
அவற்றில் ஒன்று கருவூலம். இன்னொன்று ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம்... ஒரு கோவில்.... ஒரு அருங்காட்சியகம்.... நடுவில் ஒரு தாமரைக் குளம்... அங்கு ஏராளமான நீர்ப்பறவைகளும் மீன்களும் இருந்தன. அவை எல்லாவற்றுக்கும் பின்னால், அரண்மனையின் உட்பகுதி இருந்தது. அதைச் சுற்றி ஆழமான அகழி. அரண் மனையில் அந்தப் பகுதிக்கு யாராவது செல்ல வேண்டுமென்றால், ஒரு பாலத்தை நடந்து கடந்து செல்ல வேண்டும். பாலத்தின் ஆரம்பப் பகுதி போர்வீரர்களின் தொடர் கண்காணிப்பில் எப்போதும் இருந்த வண்ணம் இருக்கும். வாயிலில், அழகான கலை வேலைப்பாடுகள் அமைந்த தூண்கள் இருந்தன. அந்தப் பகுதியிலிருந்த அனைத்து கட்டடங்களும் மூன்று மாடிகளைக் கொண்டவையாக இருந்தன. முதல் மாடி பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்டி ருந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகள் மரங்களால் அமைக்கப்பட்டிருந்தன.
அந்த அரண்மனை சந்திரகுப்தனால் அமைக்கப்பட்டது அல்ல. அதை மவுரிய வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் கட்டினார்கள். மகத நாட்டை வெற்றி பெற்றபிறகு, சந்திரகுப்தன் அதைக் கைப்பற்றிக் கொண்டான்.
அவன் அதைக் கைப்பற்றியுடன், அரண்மனையின் எந்தப் பகுதி மிகவும் முக்கியமானது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்தான்- அரசனும் அரசியும் மட்டுமே இருக்கக் கூடிய- யாருக்குமே தெரியாத ரகசிய இடத்தை! ஆனால், அவனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு ரகசியமான அறை. அது மற்ற அறைகளைப்போலவே இருக்கும். ஆனால், அதன் சுவர்களிலும் மேற்கூரையிலும் நிறைய கதவுகள் இருந்தன. அவை கீழே இருக்கும் சுரங்கப் பாதைகளில் போய் முடிந்தன. அந்த சுரங்கப் பாதைகள் பெரும்பாலும் அரண்மனைக்கு வெளியே போய் முடிந்தன. ஆபத்து வரும் காலங்களில், கோட்டைக்குள்ளிருந்து தப்பித்துச் செல்வதற்கு அந்த சுரங்கப் பாதைகள்தான் பயன்படுத்தப்பட்டன. ஒரு அரண்மனையின் மிக முக்கியமான பகுதியாக அது இருந்தது. அரசனுக்கும் அரசிக்கும் மட்டுமே அவை எங்கெங்கு சென்று முடிவடைகின்றன என்ற விஷயம் தெரிந்திருக்கும். தான் மரணமடைவதற்கு முன்னால், அந்த ரகசியத்தை அரசன் தன்னுடைய மகனிடம் கூறுவான். அந்த அரசனுக்குப் பின்னால், ஆட்சிக்கு வரக்கூடியவன் யாரோ, அவனிடம்....
முந்தைய நாள் இரவு நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகு நான் மறுநாள் காலையில், அந்த அரண்மனைக்குள் ரகசியமான உள் நோக்கத்துடன் வந்தேன். அரசவை நிறைய மனிதர்களால் நிறைந் திருந்தது. எல்லாரும் அங்கு இருந்தார்கள்- அமைச்சர்கள், உறுப்பினர்கள், படைத் தளபதிகள், வர்த்தகர்கள்.... அனைவரும் மிகவும் கவலையில் மூழ்கியவர்களாகவும் ஆவேசம் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். அறை குரல்களால் நிறைந்திருந்தது. நடுப்பகுதியில் சந்திரகுப்தன் தன்னுடைய பொன்னால் அமைக்கப்பட்ட சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவனைச் சுற்றி நடைபெறும் விஷயங்களுக்கு, முற்றிலும் சம்பந்தமே இல்லாதவனைபோல அவன் காணப்பட்டான். நான் உள்ளே நுழைந்தவுடன், அவன் ஆர்வமே இல்லாமல் என்னைப் பார்த்தான். நான் போலியான மரியாதையுடன் வணக்கம் சொன்னேன். அவன் சந்தோஷமே இல்லாமல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். "சந்திரகுப்தா, எனக்கு இந்த விஷயம் தெரிந்தால்!'
நான் அரசவையைச் சுற்றி நடக்க ஆரம்பித்து, அரசனின் நண்பனைப் பார்த்தேன். அரசனுக்கு மிகவும் அருகில் இருந்து கொண்டு, அவனுடைய தேவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டியது அவனுடைய பொறுப்பு. அவனுடன் எனக்கு எப்படியோ நெருங்கிய நட்பு இருந்தது. கடந்த காலத்தில் அவனிடமிருந்து பல ரகசிய தகவல்களையும் நான் கறந்திருக்கிறேன் நான் அவனிடம் கேட்டேன்: “பல்லவா, என்ன செய்தி?''
பல்லவன் சொன்னான்: “புதிதாக எதுவுமில்லை. முக்கியமான அறையிலிருந்து வெளியே செல்லும் ரகசிய சுரங்கப் பாதைகள் எங்கே இருக்கின்றன என்ற விஷயம் தெரிந்திருந்தால், கடவுளால் கைவிடப்பட்ட இந்த நாட்டை விட்டு நிரந்தரமாக தான் போய்விடப் போவதாக மன்னர் கூறிக் கொண்டிருந்தார்.''
நான் கேட்டேன்: “ஏன் இந்த வெறுப்பு?''
பல்லவன் கண்களைச் சிமிட்டிக் கொண்டே சொன்னான்: “எல்லா விஷயங்களிலும் அவருக்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது என்று இதற்கு அர்த்தம் இல்லை. சரி... இருக்கட்டும்... நீண்ட நாட்களாகவே உன்னை நான் பார்க்கவில்லையே! நீ எங்கே போயிருந்தாய்?''
நான் சொன்னேன்: “நான் தொடர்ந்து கவுதம் துவாரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்.
அதனால், எனக்கு நேரமே இல்லாமல் போய்விட்டது. படைத் தலைவர் விரோத் வர்மன் எங்கே?''
பல்லவன் சொன்னான்: “அவர் மேலே இருக்கிறார்... இன்னொரு அமைச்சருடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார்.''
“நானும்... அவருடன் பேச விரும்புகிறேன்.'' இதைக் கூறிக் கொண்டே நான் இரண்டாவது மாடிக்கு படிகளில் ஏறிச் சென்றேன்.
விரோத் வர்மன் தனியாக இருந்த ஒரு அறையில் அமைச்சருடன் அமைதியாக உரையாடிக் கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன், அவர்கள் கேள்வி தொனிக்க என்னைப் பார்த்தார்கள். நான் எந்தவித தயக்கமும் இல்லாமல் கேட்டேன். “இந்த நிலை எவ்வளவு நாட்கள் நீடித்திருக்கும்? கோட்டைக் குள் உணவு, நீர் எதுவுமே இல்லை. எல்லாமே மிகவும் விலை மதிப்புள்ளதாக ஆகிவிட்டது. பசியின் கொடுமையில் சிக்கி, மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதைவிட, போர்க்களத்தில் இறப்பது எவ்வளவோ மேல். ஆனால், எதிரியிடம் சண்டை போடுவதற்கான எந்த முயற்சியும் நடந்ததாகத் தெரியவில்லை. கோட்டையின் கதவுகளை மூடிக் கொண்டு இருந்து விட்டால் போதுமா? மக்கள் அதைத்தான் பேசிக் கொள்கிறார்கள். போர் வீரர்களும், காவலாளிகளும்கூட சந்தோஷமில்லாமல் இருக்கிறார்கள்.''
“அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?''
நான் சொன்னேன்: “நேற்று மாலையில் நான் சந்தாபால் என்ற இடத்தில் எல்லாரும் குழுமியிருக்கும் ஒரு இடத்திற்குச் சென்றேன். காலி வயிறுகளை வைத்துக் கொண்டு மிகப்பெரிய போர்ப்படையை வைத்திருக்கும் சந்திரவர்மனுடன் மோதுவது என்பதே பிரயோஜனமில்லாத ஒரு காரியமென்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். ஒருநாள் அவனுடைய போர்ப்படை கோட்டையைக் கைப்பற்றப் போவது உறுதி என்று கூறினார்கள். அதனால், அவனை நிறுத்தி வைக்க முயற்சிப்பதைவிட, உள்ளே அவனை நுழைய அனுமதிப்பதுதான் சிறந்தது என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்படிச் செய்தால், அந்தப் பகைவன் நம்மிடம் கருணை மனம் கொண்டாவது நடப்பான் என்று அவர்கள் கூறிக்கொண்டார்கள்.''
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். விரோத் வர்மன் சொன்னார்: “சந்திரவர்மன் பாடலிபுத்திரத்தை கைப்பற்றப் போவதில்லை. அவன் தன்னுடைய வெற்றியின் இறுதி நிலையை இங்கு அடைந்திருக்கிறான்.''
“ஆனால்....''
விரோத் வர்மன் என்னைத் தடுத்தார் : “இங்கு ஆனால் அது இதுவெல்லாம் தேவையில்லை. இன்னும் பத்தே நாட்களுக்குள், அவன் தன்னுடைய வாலை தன் கால்களுக்குள் சொருகிக் கொண்டு ஓடப் போகிறான். நீ பின்னால் போக ஆசைப்பட்டால்,
அவனைப் பின்பற்றி ஓடு...!''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook