Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

இந்தியன் ருப்பி

indian rupee

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

இந்தியன் ருப்பி

(மலையாள திரைப்படம்)

2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தின் கதாநாயகன் ப்ரித்விராஜ். கதாநாயகி – ரீமா கல்லிங்கள். முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் திலகன். படத்தின் தயாரிப்பாளர்கள்: ப்ரித்வி ராஜ், சந்தோஷ் சிவன்.

ஒரு வித்தியாசமான கதையை இந்தப் படத்திற்கென எழுதியிருந்தார் ரஞ்சித். கதையின் நாயகனான ஜே.பி. என்ற ஜெயப்ரகாஷ் இன்றைய இளைஞர்களின் பிரதிநிதி. வியர்வை வழிய சிரமப்பட்டு உழைக்காமலேயே, மிகப் பெரிய பணக்காரனாக ஆவது எப்படி என்பதைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவன் அவன். கடுமையாக உழைத்து முன்னுக்கு வர முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. மூளையை பயன்படுத்தி, புத்திசாலித்தனத்தைக் கொண்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்று நினைக்கிறான் அவன். அந்த எண்ணத்துடனேயே அவன் தினமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். கோழிக்கோட்டில் சாதாரண நிலையில் நிலத்தை வாங்கி, விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அவனுடைய கனவுகள் நாட்கள் ஆக ஆக பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. பல கோடிகளுக்குச் சொந்தக்காரனாக ஆக வேண்டும். தான் நேசிக்கும் சொந்தக்காரப் பெண்ணும், டாக்டருமான பீனாவைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷ வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற மனக் கோட்டை கட்டி வாழ்ந்து கொண்டிருந்த ஜே.பி., சிறிதும் எதிர்பாராமல் அச்சுத மேனன் என்ற வயதான மனிதரைச் சந்திக்கிறான். தன்னுடைய சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக அவனை அணுகியவர் அவர். ஆனால், அந்த வியாபாரம் சில பிரச்னைகளால் நடக்கவில்லை. ஆனால், அவர்களுக்கிடையே உறவு மட்டும் தொடர்கிறது. பல வகையான ‘கில்லாடித் தனங்களையும்’ அவனுக்கு அவர் கற்றுத் தருகிறார். எந்த விஷயத்திற்கும் கலங்கக் கூடிய மனிதர் அல்ல அவர். பாசத்துடன் ஒரு காலத்தில் வளர்த்த அவருடைய மகன், சிறிதும் நன்றியுணர்வே இல்லாமல் அவரை வீசியெறிந்து விட்டு போய் விடுகிறான். அதற்காக அவர் ஒடிந்து போய்விடவில்லை. தன் மகன்தானே என்றெல்லாம் பார்க்காமல், அவனை சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அலைக்கழிக்கிறார்… அவனைத் தூங்க விடாமல் செய்கிறார்… வெற்றி பெறுவதற்காக எப்படிப்பட்ட எல்லைக்கும் செல்லக்கூடிய அந்த துணிச்சலான மனிதரின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஜே.பி.க்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவரை அவன் கிட்டத்தட்ட தன்னுடைய குருநாதராகவே ஏற்றுக் கொண்டு விடுகிறான். அவர்களுக்கிடையே அப்படியொரு ஆழமான உறவு உண்டாகி விடுகிறது.

வேகம் தேவைதான். ஆனால், அதற்கும் ஒரு அளவு இருக்கிறதே! அளவுக்கும் அதிகமான வேகத்துடன் ஓடினால்… ஆபத்துதானே உண்டாகும்? ஜே.பி.யின் வாழ்க்கையிலும் அதுதான் நடக்கிறது. பணத்தின் மீது கொண்ட வெறி அவனை பல தவறான வழிகளிலும் போக வைக்கிறது. கள்ள நோட்டு அது இது என்று எங்கெங்கோ அவனுடைய பயணம் போய்க் கொண்டிருக்கிறது. அதனால் சிறிதும் நினைத்துப் பார்த்திராத பிரச்னைகளும், தலைவலிகளும், மிரட்டல்களும், அவமானங்களும்…

சிறிய அளவில் பணத்தை வைத்துக் கொண்டு மனதில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த அந்த இனிமையான நாட்கள் எங்கே? கோடிகளை மனதில் நினைத்துக் கொண்டு, செல்லக் கூடாத பாதைகளிலெல்லாம் பயணம் செய்து மனதில் சந்தோஷமே இல்லாமல் போராடிக் கொண்டும், பயந்து கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கேடுகெட்ட வாழ்க்கை எங்கே? – ஜே.பி. சிந்திக்கிறான்.

வாழ்க்கையில் பணம் மட்டுமே சந்தோஷத்தைத் தந்து விடாது என்ற மிகப் பெரிய உண்மையை அவன் உணர்கிறான். எது உண்மையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையைத் தருவது என்பதையும் தெரிந்து கொள்கிறான். அதற்கு சிறப்பு சேர்ப்பதைப் போல அவனுக்குக் கிடைக்கும் பரிசு – தன் சொத்துக்கள் முழுவதையும் அவனுக்கு எழுதி வைத்து விட்டு, இந்த உலகை விட்டு போய் விடுகிறார் அச்சுத மேனன் என்ற அந்த உயர்ந்த மனிதர். அதன் மூலம் ஜே.பி.யின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுச் சின்னமாக அவர் ஆகிறார்.

கோடிக்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் ஜே.பி.யாக நடித்த ப்ரித்விராஜையும், எதைச் செய்யவும் அஞ்சாத அச்சுத மேனனுக்கு உயிர் தந்த திலகனையும் நம்மால் எப்படி மறக்க முடியும்?

இந்த படத்தை நான் பார்த்து எவ்வளவோ மாதங்கள் கடந்தோடி விட்டன. எனினும், அதில் நடித்த ப்ரித்விராஜூம் திலகனும் என் மனதில் ஆழமாக பதிந்து, இப்போது கூட வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் அவர்களுக்கு வேறு என்ன சிறப்பு வேண்டும்?

தொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை அளித்து, மலையாள திரைப்பட உலகிற்கு மதிப்பையும், மரியாதையையும் தேடித் தந்து கொண்டிருக்கும் ரஞ்சித்தின் சாதனைப் பயணத்தில் இன்னொரு கிரீடம்- இந்த ‘இந்தியன் ருப்பி.’

சிறப்புச் செய்தி – ‘இந்தியன் ருப்பி’ கேரள அரசாங்கத்தின் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் சிறந்த மலையாளப் படத்திற்கான விருதை பெற்றது. சிறந்த இயக்குநருக்கான விருதை ரஞ்சித் ‘ஆசியாநெட்’டிலிருந்து பெற்றார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version