Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

தி இம்பாஸிபில்

The Impossible

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

The Impossible

(ஆங்கிலப் திரைப்படம்)

மீபத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று இது. ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படம். 2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் உண்டான சுனாமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். மரியா, அவளுடைய கணவர் ஹென்ரி, அவர்களுடைய 13 வயது மகன் லூக்காஸ், ஏழரை வயது மகன் தாமஸ், 5 வயது மகன் சைமன் – இவர்கள்தான் படத்தில் வரும் குடும்ப உறுப்பினர்கள்.

இன்பச் சுற்றுலா என்ற முறையில் அவர்கள் குடும்பத்துடன் தாய்லாண்டிற்கு வருகிறார்கள். கடலுக்கு அருகில் ஒரு ரிஸார்ட்டில் தங்கியவாறு பல இடங்களையும் சுற்றி பார்க்கிறார்கள். அப்போது திடீரென்று சுனாமி உண்டாகிறது. கட்டிடங்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. படகுகள் வீசி எறியப்படுகின்றன. கார்கள் வானத்தில் தூக்கி எறியப்படுகின்றன. மனிதர்கள் ஆயிரக் கணக்கில் அடித்துச் செல்லப்படுகின்றனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலம். கடலின் கொந்தளிப்பில் தாய்லாண்டே சின்னாபின்னமாகிறது.

சிறுவன் லூக்காஸ் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறான். நீர் வடிகிறது. ஏதோவொன்றைப் பிடித்து தண்ணீரில் அவன் மிதந்து வருகிறான். அவனைச் சுற்றிலும் புரண்டு கிடக்கும் படகுகள், வேருடன் விழுந்து கிடக்கும் தென்னை மரங்கள், செடிகள், கொடிகள், பெயர்ந்து கிடக்கும் கட்டிடங்கள், செத்துக் கிடக்கும் மனிதர்கள், பிற உயிரினங்கள்... எல்லாவற்றையும் தாண்டி வந்தால், ஒரு இடத்தில் ஒரு தென்னை மரத்தை இறுக பற்றிக் கொண்டு உடல் முழுக்க காயத்துடன், இரத்தம் வழிய, கிழிந்த ஆடையுடன் அவனுடைய தாய் மரியா…

அவர்களைப் பார்த்தவர்கள், அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். மருத்துவமனையில் பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோர்… பெற்றோரைப் பிரிந்த குழந்தைகள், எல்லோரையும் இழந்து அனாதை ஆனவர்கள் என்று பலவிதத்தில் மக்கள்… படுக்க இடம் இல்லாத அளவிற்கு மருத்துவமனையில் நெருக்கடி… யாரைப் பார்த்தாலும் யாரையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனையில் தன் அன்னையின் படுக்கைக்கு அருகில் இருந்த லூக்காஸ், தாய் கூறினாள் என்பதற்காக அங்கிருந்த மற்றவர்களுக்கு உதவி செய்ய செல்கிறான். அந்த நேரத்தில் ஆள் மாறாட்டத்தால், மரியாவை வேறு எங்கோ கொண்டு சென்று விடுகிறார்கள். ஏற்கெனவே இறந்து போய்விட்ட ஒரு பெண்ணை மரியா என்று அங்கிருந்த குறிப்பில் எழுதி விடுகிறார்கள். அதைத் தொடர்ந்து குடும்பத்தை விட்டு பிரிந்த குழந்தைகள் இருக்கும் இடத்திற்கு லூக்காஸை அழைத்துச் செல்கின்றனர். காயம் உண்டான மார்புப் பகுதியில் மரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பல சோதனைகளுக்கும், போராட்டங்களும், தடைகளுக்கும் பிறகு தன் தாயுடன் மீண்டும் இணைகிறான் லூக்காஸ்.

