Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

பேபெல் - Page 2

Babel

தாங்கள் சுட்டதில் அந்த அமெரிக்கப் பெண் இறந்து விட்டாள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மூவரும் தங்களுடைய வீட்டிலிருந்து தப்பித்து ஓட முயற்சிக்கிறார்கள். போகும்போது தங்களுடன் துப்பாக்கியையும் எடுத்துச் செல்கின்றனர். மலைப் பகுதியில் ஏறிச் செல்லும் அவர்களைப் பார்த்து, போலீஸ்காரர்கள் சுடுகிறார்கள். தம்பி போலீஸ்காரர்களால் காலில் சுடப்பட, ஆவேசமான  யூஸுஃப் பதிலுக்குச் சுடுகிறான். அதில் ஒரு போலீஸ்காரர் தோளில் சுடப்படுகிறார். அவரால் நகரக் கூட முடியவில்லை. அவர்களின் தந்தை ஆத்திரமும், கவலையும் அடைய, யூஸுஃப் காவல்துறையின் முன்னால் வந்து நின்று, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒப்புக் கொள்கிறான். தங்கள் எல்லோரையும் மன்னித்துவிடும்படியும், தன் தம்பிக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்க வேண்டுமென்றும் அவன் கேட்டுக் கொள்கிறான். அதற்குப் பிறகு அவர்களின் கதை என்ன என்பது நமக்குக் காட்டப்படவில்லை. 

இப்போது கதை ரிச்சர்ட், சூஸன் ஆகியோரை நோக்கி நகர்கிறது. அந்த தம்பதிகளுக்கிடையே சில பிரச்சினைகள்... கருத்து வேறுபாடுகள்... கவலைகள். அவர்களின் மூன்றாவது மகன் குழந்தைப் பருவத்தில் இறந்துவிட, அவர்கள் அதற்காக ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். சூஸன் பேருந்தில் சுடப்பட, உடனடியாக அருகிலிருக்கும் கிராமத்திற்கு பேருந்தைத் திருப்பும்படி ஓட்டுநருக்கு கட்டளை பிறப்பிக்கிறான் ரிச்சர்ட். `டாஸாரின்' என்ற அந்த குக்கிராமத்தில் எந்தவித மருத்துவ வசதியும் இல்லை. அங்கிருக்கும் ஒரு கால்நடை மருத்துவர் இரத்தம் வெளியே வராமல் சூஸனுக்கு தையல் போடுகிறார். மற்ற பயணிகள் பதைபதைப்புடன் காத்திருக்கிறார்கள். நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கே மீண்டும் தாக்குதல் நடைபெற்று விடுமோ என்று அஞ்சும் பயணிகள், அங்கிருந்த செல்ல துவங்குகின்றனர். ஆனால், சூஸன் தற்போது அவர்களுடன் பயணிக்க முடியாது. அவளுடைய உடல்நிலை அதற்கேற்ற நிலையில் இல்லை. ஆம்புலன்ஸ் வந்து சேரும் வரை, அவர்களை இருக்கும்படி கேட்டுக் கொள்கிறான் ரிச்சர்ட். அங்கிருந்து  ஒரே ஒரு தொலைப்பேசியில் பல முறை தொடர்பு கொண்டும், வாக்குறுதி அளிக்கப்பட்டும், இறுதி வரை ஆம்புலன்ஸ் வரவேயில்லை. ரிச்சர்ட் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, மற்ற பயணிகளுடன் பேருந்து அந்த கிராமத்திலிருந்து கிளம்புகிறது. ரிச்சர்டுக்கு துணையாக இருக்கும் ஒரே உயிர்- பேருந்தில் வழிகாட்டியாக வந்த அன்வர். அமெரிக்காவுக்கும், மொராக்கோவிற்கும் இடையே இருக்கக் கூடிய அரசியல் பிரச்சினைகளால், உடனடி உதவி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனினும், இறுதியாக அமெரிக்க தூதரகத்தின் உதவியால் ஒரு ஹெலிகாப்டர் வந்து சேர்கிறது. அமெரிக்க மருத்துவமனையில் ஐந்து நாட்கள் இருந்த சூஸன் குணமாகி, வீட்டிற்கு வருகிறாள்.

 

ஜப்பான்

 

இப்போது கதை ஜப்பானுக்கு நகர்கிறது. ஜப்பானைச் சேர்ந்த சீக்கோ என்ற இளம்பெண் காட்டப்படுகிறாள். கேட்கும் சக்தியற்ற அவளை எந்த இளைஞனும் கண்டு கொள்வதில்லை. யாராவது தன்னை பார்க்க மாட்டார்களா என்று ஏங்குகிறாள் அவள். அதற்காக உடல் அவயவங்களை வெளிக்காட்டி, இளைஞர்களைச் சுண்டி இழுப்பதற்குக் கூட அவள் முயல்கிறாள்.

அவள் தன்னுடைய தந்தையுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கிறாள். அவளுடைய தாய் மரணமடைந்து விட்டாள். அந்த பாதிப்பிலிருந்து அவள் இன்னும் விடுபடவில்லை. ஒரு நாள் அவள் வீட்டில் தனியே இருக்க, இரு புலனாய்வு அதிகாரிகள் அங்கு வருகின்றனர். தன் தாயின் மரண சம்பவத்தில் தன் தந்தை மீது சந்தேகப்பட்டு விசாரிக்க அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்ட அந்த இளம்பெண், தன் தாய் மாடியிலிருந்து கீழே குதித்தபோது தந்தை தூங்கிக் கொண்டிருந்ததாகவும், தாய் கீழே விழுந்து சாவதை தன் கண்களால் நேரடியாக பார்த்ததாகவும் கூறுகிறாள். அதற்குப் பிறகுதான் அவளுக்கே தெரிகிறது- அவளுடைய தந்தை யாஸுஜிரோ வேட்டையாடும் ஒரு பயணத்தை மொராக்கோவிற்கு மேற்கொண்டதைப் பற்றி விசாரிப்பதற்குத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற உண்மையே. யாஸுஜிரோ வேட்டையாடுவதில் மிகுந்த ஆர்வம்  கொண்டவர். மொராக்கோவிற்கு வேட்டைக்காக பயணம் சென்றிருந்த போது, தனக்கு உதவியாக இருந்த ஹஸன், என்ற மனிதனுக்குப் பரிசாக அவர் ஒரு துப்பாக்கியைத் தருகிறார். அந்த துப்பாக்கிதான் படத்தின் ஆரம்பத்தில் ஹஸன் அப்துல்லாவிற்கு விற்ற துப்பாக்கி.

புலனாய்வு செய்ய வந்தவர்களில் மாமியா என்ற இளைஞனை சீக்கோவிற்கு மிகவும் பிடித்து விடுகிறது. தன் உடலிலிருந்த ஆடைகளை நீக்கி விட்டு, அவனை எப்படியும் அடைய அவள் முயற்சிக்கிறாள். ஆனால், தான் அதற்கெல்லாம் சபலமடையக் கூடியவன் அல்ல என்பதை அவன் நிரூபிக்கிறான். அவளுடைய நிலையை நினைத்து அவன் கவலை கொள்கிறான். அவளை அவன் தேற்ற, அவள் கண்ணீர் விட்டு அழுகிறாள். ஒரு குறிப்பை எழுதி அவனிடம் கொடுக்கும். அவள், அங்கிருந்து சென்ற பிறகுதான் அதை அவன் வாசிக்க வேண்டும் என்கிறாள். தான் துப்பாக்கியைப் பரிசாகக் கொடுத்ததாக  கூறும் யாஸுஜிரோவிடம், மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்ட அவருடைய மனைவியின் மரணத்திற்காக தான் வருத்தப்படுவதாக மாமியா கூற, `என் மனைவி தன் தலையில் சுட்டுக் கொண்டு இறந்து விட்டாள். அந்த உடலை முதலில் பார்த்தவளே சீக்கோதான். இதை நான் போலீஸிடம் பல தடவை கூறி விட்டேன்' என்கிறார்.

சீக்கோ மாடியில் இப்போதும் நிர்வாண நிலையில் நின்று கொண்டிருக்கிறாள். அவளின் தந்தை வீட்டிற்குள் வருகிறார். இருவரும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த வீட்டிலிருந்து கிளம்பிய மாமியா, ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டில் நின்று, சீக்கோ என்ன எழுதியிருக்கிறாள் என்பதை வாசிக்கிறான். அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது நமக்கு காட்டப்படவில்லை. 

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version