
கோதுமையையும் பஜராவையும் விதைப்பதற்காக, நிலத்தை உழும் வேலைதான் ஆண்களுக்கு. பிறகு, அறுவடை செய்வது வரை எல்லா வேலைகளையும் செய்வது பெண்கள்தாம். பெண்கள் வயலுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஆண்கள் உணவு சமையல் செய்வது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். விவசாய நிலத்தில் வேலை இல்லாதபோது, அடிவாரங்களிலிருந்து புல் அறுத்துக் கொண்டு வரும் வேலை கூட பெண்களுக்குத்தான்...
மற்ற வேலைகளுடன், என்னுடைய சிறிய பூந்தோட்டத்திற்கு நீர் ஊற்றி, வளர்க்கக் கூடிய வேலையும் பச்சுலிக்கு இருந்தது. சாயங்காலம் பாலுடன் வந்தால், வாளியில் நீர் நிறைத்துக் கொண்டு வந்து செடிகளுக்கு ஊற்றி விட்டுத்தான் அவள் திரும்பியே செல்வாள். இதற்கிடையில் அன்றைய சிறப்பு செய்திகள் எல்லாவற்றையும் கூறுவாள். ஒருநாள் எப்போதையும் விட முன் கூட்டியே அவள் ஓடி வந்து சந்தோஷத்துடன் சொன்னாள்:
'பாபு ஷாப், உங்களுக்கு தெரியுமா?'
'என்ன?'
'தீதியின் திருமணம் முடிவு செய்யப்பட்டிருக்கு.'
'ஓ...'
'அடுத்த மாதம்...'
'திருமணத்திற்கு நான் வர வேண்டாமா?'
'உங்களை அழைக்கணும்னு பிதாஜி சொன்னாரு.'
'அப்படின்னா, நான் வருவேன்.'
'பிறகு... கல்யாணத்தைப் பற்றி எதுவும் உங்கக்கிட்ட சொல்லக் கூடாதுன்னு நீதி என்கிட்ட சொன்னாங்க.'
'எதற்கு?'
'தீதிக்கு அதிக வெட்கம்.'
'ஓ...'
'உங்களை தீதி பார்த்திருக்காங்க.'
'எங்கே வச்சு?'
'பாபு ஷாப், நீங்க நடை போறப்போ தீதி ஒளிந்து கொண்டு பார்ப்பாங்க.'
'ம்...'
'தொராஹட்டிதான் தீதியைக் கல்யாணம் பண்ணி அழைத்துக் கொண்டு போகப் போறாரு. நிறைய நிலமும், கால்நடைகளும் இருக்கு. தீதி நல்லா... சந்தோஷமா வாழ்வாங்கன்னு மாதாஜி சொன்னாங்க. தீதி வெட்கப்பட்டு... வெட்கப்பட்டு குனிஞ்சுக்கிட்டே உட்கார்ந்திருந்தாங்க. பக்கத்து வீட்டுல இருக்குற கிம்முலி தீதி கிண்டல் பண்றதுதான் காரணம். திருமணம் முடிந்த பிறகு, அந்த பையனோட ஆளுங்க நீதியை பல்லக்கில் உட்கார வைத்து கொண்டு போவாங்க. அதற்குப் பிறகு புல் அறுப்பதற்கு நான் தனியாகத்தான் போகணும்...'
'இனி... காலம் அதிகம் கடக்காமல், பச்சுலி... உன் கல்யாணமும் நடக்குமே!'
அந்த ஒன்பது வயது நடக்கும் சிறுமி ஒரு நிமிடம் வெட்கப்பட்டுக் கொண்டு, முகத்தைக் குனிய வைத்தவாறு நின்று கொண்டிருந்தாள். பிறகு சொன்னாள்:
'நான் தீதி அளவிற்கு பெரியவளா ஆகுறப்போ...'
'அன்று... பச்சுலி, உன்னையும் தூரத்திலிருந்து கூட்டமாக ஆட்கள் வந்து பல்லக்கில் உட்கார வைத்து கொண்டு போவாங்க. அப்படித்தானே?'
'ம்...'
'அந்த இளைஞன் நல்ல அன்பு வைத்திருக்கும் ஆளாக இருப்பான். அப்படித்தானே?'
'இருக்கலாம்.'
அதற்குப் பிறகு எல்லா நாட்களிலும் திருமணத்தைப் பற்றி மட்டுமே அவள் பேசிக் கொண்டிருப்பாள். இளைஞனை குதிரையின் மீது உட்கார வைத்து, பராத் வந்து சேர்வது இரவு வேளையில்தான். கிராமத்திலிருக்கும் முக்கிய மனிதர்களும், பெரியவர்களும் அங்கு குமுமியிருப்பார்கள். வீட்டின் வாசலில் வைத்து பிதாஜி இளைஞனின் கால்களைக் கழுவுவார். பிறகு... இளைஞன் ஏறி நடப்பதற்காக புதிய பலகையைக் கொண்டு வந்து கொடுப்பார். வெள்ளி ரூபாய், பாத்திரங்கள் அடங்கிய வரதட்சணைப் பொருட்களை முன்னால் கொண்டு வந்து வைப்பார்கள். அப்போது பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து நின்று, நைனிதேவியைப் பற்றிய மங்கள பாடல்களைப் பாடி, அரிசியை வாரி இறைப்பார்கள். வீட்டிற்குள் உண்டாக்கப்பட்ட அக்னி குண்டத்திற்கு முன்னால் அமர்ந்து, மணமகன் தீதியின் கழுத்தில் மாலை அணிவிப்பான். பிறகு... ஆடைகளின் நுனிகளை ஒன்றோடொன்று இணைத்து, அக்னி குண்டத்தைச் சுற்றி வருவார்கள்....
