Category: சினிமா Published Date Written by சுரா Hits: 4509
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
பியாண்ட் தி நெக்ஸ்ட் மவுண்டன்- Beyond the Next Mountain
(அமெரிக்க திரைப்படம்)
2004ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம் 'Beyond the Next Mountain'. 97 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படத்தை இயக்கியவர்கள் Rolf Forsberg, James F.Collier. திரைக்கதையை எழுதியவர் Rolf Forsberg.
இது ஒரு உண்மை கதை.
வரலாற்றில் இடம் பெற்ற Dr.Rochunga Pudaite என்ற மாமனிதரின் வாழ்க்கைக் கதையே இது. இந்தியாவின் மலைப் பகுதியான மணிப்பூரில் உள்ள Senuon என்ற குக்கிராமத்தில் பிறந்த அவர் தன்னுடைய Hmar என்ற மலை வாழ் மக்கள் பேசும் மொழிக்கு பைபிளை மொழி பெயர்த்து, அந்த மக்கள் அனைவரும் அதை வாசிக்கும்படி செய்தார். அது தவிர, 'Bibles for the world' என்ற அமைப்பின் தலைவராக இருந்து, உலகமெங்கும் இருக்கும் 108 நாடுகளுக்கு 15 மில்லியன் 'புதிய ஏற்பாடு' பிரதிகளை இலவசமாக மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து சாதனை புரிந்தார். பல நூல்களையும் எழுதினார்.
உலகம் முழுவதும் பயணம் செய்து பைபிளின் கருத்துக்களைச் சொற்பொழிவாற்றினார். 100 நாடுகளுக்கு இரண்டு மில்லியன் மைல்கள் பயணித்திருக்கிறார். அவருடைய தலைமையின் கீழ் மணிப்பூர், மிஸோரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஒரு கல்லூரி, 5 உயர் நிலைப் பள்ளிக் கூடங்கள், 25 கிராமப் பள்ளிகள் நிறுவப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
2002ஆம் ஆண்டில் 'Operation Dalit Indians' என்ற அமைப்பை நிறுவி, டில்லியில் அதன் கீழ் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் கற்பதற்காக 5 கல்விக் கூடங்களை ஆரம்பித்தார்.
அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற அவர், மதம் சம்பந்தப்பட்ட கல்வியை ஸ்காட்லேண்டிலும், அமெரிக்காவில் உள்ள Wheaton Collegeஇலும் பயின்றார். பின்னர் Illinois Universityயில் கல்வியில் Master of Science பட்டம் பெற்றார்.
1976ஆம் ஆண்டில் Ohioவில் உள்ள Malone College, அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 2000ஆம் வருடம் Dallas Baptist University அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது.
அமெரிக்காவின் 'Who's who' நூலில் அவருடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது. 'வாழ்நாளில் சாதனைகள் புரிந்த மனிதர்' என்று அவரை Cambridge Univeristy குறிப்பிட்டிருக்கிறது. Billy Graham, மதர் தெரேசா ஆகியோருடன் கிறிஸ்தவ நம்பிக்கையை உலக மக்களிடம் பரப்பியவர் என்று Dr.Rochunga Pudaite இன் பெயரையும் இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.
Colorado மாநிலத்தில் உள்ள 'Colorado Springs' என்ற இடத்தில் தன் மனைவி Mawii உடன், ரோச்சுங்கா புடைட் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு பால், ஜான், மேரி என்ற மூன்று மக்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரப் பிள்ளைகளும்.
இப்போது படத்திற்கு வருவோம்.
'Beyond the Next Mountain' திரைப்படம் 1908இல் ஆரம்பிக்கிறது.
Watkin Roberts என்ற வெள்ளைக்கார இளைஞன் ஒரு அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறான். அவன் ஒரு வேதியியல் விஞ்ஞானி. இந்தியாவின் மணிப்பூரில் உள்ள Hmar பழங்குடி மக்களிடம், பைபிள் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அவன் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறான். தான் வந்திருக்கும் நோக்கத்தை அவன் கூற, அங்கிருந்த அதிகாரி அவனை பயமுறுத்துகிறார். 'இது நடக்காத விஷயம். 1871ஆம் ஆண்டிலேயே தேயிலை தோட்டங்களில் இருந்து 500 வெள்ளைக்காரர்களின் தலைகளைக் கொய்தவர்கள் Hmar பழங்குடி மக்கள். நீ சென்றால் உயிருடன் திரும்பி வர முடியாது' என்கிறார்.
ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு கழுதையின் மீது ஏறி சவாரி செய்தவாறு, அடர்ந்த காட்டின் வழியாக Hmar பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களை நோக்கி வருகிறான். வழியில் நாட்டு துப்பாக்கிகளுடன் அவனைத் தாக்குகின்றனர். அவன் வரும் வழியில் நெருப்பு வைக்கிறார்கள். அதற்குப் பிறகும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அந்த இளைஞன் தன் பயணத்தைத் தொடர்கிறான்.
ஒரு Hmar இனத்தைச் சேர்ந்த சிறுவன் காட்டில் மரங்களுக்கு மத்தியில் புயலென ஓடுகிறான். Watkin Roberts பாடியவாறு கழுதையுடன் நடந்து வருகிறான். Hmar பழங்குடி மக்கள் காட்டப்படுகிறார்கள். அவர்களைப் பார்த்து 'நான் உங்களின் சகோதரன். நான் கடவுளிடமிருந்து சமாதானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். அது முழுவதும் இந்நூலில் கூறப்பட்டிருக்கிறது' என்று கூறும் அவன் பைபிளை வாசிக்கிறான்.
இப்போது - வருடம் 1934. சிறுவன் Rochungaவின் குரல் ஒலிக்கிறது:
'நான் பிறப்பதற்கு முன்பு இங்கு வந்திருந்த ஒரு வெள்ளைக்காரரைப் பற்றி என்னிடம் என் தந்தை கூறியிருக்கிறார். எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் அவரை Mr.Young man என்று அழைத்ததாக கூறினார். அந்த வெள்ளைக்காரர் கூறிய கதைகளால், எங்களுடைய வழிமுறைகள் நிரந்தரமாக மாறிவிட்டன என்பதையும் கூறினார். திரு.Young man இருந்த காலத்தில் என் தந்தை தன் பெயரை ஏசுவிற்கு ஒப்புக் கொடுத்து விட்டார் அப்போது அவருக்கு 15 வயது.
இப்போது நான் அவருடைய மகன். இந்த மலைப் பகுதியில் அவர்தான் கிறிஸ்தவ கருத்துக்களை மக்களிடம் பரப்பிக் கொண்டிருப்பவர். என் தந்தையின் பெயர் Chawnga. எங்களுக்கு மட்டுமல்ல- பல காட்டுவாழ் மிருகங்களுக்கும் காடுதான் வீடு. காடுதான் எங்களுக்கு அடைக்கலமாகவும், பலமாகவும் இருக்கிறது.'
தொடர்ந்து காடுகளுக்குள் புலி, யானை, குரங்குகள் ஆகியவை காட்டப்படுகின்றன,
நடுத்தர வயது கொண்ட Hmar பழங்குடி மனிதன் காட்டப்படுகிறான். அவன்தான் Chawnga. அவனை நோக்கி ஓடி வருகிறான் ஒரு எட்டு வயது சிறுவன். அவன்தான் நம் கதாநாயகன்- ரோச்சுங்கா. மலை வாழ் இன சிறுவர்கள் அணியக் கூடிய ஆடைகளை அவன் அணிந்திருக்கிறான். அவனுடைய தந்தையும்.
அவர்களைச் சுற்றிலும் மலைகள். தூரத்தில் தெரியும் ஒரு மலையைச் சுட்டிக் காட்டும் சிறுவன் 'அந்த மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது அப்பா?' என்று கேட்க, 'அதற்குப் பின்னால் இன்னொரு மலை...' என்கிறான் அந்தத் தந்தை. தொடர்ந்து 'அங்கு Churachandpur என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கு ஒரு சிறிய பள்ளிக் கூடம் இருக்கிறது. நம் கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லை. அங்கு போக வேண்டுமானால், 96 மைல்கள் பயணிக்க வேண்டும்' என்று கூறுகிறான். யானைகளிடமிருந்து எப்படி தப்பித்துச் செல்வது என்பதையும் சொல்லித் தருகிறான்.
தன் தந்தையிடம் விடை பெற்றுக் கொண்டு அந்தச் சிறுவன் அந்த கிராமத்தை விட்டு கிளம்புகிறான். கல்வி கற்பதற்காக அங்கிருந்து கிளம்பிச் செல்லும் முதல் சிறுவனே அவன்தான்.