இதற்கிடையில் ஹென்ரியும், சிறுவர்கள் தாமஸும் சைமனும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். பிள்ளைகள் பத்திரமாக இருக்கட்டும் என்பதற்காக, ஒரு வாகனத்தில் அவர்களை ஏற்றி ஒரு இடத்திற்கு அனுப்பி வைக்கிறார் ஹென்ரி. பின்னர் அந்த இடத்திற்கு அவர் வந்தால், அங்கு சிறுவர்களைக் காணோம். அவர்களை வேறு எங்கோ கொண்டு போய் விட்டார்கள். தொலைத் தொடர்பு வசதிகள் சிறிது கூட செயல்பட முடியாத நிலை… அந்த நேரத்தில் ஜெர்மனியிலிருந்து சுற்றுலா பயணியாக வந்த கார்ல் என்ற ஒரு மனிதரை ஹென்ரி சந்திக்கிறார். தன் மனைவியையும், மூன்று மகன்களையும் ஹென்ரி தவிப்புடன் தேடிக் கொண்டிருக்க, சுனாமியால் பிரிக்கப்பட்ட தன் குடும்பத்தை அந்த மனிதர் தேடிக் கொண்டிருக்கிறார். ஹென்ரியுடன் சேர்ந்து அவரும் தேடுகிறார்.

எல்லா இடங்களிலும் தேடி விட்டு, இறுதியாக மருத்துவமனைக்கு ஹென்ரியும், கார்லும் வந்து சேர்கிறார்கள். அதே மருத்துவமனையில்தான் மரியாவும், லூக்காஸும் இருக்கிறார்கள். எனினும், உலகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் மக்கள் பதட்டத்துடன் இங்குமங்குமாக நடந்து கொண்டும், படுத்துக் கொண்டும், கதறிக் கொண்டும், முனகிக் கொண்டும், அமர்ந்து கொண்டும் இருக்கும் அந்த இடத்தில்தான் யாரை தேடிக் கொண்டிருக்கிறோமோ, அவர்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் ஒரு நீண்ட தேடல்….

அந்த நேரத்தில் தாமஸ்ஸையும் சைமனையும் ஏற்றிச் சென்ற வாகனம் வெளியே வந்து நிற்கிறது. 5 வயது சைமன், வெளியே நடந்து சென்று கொண்டிருக்கும் தன் அண்ணன் லூக்காஸைப் பார்க்கிறான். அடுத்த நிமிடம் அவன் தன் அண்ணனைத் தேடி ஓடி வருகிறான் (அந்த சின்னப் பையன் லூக்காஸைத் தேடி ஓடும் ஓட்டம் இருக்கிறதே… அந்த காட்சி இப்போது கூட என் மனதில் அப்படியே பசுமையாக நின்று கொண்டிருக்கிறது). பையன்கள் ஒன்று சேர்கிறார்கள். சிறிது நேரத்தில் தந்தையும். பிறகு என்ன? பல போராட்டங்களுக்குப் பிறகு, குடும்பம் ஒன்று சேர்கிறது. ஒருவரையொருவர் பாசத்துடன் கட்டிப் பிடித்துக் கொண்டு சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கின்றனர். இது ஒரு புறமிருக்க, தன் குடும்பத்தை இழந்த கார்ல், சோகத்துடன் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

மீண்டும் இணைந்த அந்த குடும்பத்தைச் சுமந்து கொண்டு விமானம் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது.

மரியாவாக Naomi Watts அற்புதமாக நடித்திருந்தார். பிள்ளைகளைத் தேடும் பாசம் மிக்க தந்தையாக Ewan McGregor. வியக்கத்தக்க நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் 13 வயது சிறுவன் லூக்காஸாக Tom Holland.

J.A.Bayona இயக்கிய The Impossible திரைப்படம் 2012 இல் திரைக்கு வந்தது. இந்தப் படத்தைப் பார்க்கும்போது நம் குடும்பத்தை விட்டு நாம் பிரிந்து, மீண்டும் இணைகிறோம் என்பதைப் போன்ற ஒரு உணர்வு நம் எல்லோருக்கும் உண்டாகும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version