Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

வாழ்க்கைப் போட்டி

வாழ்க்கைப் போட்டி
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா

மூன்று பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் மனைவியிடம் ஒப்படைத்து விட்டு அவன் இறுதி மூச்சை விட்டான். மூத்த பெண்ணுக்கு திருமண வயது வந்து விட்டது. அவளை ஒருவனுடன் சேர்த்து வைத்திருந்தால், ஒரு ஆணின் துணை கிடைத்திருக்கும். வாழ்வதற்கான வழியும் இல்லை. இருபது செண்ட் கொண்ட ஒரு நிலமும், ஒரு சிறிய வீடும்தான் மொத்த சொத்தே.

குட்டி அம்மா தன் கணவனின் முகத்தைப் பார்த்தவாறு கேட்டாள்:

'நான் என்ன செய்யணும்?'

அந்த உதடுகள் அசையவில்லை. இனி எந்தச் சமயத்திலும் அந்த உதடுகள் அசையாது.

தாயும் மக்களும் சேர்ந்து கயிறு பிரித்தும், தென்னை மட்டையை உரித்தும் நாட்களை ஓட்டினார்கள். சுகுமாரனின் படிப்பை நிறுத்தினார்கள். கட்டணம் இல்லாத வகுப்பில் இருந்ததால், சரோஜினியும் பத்மாக்ஷியும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலும் பட்டினிதான். எப்படியாவது மூத்த மகள் கார்த்தியாயனியை யாராவது ஒருவனுடன் அனுப்பி வைக்க வேண்டுமென்ற ஆசை குட்டி அம்மாவிற்கு இருந்தது. பலரிடமும் அவள் கூறினாள். ஹரிப்பாட்டைச் சேர்ந்த கோவிந்தன் ஆசான் என்ற ஒருவன் அந்த கரையில் பள்ளிக் கூடம் நடத்தி, அங்கேயே தங்கிக் கொண்டிருந்தான். அவன் ஒரு ஆளை அழைத்துக் கொண்டு வந்தான். பெயர் -- பப்பு நாயர். நன்கு வேலை செய்யக் கூடியவன். எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லை. எப்படியும் பெண்ணைக் காப்பாற்றுவான். ஆனால், பெண்ணுக்குத் தர வேண்டிய வரதட்சணையைத் தர வேண்டும்.

அப்படி ஆனாலும் பரவாயில்லை என்று குட்டி அம்மா தீர்மானித்தாள். ஆனால், திருமணச் செலவையும் சேர்த்து இருநூறு ரூபாய் வேண்டும். எங்கிருந்து தயார் பண்ணுவது? வடக்குப் பக்கத்திலிருக்கும் வீட்டிலுள்ள அவுஸேப்பு மாப்பிளய்க்கு இரக்கம் தோன்றி, நிலத்தையும் பணயமாக எழுதி வாங்கிக் கொண்டு 200 ரூபாய் கொடுத்தார். அதைத் தொடர்ந்து கார்த்தியாயனியின் திருமணம் நடந்தது.

கோவிந்தன் ஆசான் கூறியது சரிதான். பப்பு நாயர் அந்த பணத்தை வைத்து தனக்கு பாகமாக கிடைத்த ஒரு செண்ட் இடத்தில் ஒரு வீட்டைக் கட்டினான். அங்கு அவன் தன் மனைவியுடன் வசித்தான். குட்டி அம்மா, ஹரிப்பாட்டிலிருக்கும் தன் மகளின் வீட்டிற்குச் சென்றாள். உண்மையிலேயே அவளுக்கு நிம்மதி உண்டானது. பப்பு நாயர் அன்பு நிறைந்தவனாக இருந்தான். பொறுப்புணர்வு கொண்டவனாக இருந்தான். தினமும் வேலைக்குச் செல்வான். ஒரு காசைக் கூட கண்டபடிக்கு செலவு செய்ய மாட்டான். கார்த்தியாயனி சந்தோஷமாக இருந்தாள். குட்டி அம்மா தெய்வத்திற்கு நன்றி சொன்னாள். மூத்த மகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதேயில்லை. எல்லாவற்றையும் தாண்டி அவர்களுக்கிடையே இருந்த புரிதல் அவளை மகிழ்ச்சியடையச் செய்தது.

மீண்டும் குட்டி அம்மா இருக்கிறது என்றும், இல்லை என்றும் நாட்களைத் தள்ளி நகர்த்திக் கொண்டிருந்தாள். சுகுமாரனுக்கு வயதாகி விட்டாலும், அவன் ஒரு வேலைக்கும் போகாமல் இருந்தான். தாய்க்கும் மகனுக்குமிடையே தினமும் சண்டைதான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள் அவன் காணாமல் போய் விட்டான்.

செய்தி தெரிந்த பப்பு நாயர் கொஞ்சம் விசாரணைகளையெல்லாம் நடத்திப் பார்த்தான். ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

செலவு போக மீதமிருப்பதை கார்த்தியாயனி தன் தாய்க்குத் தருவாள். சரோஜினிக்கும் பத்மாக்ஷிக்கும் அணிய வேண்டியவற்றை அவள் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த வகையில் குட்டி அம்மா நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.

சரோஜினி கட்டணம் செலுத்த வேண்டிய வகுப்பிற்குச் சென்றாள். படிப்பை நிறுத்தி விடக் கூடாது என்று கார்த்தியாயனி கூறினாள். கல்விக் கட்டணத்தை அவள்தான் கொடுத்தாள்.

இப்படியே நான்கைந்து வருடங்கள் கடந்தன. ஒருநாள் ஒரு கடிதமும் ஒரு மணியார்டரும் அந்த வீட்டிற்கு வந்தன. சுகுமாரன் அனுப்பியவைதான். அவன் கல்கத்தாவில் இருக்கிறான். பிள்ளைகளின் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்று அவன் குறிப்பாக கூறியிருந்தான். அனுப்பிய பணத்தை வைத்து கடனை மீட்க வேண்டுமென்றும் கூறியிருந்தான்.

பிறகு மாதந்தோறும் பணம் வந்தது.

அந்த வகையில் பட்டினி விலகி, வாழ்க்கை சற்று சீரானது.

கார்த்தியாயனிக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. அவளுக்கு சிரமங்கள் அதிகரித்துக் கொண்டு வந்தன. சுகுமாரன் அனுப்பிய பணம் குட்டி அம்மாவின் கையில் இருக்கிறது என்ற விஷயம் தெரிந்து, பப்பு நாயர் ஒரு ஐம்பது ரூபாய் கேட்டான். ஒரு பத்து பறை நிலம் வாங்க வேண்டும் என்பதற்காக குட்டி அம்மா பணத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். அதிலிருந்து எடுப்பதற்கு அவளுக்கு மனம் வரவில்லை. அதைத் தொடர்ந்து மாமியாருக்கும் மருமகனுக்குமிடையே ஒருவரையொருவர் கூறி, விரிசல் உண்டானது.

நல்ல ஒரு வீட்டைக் கட்ட வேண்டுமென்று சுகுமாரன் எழுதி அனுப்பினான். கொஞ்சம் பணத்தையும் அனுப்பி வைத்தான். நல்ல நிலம் விலைக்கு கிடைப்பதாக இருந்தால், அதற்கான ஏற்பாட்டில் இறங்கினால், விலைக்கு வாங்குவதற்கும் சுகுமாரனிடம் பணம் இருந்தது.

அந்த வகையில் நாகரீகமான ஒரு வீடு உண்டானது. செலவிற்கு நெல் கிடைக்கக் கூடிய நிலம் வந்து சேர்ந்தது. அந்த வீடு வளர்ச்சி அடைந்தது.

சரோஜினி கல்லூரியில் சேர்ந்தாள். பத்மாக்ஷி உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்தாள். குட்டி அம்மா அதிர்ஷ்டசாலிதான்!

அந்த வகையில் ஹரிப்பாட்டு கார்த்தியாயனி அவளுடைய வீட்டில் மூன்று குழந்தைகளுடன் முன்பைப் போலவே வாழ்ந்து கொண்டிருந்தாள். பப்பு நாயர் வேலைக்குப் போனால்தான் அவளால் வாழ முடியும். சுகுமாரனுக்கு ஒரு கடிதம் எழுதினாலென்ன என்று பல வேளைகளிலும் அவள் தன் கணவனிடம் கேட்பதுண்டு. ஆனால், அவனுக்கு அதில் விருப்பமில்லை. அவன் கூறுவான்:

'அவன் பெரியவனாக இருந்தால், அவனுடனே வைத்துக் கொள்ளட்டும்.'

அவ்வப்போது கார்த்தியாயனி வீட்டிற்குச் செல்வாள். அவளுடைய குழந்தைகளின் மீது தங்கைகளுக்கு பெரிய அளவில் வெறுப்பு. அவர்கள் நிறைய சோறு சாப்பிடுகிறார்களாம்... அளவற்ற வெறியாம்... அவர்கள் சுத்தமாகவே இல்லையாம்! ஒருநாள் கார்த்தியாயனியின் மூத்த மகன் குட்டப்பன் சரோஜினியின் மெத்தையைத் தொட்டதற்கு அவனை அவள் அடித்து விட்டாள்.

ஒரு கூலி வேலைக்காரனின் மனைவி அங்கு வருவது என்பது சரோஜினிக்கும் பத்மாக்ஷிக்கும் கவுரவக் குறைவான விஷயமாக இருந்தது.

ஒருநாள் சரோஜினி தன் தாயிடம் கூறினாள்:

'ஏன் அம்மா, அக்கா இப்படி அடிக்கடி வர்றாங்க? ஏதாவது அங்கு கொடுத்தால் போதாதா?'

கார்த்தியாயனிக்கு அது புரிந்து விட்டது. எதுவுமே சாப்பிடாமல் வந்த அன்றே, அவள் கண்ணீருடன் வெளியேறிச் சென்றாள். அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த அன்னையின் கண்களும் நிறைந்தன. அப்படியே பாதையில் திரும்பி அவள் மறைந்தபோது, சரோஜினியின் முகமும் வாடியது.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version