தீதியின் திருமணம் முடிவு செய்யப்பட்ட பிறகு, பச்சுலி தனியாகத்தான் புல் அறுப்பதற்காகச் சென்றாள். ஒரு வாரத்திற்குப் பிறகு, ஒரு நாள் சாயங்காலம் அவள் பாலுடன் வரவில்லை. நன்கு இருட்டும்வரை, நான் அவளுக்காகக் காத்திருந்தேன். அவளும் திருமணம் சம்பந்தப்பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பாள் என்று இறுதியில் முடிவு செய்தேன். மறுநாள், பொழுது புலரும் வேளையில், நான் கண் விழிப்பதற்கு முன்பே யாரோ கதவைத் தட்டி அழைத்தார்கள்:
'பாபுஜீ!'
கதவைத் திறந்தவுடன், பார்த்தது தேவ்சிங்கைத்தான். வழக்கத்திற்கு மாறாக ஏதோவொன்று அவனுடைய கண்களில் பளிச்சென தெரிந்தது. பதைபதைப்புடன் நான் கேட்டேன்:
'என்ன விசேஷம் தேவ்சிங்?'
அவன் ஒரு சிறு குழந்தையைப் போல எனக்கு முன்னால் நின்று கொண்டு அழுதான். அப்போது பார்வையில் பட்டது- ஒரு சிறிய சவ மஞ்சமும், அதைத் தூக்கிக் கொண்டு சாலையில் செல்லும் ஒரு கூட்டம் ஆட்களும்தாம். அவர்கள் உரத்த குரலில் கூறினார்கள்:
'ராம் நாம் சத்ய ஹை
ராம் நாம் சத்ய ஹை.'
அந்த சவ மஞ்சத்தை நோக்கி விரலால் சுட்டிக் காட்டியவாறு தேவ்சிங் மெதுவான குரலில் சொன்னான்:
'பச்சுலி...'
'என்ன?'
தேவ்சிங்குடன் சேர்ந்து நான் அந்த சவ மஞ்சத்திற்குப் பின்னால் ஓடினேன். தேம்பி அழுதவாறு அவன் என்னிடம் நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறினான்-
'காலையில் பால் கொடுத்து விட்டு வந்து, அவள் புல் அறுப்பதற்காகச் சென்றாள். சின்ன பொண்ணை தனியாக அனுப்பக் கூடாதுன்னு நான் அவளோட அம்மாக்கிட்ட பல தடவைகள் திரும்பத் திரும்ப கூறியிருக்கேன்... உயரத்திலிருந்த ஒரு பாறையில் இருந்து கால் வழுகி, கீழே விழுந்துட்டா, பாபுஜி. தகவல் தெரிந்து ஓடிச் சென்றப்போ, சுய உணர்வு போகல. வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வர்றப்போ... அவள்... பாபு ஷாப், உங்களைப் பார்க்கணும்னு சொன்னாள்.'
காகஸ் நதியின் கரையிலிருந்த இடுகாட்டில் சவ மஞ்சத்தை இறக்கியபோது, நான் அவளை இறுதியாக பார்த்தேன். ஒரு வெள்ளைத் துணியைக் கொண்டு போர்த்தியிருந்தார்கள். அந்த முகத்தின் பிரகாசமும், கள்ளங்கபடமற்ற தன்மையும் சிறிது கூட மறைந்திருக்கவில்லை.....
பச்சுலியின் முதல் நினைவு நாளன்று முற்றத்திலிருக்கும் சிறிய பூந்தோட்டத்தில் 'டேலியா' பூத்திருக்கிறது. இந்த பூவைப் போல கள்ளங்கபடமற்ற அந்தச் சிறுமியைப் பற்றி இன்று யாரும் நினைப்பதில்லை. ஞாபகத்தில் வைத்திருக்கும் அளவிற்கு அவள் எதுவும் செய்யவில்லையே! கடுமையான வேலைகளுக்கு மத்தியில், இன்று பச்சுலியின் நினைவு நாள் என்ற விஷயத்தை தேவ்சிங்கே கூட நினைத்துப் பார்க்காமல் இருக்கலாம். எனினும், பச்சுலி, பாபு ஷாப் உன்னை மறக்கவில்லை. நீ கொண்டு வந்து நட்ட டேலியா, இதோ... பூத்திருக்கிறது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook