
பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று என் உடலில் வந்து மோதிக் கொண்டிருந்தது. ஒரு சிறிய, மறைந்து கொண்டிருந்த நிலவு கிழக்கு திசை வானத்தில் தெரிந்தது. நான் சொன்னேன்: “சிறிதும் தாமதிக்க வேண்டாம். இரவு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இப்போதே உன்னுடைய செய்தியை அனுப்பு..''
சோமதத்தை கோட்டையின் மேற்பகுதியில் தன்னுடைய விளக்குடன் நின்றிருந்தாள். முன்னால் நீட்டப்பட்ட கையில் விளக்குடன் நின்று, ஒரு இரவுப் பறவையைப்போல ஒரு குரலை எழுப்பினாள். ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும்! கோட்டையின் எதிர் திசையிலிருந்து அதேபோன்ற ஒரு குரல் ஒலிப்பதை நான் கேட்டேன். தொடர்ந்து அவள் ஒரு ஆலயத்தின் பெண் துறவியைப்போல, விளக்கை மெதுவாக ஆட்டினாள். அவளுடைய முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது. அவளுடைய கண்கள் மிகவும் கூர்மையாக இருந்தன. அவள் எல்லாவற்றையும் முடித்தபோது, அமைதியான காற்றில் ஒரு குயிலின் சத்தம் கேட்டது. சோமதத்தை தன்னுடைய விளக்கை தரையில் வைத்து விட்டுச் சொன்னாள்: “உனக்கு நாளை ஒரு பதில் கிடைக்கும்''.
காலையில் மக்கள் கண் விழித்தபோது, கோட்டையில் இருந்த கடைகள் முழுவதும் உணவுப் பொருட்களுடன் இருப்பதைப் பார்த்தார்கள். அவை அனைத்தும் எங்கிருந்து வந்தன என்ற விஷயம் யாருக்கும் தெரியாது. அங்குள்ள பழமையான புத்த மடத்திலிருந்து உணவுப் பொருட்கள் எடுத்துக் கொண்டு வரப்படுவதை மட்டும் அவர்கள் பார்த்தார்கள். மக்கள் சந்தோஷத்தில் சத்தம் போட்டுக் கத்தினார்கள். கடைகளை நோக்கி ஓடினார்கள்.
சந்திரகுப்தன் படுக்கையில் படுத்திருக்க, இரண்டு மனிதர்கள் அவனுடைய உடலை எண்ணெய் போட்டுத் தடவி விட்டுக் கொண்டிருந்தார்கள். உரத்த குரலில் சத்தம் வந்ததைக் கேட்ட அவன் பாதி கண்களைத் திறந்தபடி கேட்டான்: “அது என்ன சத்தம்? சந்திரவர்மன் கோட்டைக்குள் நுழைந்து விட்டானோ?” அவனுடைய தனி உதவியாளர் அவனுக்கு அருகில் ஒரு குவளையில் பழச்சாறை வைத்துக் கொண்டு நின்றிருந்தான். அரசன் தான் குளித்து முடித்தவுடன் அந்த பழச் சாறைப் பருகுவான். அவன் சொன்னான்: “இல்லை அரசே! நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. அதனால் அவர்கள் அரசரை வாழ்த்துகிறார்கள்.”
சந்திரகுப்தன் கேட்டான்: “உணவு பொருட்கள் எங்கிருந்து வந்தன?”
அந்த தனி உதவியாளருக்கு அதற்குமேல் அதைப் பற்றி எதுவும் தெரியாது. எனினும், அவன் அரசனுக்கு பதில் கூறியாக வேண்டும். அவன் சொன்னான்: “புத்த மடத்தில் உணவுப் பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன. புத்த துறவிகள் அவற்றை மக்களிடம் வினியோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.”
அரசனுக்கு எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லை. அவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டே சொன்னான்: “நீ இந்த விஷயத்தை அரசிக்கு தெரியப்படுத்து. பட்டினி கிடக்கும் மக்களை நினைத்து அவள் மிகவும் கவலையில் இருந்தாள்.”
அரசன் சோமதத்தையை மனதில் வைத்துக் கொண்டுதான் கூறுகிறான் என்று அவனுடைய உதவியாளர் நினைத்ததால், அரசனின் கிண்டல் கலந்த வார்த்தைகள் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கவில்லை. அவன் அவளுக்கு செய்தியைக் கூறுவதற்காக வெளியேறினான். வெளியே செல்லும் ஒரு பணிப் பெண்ணை அவன் பார்த்தான். அவன் அவளை அழைத்து, அந்தச் செய்தியை சோமதத்தையிடம் கூறும்படிச் சொன்னான். பணிப்பெண் அவளிடம் போய் செய்தியைச் சொன்னாள். சோமதத்தை குளிர்ந்த தரையில் படுத்துக் கொண்டே, ஆழமான சிந்தனையில் மூழ்கியிருந்தாள். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் அவள் எழுந்து உட்கார்ந்தாள். அவளுடைய கண்களைச் சுற்றிலும் கறுப்பு வளையங்கள் விழுந்து விட்டிருந்தன. அவளுடைய முகம் வெளிறிப்போய் காணப்பட்டது. ஆனால், அது அவளுடைய பேரழகைச் சிறிதும் குறைக்கவில்லை.
அவள் பணிப்பெண்ணை அழைத்துச் சொன்னாள்: “நீ புத்த மடத்திற்குச் சென்று, அங்கிருக்கும் அகின்சான் என்ற துறவியைப் பார்த்து என்னை வந்து சந்திக்கும்படி கூறு. தீபன் விதா என்ற புத்தமத பெண் துறவி அவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறு… என்னுடைய அறைகளுக்குள் அவர் வரும்போது வாயில் காப்போர் தடுத்தால், அவர்களிடம் இந்த முத்திரையைக் காட்டும்படி அவரிடம் கூறு.” அவள் தன் கழுத்தில் முத்திரையுடன் தொங்கிக் கொண்டிருந்த சங்கிலியைக் கழற்றி பணிப் பெண்ணிடம் கொடுத்தாள்.
பயந்துபோன பணிப்பெண் சொன்னாள்: “ஆனால்… குமாரதேவிக்கு இந்த விஷயம் தெரிந்தால்….”
கோபமுற்ற சோமதத்தை சொன்னாள்: “என்னைத் தொல்லைப்படுத்துவதை நிறுத்திக் கொள். நான் உன்னிடம் எதைச் செய்யச் சொன்னேனோ, அதைச் செய்.”
வெளியே செல்லும்போது பணிப்பெண் தனக்குத் தானே கூறிக் கொண்டாள். ‘உங்களுக்கு என்ன? உயர்நிலைப் பெண்கள் இருக்கக்கூடிய பகுதிக்குள் துறவி நுழைந்திருக்கிறார் என்ற செய்தி அரசிக்குத் தெரிய வந்தால், அவள் என் தலையையே வெட்டி விடுவாள்.’
பணிப்பெண் அகின்சானுடன் திரும்பி வந்தபோது சோமதத்தை குளித்து முடித்திருந்தாள். துறவி உள்ளே நுழைந்து, தன்னுடைய ஆசனத்தில் போய் உட்கார்ந்து, ஆசீர்வதிப்பதற்காக தன் கையை உயர்த்தினார். தொடர்ந்து அவர் ஏதோ கேட்பதைப் போல அவளைப் பார்த்தார். அவர் வயதான மனிதராக இருந்தார். சவரம் செய்யப்பட்ட தலையுடனும், துறவிகளுக்கென்றே இருக்கக் கூடிய ஆடைகளுடனும் இருந்த அகின்சான் ஒரு தெய்வீகத் தன்மை கொண்ட அமைதி தவழ காணப்பட்டார்.
சோமதத்தை பணிப்பெண்ணை அங்கிருந்து செல்லும்படி கூறினாள். தொடர்ந்து அவள் தன்னுடைய கைகளைக் குவித்து வைத்துக் கொண்டே கூறினாள். “சுவாமி நான் மடத்திற்குச் சென்று அங்கிருக்கும் ஏழைகளுக்கு ரகசியமாக உதவி செய்வதுண்டு. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.”
அகின்சான் சொன்னார்: “கடவுளுக்கும் ஏழைகளுக்கும் யார் ரகசியமான சேவை செய்கிறார்களோ, அவர்களை புத்தர் மேலும் அதிகமாக ஆசீர்வதிப்பார்.”
சோமதத்தை சொன்னாள்: “இன்று இரவு என்னால் மடத்திற்குச் செல்ல முடியவில்லை அதனால், அரசி குமார தேவி பெளத்தர்களின் மீது வெறுப்பு கொண்டவளாக இருக்கிறாள் என்ற உண்மை நன்கு தெரிந்திருந்தும், நான் தைரியமாக உங்களை இங்கு வரவழைத்திருக்கிறேன். நான் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.”
அகின்சான் சொன்னார்: உரிய நேரம் வரும் போது அரசி குமாரதேவிக்கு புத்தர் ஞானத்தை போதிப்பார். உங்களின் கேள்விகள் என்ன?
சோமதத்தை சொன்னாள்: “இன்று கோட்டைக்குள் நிறைய உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா?”
“ஆமாம்… அது உண்மைதான்.”
“அது எப்படி வந்தது?”
துறவி சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார். பிறகு சொன்னார்: “புத்தரின் கருணையால்…”
சோமதத்தை பொறுமையை இழந்து கேட்டாள்: “அது எனக்குத் தெரியும். ஆனால், எது எந்த வழியின் மூலம் வந்தது?”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook