
அந்த இரண்டு வயதான மனிதர்களுக்குப் பின்னால் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நான் சொன்னேன்: “அது எப்படி நடக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பத்து நாட்களில், இந்த நகரம் ஒரு சுடுகாடாக மாறப் போகிறது. அதற்குப் பிறகு சந்திரவர்மன் இங்கு வந்து தங்கினானா அல்லது ஓடுகிறானா என்பதெல்லாம் முக்கியமான விஷயமே இல்லை.''.
விரோத்வர்மன் சொன்னார்: “நாளையிலிருந்து கோட்டைக்குள் ஏராளமான உணவுப் பொருட்கள் வரப்போகின்றன.''
நான் அவர்களையே ஆச்சரியத்துடன் பார்த்தேன். உணவுப் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பற்றி அவர்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அதை அவர்களிடம் நான் கேட்கவில்லை. நான் சொன்னேன்:
“உணவு கிடைக்கிறது என்ற விஷயம் சந்திரவர்மனிடமிருந்து தப்பிப்பதற்கு எந்த விதத்தில் உதவப் போகிறது?''
விரோத்வர்மன் சொன்னார். “பத்தே நாட்களில் சந்திரவர்மனை ஓடச் செய்வேன் என்று நான்தான் சொன்னேனே?''
“இந்த பத்து நாட்களுக்கு போர் வீரர்களுக்கும் மக்களுக்கும் நீங்கள் என்ன விளக்கத்தைக் கூறப் போகிறீர்கள்? அவர்கள் எதிர்ப்பைக் காட்டினால்....''
விரோத்வர்மன் உரத்த குரலில் கத்தினார். “எதிர்ப்பைக் காட்டுவார்களா? சக்ரயுத்தா, இந்தக் கோட்டையை எதிரி கைப்பற்றி விடுவான் என்று பேசும் வீரர்கள் மரணத்திற்குள் தள்ளப்படுவார்கள். எதிர்த்துப் பேச முயற்சிக்கும் மக்கள் அகழிக்குள் கிடக்கும் முதலைகளுக்கு இரையாக்கப்படுவார்கள். எதிர்ப்பை வெளிப்படுத்துபவன்- நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.'' அவர் சற்று சாந்தமாகி விட்டு, தொடர்ந்து சொன்னார்: “உன்னிடம் யார் கேள்வி கேட்கிறார்களோ, அவர்களைப் பார்த்து நீ போய்க் கூறு- சந்திர வர்மன் வெகுசீக்கிரமே காணாமல் போகப் போகிறான் என்றொரு தகவல் வந்து சேர்ந்திருக்கிறது என்று....''
தகவல்! நான் உண்மையைத் தெரிந்து கொண்டேன். அவர்கள் இருவருக்கும் என்னுடைய மரியாதையைச் செலுத்தி விட்டு, நான் புறப்படுவதற்குத் தயாரானேன். அப்போது என்னைத் திரும்ப அழைத்த அமைச்சர் சொன்னார்: “சக்ரயுத்தா, நீ மனதில் ஏதாவது நினைத்தால், அதை உனக்குள் வைத்துக் கொள்''
“சரி... '' என்றேன் நான். சொல்லும்போதே சிரித்துக் கொண்டேன்.
அன்று நள்ளிரவு நேரத்திற்குப் பிறகு சோமதத்தை என்னைத் தேடி மீண்டும் வந்தாள். முந்தைய இரவு அவள் எந்த இடத்தில் இருந்து தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தாளோ, அந்த இடத்திற்கு நான் ஏற்கெனவே வந்து விட்டேன். அவள் ஒரு விளக்குடன் தன்னுடைய வசீகரிக்கக் கூடிய அழகுடன் எனக்கு முன்னால் வந்து நின்றாள். நான் அவளை என்னுடைய கரங்களுக்குள் பிடித்திழுத்தேன். சோமதத்தை புன்னகைத்துக் கொண்டே எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் என்னுடைய அணைப்பை ஏற்றுக் கொண்டாள்.
ஒரே இரவில் இப்படியொரு மாற்றமா! ஒரு பெண்ணின் இதயம் உண்மையிலேயே புரிந்து கொள்ள முடியாத புதிர்தான். பெண்களிடம் உள்ள இந்த பலவீனத்தை நான் புரிந்து கொள்ளாதவன் இல்லை.
நான் சொன்னேன்: “சோமதத்தை, சந்திரகுப்தன் இல்லாமல் இந்த உலகத்தில் வேறு யாராவது மனிதன் இருக்கிறானா?''
சோமதத்தை தன்னுடைய கைகளை என் கழுத்தைச் சுற்றி போட்டுக்கொண்டே என் காதிற்கு அருகில் வந்து சொன்னாள்: “நான் ஏற்கெனவே அதைத்தான் நினைத்துப் பார்த்தேன். ஆனால், இப்போது எனக்குத் தெரியும்- உன்னைப்போல ஒருவன் இல்லை.''
நான் அவளுடைய அழகால், அவள் ஸ்பரிசம் தந்த உணர்ச்சியால், அவளுடைய நறுமணத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். நினைவில் நிற்காத காலத்திலிருந்து இப்படித்தான் பெண்கள் ஆண்களைத் தங்களுக்குக் கீழே கொண்டு வந்து கொண்டிருக்கிறார்களோ?
நான் சொன்னேன்: “சோமதத்தை, என் காதலி நீ. முழுமையாக நீ எனக்குச் சொந்தமானவளாக ஆகவேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்படி யாருக்கும் தெரியாமல் ரகசியமான சில மணி நேரங்களுக்கு மட்டுமல்ல.''
சோமதத்தை தன்னுடைய தலையை என்னுடைய தோள்களின்மீது வைத்து, ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுச் சொன்னாள்: “ஆனால்... அது எப்படி முடியும்? நான் அரசன் சந்திரகுப்தனுக்குச் சொந்தமானவளாயிற்றே!''
நாங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக சற்று நேரம் இருந்தோம். சோமதத்தையைப் போன்ற பெண்ணின் அழகான ஈர்ப்பு- இன்னும் என்னைப் போல் அவளை முழுமையாக சொந்தமாக ஆக்கிக் கொள்ளாத ஒரு மனிதனுக்கு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரித்துக் கூறுவது மிகவும் சிரமமான விஷயமே. நான் முற்றிலும் அவளுடைய காந்த வளையத்தில் சிக்கிக் கிடந்தேன். அவள் என்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தாள். நான் அவளை எனக்கே சொந்தமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஒரு மனிதனுக்குள் இருக்கும் நெருப்பை எப்போதும் உயிர்ப்புடன் இருக்கச் செய்யக்கூடிய ஏதோவொன்று அவளிடம் இருந்தது. அதற்கு முடிவு என்பதே இல்லாமல் இருந்தது.
அவளைப் போன்ற ஒரு பெண்ணுக்காக எந்தவொரு மனிதனும் தன்னிடமிருக்கும் எல்லாவற்றையும் தியாகம் செய்து விடுவான். தன்னிடம் இருக்கும் உயர்ந்த தீர்மானங்கள் அனைத்தையும் அவன் காற்றில் பறக்கவிட்டு விடுவான். அவனைச் சுற்றியிருக்கும் உலகம் தாறுமாறாகப் போய் விட்டிருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் அவன் சிறிதும் கவலைப்படமாட்டான்.
“நேற்று நீ எதிரிக்கு என்ன தகவலை அனுப்பி விட்டாய்?''
சோமதத்தை தன்னுடைய தலையை என் தோள்களிலிருந்து உயர்த்தி என் மன ஓட்டங்களைப் படிப்பதைப்போல என் கண்களையே கூர்ந்து பார்த்தாள். பிறகு அவள் சொன்னாள்: “நான் கோட்டையைப் பற்றிய சில தகவல்களைத் தெரிவித்தேன்.''
“அது எனக்குத் தெரியும். ஆனால், என்ன தகவல்?''
“கோட்டையில் உணவுப் பொருட்கள் இல்லை என்ற விஷயத்தை அவர்களுக்கு நான் தெரிய வைத்தேன்.''
“நீ தவறான தகவலை அனுப்பிவிட்டிருக்கிறாய். நாளை காலையிலிருந்து கோட்டையில் உணவுத் தட்டுப்பாடு என்பதே இருக்காது.''
சோமதத்தை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள். “உண்மையாகவா? உணவுப் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன?''
“அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஒருவேளை ரகசியமாக இருக்கும் ஒரு சுரங்கப் பாதை கண்டு பிடிக்கப்பட்டிருக்கலாம். அந்த சுரங்கப் பாதையின் வழியாக வெளியிலிருந்து உணவுப் பொருட்கள் கொண்டுவரப் படலாம்.''
“சுரங்கப் பாதை! சுரங்கப் பாதை எங்கே இருக்கிறது?''
“எனக்கு எப்படித் தெரியும்? அப்படி இருக்குமென்று நான் நினைக்கிறேன். கோட்டையில் நாளையிலிருந்து உணவுப் பொருட்களுக்கு எந்தவிதப் பஞ்சமும் இருக்காது என்ற விஷயம் மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். அது மட்டுமல்ல; சந்திரவர்மன் வெகுசீக்கிரமே வெளியே இருந்து கோட்டையைத் தாக்கப் போகிறார். வைஷாலியிலிருந்து ஒரு போர்ப்படை வந்து கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook