Category: சினிமா Published Date Written by சுரா Hits: 4445
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
கங்கூபாய் – Gangoobai
(மராத்தி - இந்தி திரைப்படம்)
இ
ந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (National Film Development Corporation) தயாரித்த அருமையான படம் - கங்கூபாய். 2013ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படமிது.
படத்தைப் பார்த்து பல மாதங்கள் கடந்தோடிய பிறகும், இன்னும் என் மனதில் அப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நான் கூறுவதிலிருந்தே, அப்படத்தின் சிறப்பைப் புரிந்து கொள்ளலாம்.
மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி.
நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு ஏழை விதவைப் பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது.
MAMI திரைப்பட விழா, இந்திய திரைப்பட விழா, கெனடாவில் நடைபெற்ற தெற்கு ஆசியன் திரைப்பட விழா, வியட்நாமில் நடைபெற்ற ஹனாய் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் இப்படம் திரையிடப்பட்டு எல்லோரின் ஒருமித்த பாராட்டுக்களைப் பெற்றது.
படத்தின் கதை இது :
மும்பையின் வெளிப் பகுதியில் ஒரு மலைப் பிரதேசத்தில் இருக்கும் சிறிய ஊர் மாத்தெரான். அங்கு ஒரு ஏழைப் பெண் வசிக்கிறாள். அவள்தான் கங்கூபாய். அவளுக்கு திருமணமாகி, கணவன் இறந்து விட்டான். குழந்தை எதுவும் இல்லை. தகரம் வேய்ந்த ஒரு சிறிய வீட்டில் அவள் வசித்துக் கொண்டிருக்கிறாள்.
பல வீடுகளிலும் அவள் வேலை பார்க்கிறாள். சமையல் செய்வது, பாத்திரங்களைக் கழுவுவது, கடைகளில் ஏதாவது பொருட்கள் வாங்கிக் கொண்டு தருவது, பெருக்கிச் சுத்தம் செய்வது, நீர் மொண்டு கொண்டு வந்து தருவது என்று எல்லா வேலைகளையும் செய்யக் கூடியவள் கங்கூபாய்.
எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்யும் கங்கூபாயை எல்லோருக்கும் பிடிக்கும். யார் சொல்லும் வேலையாக இருந்தாலும், அதை முடியாது என்று கூறாமல் சிறப்பாகச் செய்து முடிக்கும் அவளை அனைவரும் விரும்புவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
ஒருநாள் தான் வேலை செய்யும் எஜமானியின் இளம் பெண்ணான மகள் அணிந்திருக்கும் புடவையைப் பார்க்கிறாள் கங்கூபாய். அவ்வளவுதான்- அவள் அசந்து போகிறாள். பாராம்பரிய பார்ஸி முறையில் உருவாக்கப்பட்ட அந்த புடவையில் மலர்களும், பறவைகளும் அசைகின்றன. இப்படியொரு புதுமைப் புடவையை அவள் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. அந்த புடவையை வைத்த கண் வாங்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அந்த புடவையின் விலை என்ன என்று கேட்கிறாள். அதன் விலை ஐம்பதாயிரம் ரூபாய். அதைக் கேட்டு ஆச்சரியத்தில் அவள் வாயைப் பிளக்கிறாள். அதே போன்ற ஒரு புடவையை தான் வாங்கி அணிய வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள். ஆனால், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அவள் எங்கு போவாள்?
அதற்காக தன் ஆசையை அவள் விட்டெறிந்து விடவில்லை. அந்த புடவையை வாங்க வேண்டும் என்பதற்காகவே கடுமையாக உழைத்து, பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்று மனதில் முடிவு செய்கிறாள். முன்பு செய்ததைவிட, அதிகமான வேலைகளைச் செய்கிறாள். மூட்டை தூக்கும் வேலையைக் கூட செய்கிறாள். தான் செய்யும் வேலைகளின் மூலம் கிடைக்கும் சிறிய சிறிய தொகையையும் அவள் பத்திரமாக தன் வீட்டில் ஒரு மர பெட்டியில் சேமித்து வைக்கிறாள்.
