Category: சினிமா Published Date Written by சுரா Hits: 4468
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
பேபெல் – Babel
(ஹாலிவுட் திரைப்படம்)
2006
ஆம் ஆண்டில் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம். திரைப்பட விமர்சகர்களாலும், பார்வையாளர்களாலும் இன்று வரை தலையில் வைத்து கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று. Amores Perros, 21 grams ஆகிய படங்களை இயக்கிய Alejandro Gonzalez inarrituதான் இப்படத்தின் இயக்குநர்.
ஒரு படத்திற்கு மிகச் சிறந்த திரைக்கதை அமைப்பது எப்படி என்பதற்கு உதாரணமாக இப்படத்தை கூறலாம்.
'Babel' படத்தின் கதை நான்கு நாடுகளில் நடைபெறுகிறது. நான்கு நாடுகளிலும் வேறு வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்தச் சம்பவங்களில் வருபவர்கள் ஒருவரையொருவர் பார்க்காதவர்கள். ஆனால் கதையுடன் அவர்களுக்கு சம்பந்தம் இருக்கிறது- அவர்களுக்கே தெரியாமல். அதுதான் படத்தின் தனித்துவமே. இப்படியெல்லாம் கூட ஒரு திரைக்கதை அமைக்க முடியுமா என்ற வியப்பு நமக்கு படத்தைப் பார்க்கும்போது உண்டாகும்.
இப்படத்தின் கதை மொராக்கோ, ஜப்பான், அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
மொராக்கோ
மொராக்கோவின் விலகி இருக்கும் ஒரு பழமையான கிராமப் பகுதி. இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் இருக்கின்றன. ஆடுகள் மேய்க்கும் அப்துல்லா என்ற ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதன் ஒரு சக்தி படைத்த துப்பாக்கியை விலைக்கு வாங்கிக் கொண்டு வருகிறான். அவன் விலைக்கு வாங்கியது தன்னுடைய நண்பனான ஹஸன் இப்ராஹிம் என்ற மனிதனிடமிருந்து, தன் ஆடுகளைப் பிடிப்பதற்காக வரும் நரிகளைச் சுடுவதற்காக அவன் அதை வாங்குகிறான்.
அந்த துப்பாக்கியை அவன் தன்னுடைய இரு மகன்களான யூஸுஃப்பிடமும், அஹ்மத்திடமும் தருகிறான். அவர்கள் ஆடுகளை மேய்க்கச் செல்லும்போது தங்களுடன் துப்பாக்கியையும் எடுத்துச் செல்கின்றனர். அந்தச் சகோதரர்கள் ஒற்றுமையுடன் இருந்ததே இல்லை. இளையவன் அஹமத், தன் சகோதரி ஆடை மாற்றுவதை மறைந்து நின்று பார்ப்பதைப் பார்த்த அண்ணன் அவனைக் கண்டிக்கிறான். அந்த துப்பாக்கியின் குண்டு மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும் என்பது தெரிந்த அந்தச் சகோதரர்கள் அதை சோதித்துப் பார்க்க நினைக்கின்றனர். முதலில் மலைப் பகுதியில் இருக்கும் பாறைகளை அவர்கள் சுட்டுப் பார்க்கின்றனர். மலையின் கீழ்ப் பகுதியிலிருக்கும் சாலையில் செல்லும் ஒரு காரை குறி வைக்கின்றனர். பிறகு காருக்கு எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு பேருந்தைக் குறி வைக்கின்றனர். அந்த பேருந்தில் மேற்கு திசை நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணிக்கின்றனர். யூஸுஃப் குறி வைத்த குண்டு பேருந்தின் மீது பாய்கிறது. அதில் பயணம் செய்த சூஸன் ஜோன்ஸ் என்ற பயணி பலமான காயத்திற்கு உள்ளாகிறாள். அமெரிக்காவிலிருக்கும் சாண்டிகோ என்ற ஊரிலிருந்து அவள் விடுமுறையில் தன் கணவன் ரிச்சர்ட் ஜோன்ஸுடன் சுற்றுலா வந்திருக்கிறாள். தாங்கள் எவ்வளவு பெரிய மோசமான காரியத்தைச் செய்து விட்டோம் என்பதைப் புரிந்து கொண்ட அந்த இரு வெகுளித்தனமான சிறுவர்கள் அந்த துப்பாக்கியை அந்த இரவு நேரத்தில் மலையிலேயே ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு, அங்கிருந்து ஓடி தப்பிக்கிறார்கள்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து அமெரிக்க பெண் பேருந்தில் பாதிக்கப்பட்ட சம்பவம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. அமெரிக்கா முழுவதும் இது பேசப்படும் விஷயமாக மாறுகிறது. அது தீவிரவாதிகள் நடத்திய ஒரு பயங்கர செயல் என்றும், உடனடியாக மொராக்கோ அரசாங்கம் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க வேண்டுமென்றும் அமெரிக்க அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.
ஹஸனிடம் ஒரு துப்பாக்கி இருந்தது என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டு மொராக்கோ காவல்துறை, அவனின் வீட்டிற்கு வருகிறது. அவனிடமும், அவனுடைய மனைவியிடமும் கேள்வி கேட்டு போலீஸ் துளைக்கிறது. தனக்கு அந்த துப்பாக்கியை தந்தவர் ஜப்பானைச் சேர்ந்த ஒரு மனிதர் என்றும், சமீபத்தில் அதை அப்துல்லா என்ற தன் நண்பனுக்கு விற்று விட்டேன் என்றும் அவன் கூறுகிறான். விசாராணை நடத்தும் போலீஸ்காரர்களை சாலையில் பார்த்து பயந்தோடும் அந்த இரு சிறுவர்களும் தாங்கள் என்ன செய்து விட்டோம் என்பதை தங்களுடைய தந்தை அப்துல்லாவிடம் ஒப்புக் கொள்கிறார்கள்.