இதழின் உதவி ஆசிரியராக ஆகிவிட்டேன்.  

நான் வேலை செய்வதையும், கதைகளின் மீது எனக்கு இருந்த அறிவையும், நான் வாசித்துக் கொண்டிருந்த இலக்கிய நூல்களையும் திரு. சாவி பார்த்தார். 10நாட்களில் என்னை அழைத்து அவர்'இனிமேல் கதைகளை என்னிடம் கொண்டு வராதீங்க. வரக் கூடிய கதைகளை நீங்களே செலெக்ட் பண்ணிக்கோங்க. அவற்றுக்கான படங்களையும் எந்தெந்த ஓவியரிடம் வாங்குவது என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதை என்னிடம் கொண்டு வரவே வேண்டாம்.

நகைச்சுவை துணுக்குகள், சிறிய சிறிய தகவல் துணுக்குகள்-இவற்றை மட்டும் என்னிடம் கொண்டு வந்தால் போதும்'என்றார். பல வருடங்கள் ஆனாலும் ஒரு உதவி ஆசிரியருக்கு கிடைக்காத அரிய வாய்ப்பு எனக்கு 10 ஆவது நாளிலேயே கிடைத்தது. உண்மையிலேயே இது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்!அந்தச் சமயத்தில் எனக்கு அங்கு அறிமுகமானவர்தான் திரு. பாலகுமாரன் அவர்கள்.

'சாவி'யில் சில மாதங்கள் பணியாற்றினேன். பிறகு அதிலிருந்து விலகி 'பிலிமாலயா'மாத இதழின் இணை ஆசிரியராக ஆனேன். அந்தச் சமயத்தில் திரு. சாவி அவர்கள் 'திசைகள்' என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். அதன் ஆசிரியர் திரு. மாலன். சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற அதன் வெளியீட்டு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். அதற்கடுத்த நாள் திரு. சாவி அவர்களுக்கு நான் ஒரு வாழ்த்து கடிதம் எழுதினேன். உடனடியாக அவரிடமிருந்து எனக்கு பதில் கடிதம் வந்தது. 'திரு. சுரா அவர்களுக்கு, உங்களின் வாழ்த்து கடிதம் கிடைத்தது. மிகவும் நன்றி. புதிய பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு இதைத் தவிர வேறு தொழில் தெரியாது'என்று எழுதியிருந்தார் திரு. சாவி.

வருடங்கள் கடந்தோடி விட்டன. 35வருடங்கள் எவ்வளவு வேகமாக பறந்தோடியிருக்கின்றன!'சாவி'யில் சேரும்போது என் வயது 23. இப்போது. . . 58. என்னை சென்னைக்கு வரவழைத்து, வேலை கேட்காமலேயே வேலை தந்த அந்த அன்பு தெய்வம் திரு. சாவி அவர்கள் இப்போது உயிருடன் இல்லை. ஆனால், என் உயிர் உள்ள காலம் வரை என் இதயத்திற்குள் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார். சென்னையில் நான் பத்திரிகைத் துறையிலும், இலக்கியத் துறையிலும் சிறிதளவிலாவது ஏதாவது செய்திருக்கிறேன் என்றால் அதற்கான ஆரம்ப வித்தை ஊன்றியவர் திரு. சாவி அவர்கள் என்பதே உண்மை. அந்த பெருமைகளுக்குரிய மூல கர்த்தா அவர்தான். 

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel