Category: ஆரோக்கியம் Published Date Written by சுரா Hits: 4897
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
2005-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ மாத இதழை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. வாயில் இருக்கும் பற்களுக்கும் இதயத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை அதில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரை தெளிவாகச் சுட்டிக்காட்டியது. பற்களில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களால், பற்கள் பாதிக்கப்பட்டு வலுவிழந்து விழுகின்றன. ஈறு வீங்கி, ரத்தம் வர ஆரம்பிக்கிறது. குறிப்பாக பல் துலக்கும்போது, ரத்தம் வந்துகொண்டிருக்கும்.
இப்படி, வாயில் உண்டாகும் 400 வகையான பாக்டீரியாக்கள், பற்களுக்கிடையே இருக்கும் சிறுசிறு குழிகளுக்குள் போய் தங்கிவிடுகின்றன. எட்டிலிருந்து பன்னிரண்டு வாரங்கள் வரை அந்தக் குழிகளுக்குள் இருந்துகொண்டே பெரிதாக வளருகின்றன. வளர்ந்த பாக்டீரியாக்களும் அவை வெளியிடும் நச்சுத்தன்மை கொண்ட திரவங்களும் ரத்த ஓட்டத்துக்குள் புகுந்து, ரத்தக் குழாய்களில் தடுப்பு உண்டாக்குகின்றன. இதனால், இதயம் பாதிப்புக்கு உள்ளாகி, மாரடைப்பு ஏற்பட இந்தப் பாக்டீரியாக்கள் காரணமாக இருக்கின்றன.
அதேபோல, இந்தப் பாக்டீரியாக்கள் சுவாசக் குழாயில் நுழைந்து, நிமோனியாவை உண்டாக்குகின்றன. வாயில் தங்கி, வளரும் பாக்டீரியாக்களால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்புக்கு ஆளாகி, சில நேரங்களில் குறைப்பிரசவம் ஆவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த அல்பாமா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில், நல்ல நிலையில் இருக்கும் பெண்களைவிட பற்களில் நோய் கொண்டிருக்கும் பெண்களுக்கு அதிக அளவில் குறைப் பிரசவங்களும், பிறக்கும் குழந்தையின் எடை குறைந்து இருப்பதும் தெரியவந்திருக்கிறது.