அவளுக்கு மிகவும் நெருக்கமான ஒரு வயதான பெண் இருக்கிறாள். அவள் பெயர் மலன். அவளிடம் தன்னுடைய புடவை ஆசையை கங்கூபாய் வெளிப்படுத்துகிறாள். அதைக் கேட்டு `உனக்கு இப்படியொரு விபரீத ஆசையா? பணக்காரர்கள் வீட்டில் அந்தப் புடவையை அணிகிறார்கள் என்றால், அவர்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. நீ அன்றாடம் காய்ச்சி. வீட்டு வேலை செய்தும், எடுபிடி வேலை செய்தும், சிறிய அளவில் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பவள். நீயெல்லாம் இதற்கு ஆசைப்படலாமா?' என்கிறாள் மலன். ஆனால் கங்கூபாயோ `கஷ்டப்பட்டு உழைத்து நான் அந்த புடவையை வாங்கியே தீருவேன். அந்த புடவையை என்றைக்கு வாங்குகிறேனோ, அன்றைக்குத்தான் என் மனதில் முழுமையான அமைதி உண்டாகும்' என்கிறாள். அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் மலன்.
ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், படுப்பதற்கு முன்பு இதுவரை எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதை கங்கூபாய் எண்ணிப் பார்ப்பாள். இப்படியே நாட்கள் கடந்தோடுகின்றன. பல மாதங்களுக்குப் பிறகு அவள் மனதில் நினைத்தபடி 50,000 ரூபாய்களைச் சேர்த்து விடுகிறாள்.
அந்த பணத்தை எடுத்துக் கொண்டு மும்பைக்குக் கிளம்புகிறாள். தன் தோழி மலனிடம் அவள் விடை பெறுகிறாள். `மும்பை மிகப் பெரிய நகரம். கெட்டவர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் அதிகமாக இருப்பார்கள். பெரிய தொகையை எடுத்துக் கொண்டு போகிறாய். எச்சரிக்கையாக இருந்து கொள்' என்கிறாள் மலன். அதற்கு கங்கூபாய் `நான் ஏற்கெனவே ஒரு முறை மும்பைக்குச் சென்றிருக்கிறேன். பத்திரமாக நடந்து கொள்வேன்' என்கிறாள். கையில் ஒரு தோல் பை. அதில்தான் முழு பணமும் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவள் புகை வண்டியில் ஏறுகிறாள். மலன் வழியனுப்பி வைக்கிறாள்.
பரபரப்பான மும்பை நகரம், கங்கூபாய் கையில் தோல் பையுடன், மும்பை ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே வருகிறாள். சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு வாடகைக் காரை நிறுத்துகிறாள். கிராமத்தில் தான் வேலை பார்த்த வீட்டு எஜமானியின் மகள் புடவை வாங்கிய கடையின் விளம்பரம் ஒரு மாத இதழில் பிரசுரமாகியிருக்க, அதை காரின் ஓட்டுநரிடம் காட்டி, அங்கு போகும்படி கூறுகிறாள். புறப்படும் முன்பு மீட்டரைப் போடும்படி கூறுகிறாள்.
அமைதியான ஒரு இடத்தில் இருக்கக் கூடிய ஒரு உயரமான கட்டிடத்திற்கு முன்னால் கார் நிற்கிறது. ஓட்டுநர் ஏமாற்றவில்லை. மீட்டர் கட்டணம் எதுவோ, அதை மட்டுமே அவளிடம் அவன் வாங்குகிறான். கங்கூபாய் கட்டிடத்திற்குள் நுழைகிறாள். ஏதோ பெரிய கடையாக இருக்கும் என்று நினைத்தால், வெறும் வீட்டைப் போல அது இருக்கிறது. ஆள் அரவமே இல்லை. எனினும், மாடிப் படிகளின் மூலம் மேலே செல்கிறாள் கங்கூபாய்.