Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

தி சாங்க் ஆஃப் ஸ்பேரோஸ்

The Song Of Sparrows

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

தி சாங்க் ஆஃப் ஸ்பேரோஸ் (The Song Of Sparrows)

ஈரானிய திரைப்படம்

2008ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். பல மிகச் சிறந்த திரைப் படங்களை இயக்கி, உலக அளவில் அருமையான ஒரு பெயரைப் பெற்றிருக்கும் Majid Majidi  இயக்கியிருக்கும் படம்.

நெருப்புக் கோழிகள் வளரக் கூடிய ஒரு பண்ணையில் பணி செய்யும் கரீம் என்ற நடுத்தர வயது கொண்ட ஏழை மனிதனைப் பற்றிய கதையே இது.

Majid Majidiயின்  படங்களில் வழக்கமாக இருக்கக் கூடிய யதார்த்தம், மண் வாசனை, இயல்பான நடிப்பு வெளிப்பாடு, வித்தியாசமான கதைக் கரு, மாறுபட்ட கதைக் களம், வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோகங்களையும் உயிரோட்டத்துடன் காட்சிகளின் மூலம் வெளிப்படுத்தக் கூடிய அபார திறமை, சிறிய கதாபாத்திரத்திடமிருந்து கூட ஆச்சரியப்படும் அளவிற்கு திறமையைக் கொண்டு வரும் இயக்குனரின் ஆற்றல் - அனைத்துமே இந்தப் படத்திலும் இருக்கின்றன.

ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்னும் உணர்வே நமக்கு உண்டாகாமல், நெருப்புக் கோழிகள் இருக்கக் கூடிய ஒரு பண்ணையில் பணியாற்றும் ஒரு மனிதனின் சிரமங்கள் நிறைந்த வாழ்க்கையையே நேரில் பார்க்கிறோம் என்று தோன்றக் கூடிய அளவிற்கு ஒரு படம் இருக்கிறது என்றால், அது நூறு சதவிகிதம் அப்படத்தை இயக்கிய இயக்குனரின் முழு வெற்றிதானே!

சரி... அந்த அளவிற்கு சிறப்புத் தன்மைகள் கொண்ட ‘The song of sparrows’  படத்தின் கதைதான் என்ன?

டெஹ்ரானுக்கு வெளியே நெருப்புக்கோழிகள் இருக்கக்கூடிய ஒரு பண்ணை. கிராமப் பகுதியில் மிகவும் அமைதியாக இருக்கக் கூடிய அந்த பண்ணையில் உயரமான கால்களையும் நீளமான கழுத்தையும் வைத்துக் கொண்டு ஒய்யாரமாக நடந்து கொண்டிருக்கும் நெருப்புக் கோழிகளின் சத்தத்தைத் தவிர வேறு எந்த சத்தமும் கேட்காது. அங்குதான் கரீம் பணியாற்றுகிறான். நடுத்தர வயதைக் கொண்ட அவன் மெலிந்த சரீரத்தைக் கொண்டவன். அந்த நெருப்பு கோழிகளைத் தவிர, அவனுக்கு வேறு உலகமே இல்லை.

வேலி போட்ட பண்ணைக்குள் வளரும் நெருப்பு கோழிகளை பிரச்னைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது, அவற்றுக்கு இரை போடுவது, அவற்றை முட்டை போட வைப்பது, அவை முட்டை போட்டால் அவற்றை பத்திரமாக பாதுகாத்து வைப்பது, அடை காக்க வைப்பது, வெளியே வரும் குஞ்சுகளை மிகவும் கவனம் செலுத்தி வளர்ப்பது, தாய் கோழிகளையும் குஞ்சுகளையும் நோய் வராமல் பார்த்துக் கொள்வது, வேலியைத் தாண்டி அவை வெளியே ஓடி விடாமல் எச்சரிக்கையுடன் இருப்பது, வேறு பிராணிகள் எதுவும் சாப்பிட்டு விடாமல், நெருப்புக் கோழிகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது- இவைதான் கரீமின் வேலை. சொல்லப் போனால்- இருபத்து நான்கு மணி நேரமும் அவன் நெருப்புக் கோழிகளைப் பற்றியும், அந்த பண்ணையைப் பற்றியுமே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த பண்ணையை விட்டு சிறிது நேரம் கூட அவன் வெளியே கூட போக முடியாது.

அவனுடைய மனைவி நர்கீஸ். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். தன் மனைவி, பிள்ளைகளுடன் ஒரு சிறிய வீட்டில் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். தன் மனைவியின் மீதும், பிள்ளைகளின் மீதும் அவனுக்கு அளவற்ற அன்பும், பாசமும். இயன்ற வரையில், அவர்களை அவன் சந்தோஷமாக வைத்திருக்கிறான்.

ஒரு நாள் அவன் பண்ணையில் இருந்த போது, சீக்கிரமாக வீட்டிற்கு வரும்படி அவனுக்கு தகவல் வருகிறது. காரணம் - அவனுடைய மூத்த மகள் ஹனியேவின் காதில் பொருத்தும் கேட்கும் கருவி காணாமல் போய் விட்டதுதான். அவன் வீட்டிற்குச் செல்லும்போது, அவனுடைய மகன் ஹுசைனும், பக்கத்து  வீடுகளில் இருக்கும் சிறுவர்களும் அந்த பகுதியில் சாக்கடையைப் போல தேங்கிக் கிடக்கும் நீரில் அந்த கேட்கும் கருவியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்திற்கு வந்ததற்காக தன் மகனையும் மற்ற சிறுவர்களையும் கரீம் சத்தம் போடுகிறான். அதே நேரத்தில்- அவர்களுடன் அவனும் சேர்ந்து அந்த கேட்கும் கருவியைத் தேடுகிறான். அந்தத் தேடலுக்கு மத்தியில், தேங்கிக் கிடக்கும் அந்த குட்டையைச் சுத்தம் செய்து சீராக்கி, அதில் தங்க நிற மீன்களைக் கொண்டு வந்து வளர்த்து பெரிய பணக்காரர்களாக ஆகலாம் என்ற ஆசையை அவனுடைய மகன் ஹுசைனும் மற்ற சிறுவர்களும் வெளியிடுகிறார்கள். அவர்களின் எண்ணத்தைக் காதில் போட்டுக் கொள்ளாத கரீம், அதற்கு எதிராக பேசுகிறான். எனினும், அந்த கேட்கும் கருவி அங்கு கிடைத்து விடுகிறது. ஆனால், அது ஒழுங்காக வேலை செய்யாமல் இருக்கிறது. அவன் மருத்துவமனையில் கொண்டு போய் அதை காட்டுகிறான். அந்த கேட்கும் கருவி கட்டணம் எதுவும் இல்லாமல் இலவசமாக சரி பண்ணி தரப்பட வேண்டுமென்றால், இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் அவன் அதற்காக காத்திருக்க வேண்டும் என்று அந்த மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். அதற்கு முன்பு அது வேண்டும் என்று நினைத்தால், டெஹ்ரானுக்குச் சென்று அதைச் சரி பண்ணுவதே நல்லது என்று அவர்கள் கூறுகிறார்கள். தன்னுடைய மகளின் தேர்வு மிக விரைவில் வர இருப்பதால், அந்த கேட்கும் கருவி சீக்கிரமே சரி பண்ணப்பட்டாக வேண்டும் என்று நினைக்கிறான் கரீம்.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஒருநாள் புதிதாக வந்திருக்கும் நெருப்புக் கோழிகளை அவர்கள் பண்ணைக்குள் வரும்படி செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த ஒரு நெருப்புக் கோழி வெளியே ஓடி விடுகிறது. அது எங்கே போனது என்றே கரீமுக்குத் தெரியவில்லை. அந்த நெருப்புக் கோழி காணாமல் போனதற்கு கரீமின் கவனக் குறைவே காரணம் என்று குற்றம் சாட்டி, அவனை அந்த பண்ணையிலிருந்து வெளியேற்றி விடுகிறார்கள்.

வேலை இல்லாமற் போன கரீம், தன் மகளின் கேட்கும் கருவியைச் சீர் செய்வதற்காக டெஹ்ரானுக்கு வருகிறான். அதைச் சரி செய்ய வேண்டுமென்றால் 350,000 டொமான்கள் வேண்டுமென்று அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள். அப்போது அங்கு பலரும் மோட்டார் சைக்கிள்களைச் சொந்தத்தில் வைத்துக் கொண்டு, அதில் ஆட்களை ஏற்றிக் கொண்டு போய் அவர்கள் விருப்பப்படுகிற இடத்தில் இறக்கி விடும் வேலைகளைச் செய்வதை அவன் பார்க்கிறான். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வாங்கி, அதை ஒரு தொழிலாகவே செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அவன் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வர, அதில் ஒருவன் ஏறி ஒரு இடத்தில் கொண்டு போய் விடும்படி அவனைக் கேட்டுக் கொள்கிறான். கரீமும் அவனை ஏற்றிக் கொண்டு, அவன் சொன்ன இடத்தில் கொண்டு போய் இறக்கி விடுகிறான் அதற்கு அவன் ஒரு தொகையைக் கட்டணமாக தருகிறான்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version