Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

கன்யாகுமாரி - Page 18

kanyakumari

நிலவொளி விழுந்து கொண்டிருக்கும் கடற்கரையில் அவர்கள் ஓடுகிறார்கள். இயற்கை அவர்களுக்கு உதவுகிறது.

பார்வதி:   (காதால் கேட்டபடி) கோயில்ல கொட்டு, பாட்டு எல்லாமே முடிஞ்சிடுச்சு. பாட்டி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கோ?

படகின் மறைவில் நின்றவாறு சங்கரன் அவளின் தோளில் தன் கையை வைக்கிறான்.

பார்வதி:   போகட்டுமா?

சங்கரன் அவளை இறுக அணைத்து கன்னத்தில் முத்தம் ஒன்றைப் பதிக்கிறான்.

சங்கரன்:  தனியா போயிடுவியா?

பார்வதி:   விடுங்க. மீதி நாளைக்கு.

சங்கரன்:  கட்டாயமா?

பார்வதி:   சத்தியமா...

சங்கரன்:  என்னைத் தொட்டு சத்தியம் பண்ணு.

பார்வதி:   சத்தியமா...

அவன் கையில் இலேசாக கிள்ளிய அவள் 'கலகல'வென சிரித்தவாறு நிலவொளியில் ஓடுகிறாள்.

63

ரவு.

மணல் மேட்டை விட்டு கீழே இறங்கிய அவள் திடீரென்று நிற்கிறாள். அவளுக்கு முன்னால் சிகரெட் பிடித்துக் கொண்டு ஃப்ரெடரிக் நின்றிருக்கிறான். திடீரென்று என்ன செய்வது என்று தெரியாமல் பதைபதைத்துப் போய் நிற்கும் பார்வதி தன்னுடைய வழியை வேறு பக்கம் மாற்றிக் கொண்டு படுவேகமாக நடக்க ஆரம்பிக்கிறாள். அப்போது அவன் அவளை எட்டி பிடிக்கிறான். அவளுடைய தாவணி அவன் கையில் சிக்குகிறது.

இன்னொரு முறை தோல்விக்குத் தயாரில்லாத அவன் அவளைப் பின் தொடர்கிறான்.

அவள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பயத்துடன் ஓடுகிறாள். அரக்கனாக மாறிய காமம் அவளைப் பின்தொடர்கிறது.

64

ரவு.

வாயில் பாட்டு ஒன்றை முணுமுணுத்தவாறு இனிமையான நினைவுகளுடன் நடக்கிறான் சங்கரன்.

பார்வதியின் அபயக்குரல் அவன் காதில் விழுகிறது.

அவன் காதில் மீண்டும் பார்வதியின் குரல்.

அவன் ஓடுகிறான். நிற்கிறான். "பார்வதி!" என்ற அவன் குரல் காற்றில் பரவி ஒலிக்கிறது. அவன் பைத்தியம் பிடித்தவனைப் போல அவள் போன வழியிலேயே ஓடுகிறான். "பார்வதி..."- கடலலைகள் அந்தப் பெயரை எதிரொலிக்கின்றன.

"பார்வதி...!"- காற்று அதை எதிரொலிக்கிறது.

65

ரவு.

ரெஸ்ட் ஹவுஸின் முன்னால் இருக்கும் சிமென்ட் பெஞ்சில் கடலையே பார்த்தவாறு அமர்ந்திருந்த சாமியாரும் பார்வதியின் அபயக் குரலைக் கேட்கிறார்.

சாமியார் இருந்த இடத்தைவிட்டு எழுந்து நிற்கிறார். வேகமாக நடக்கிறார். சாமியாரின் முகத்தில் தூரத்திலிருந்து எதிரொலிக்கும் சங்கரனின் குரல்:

"பார்வதி..."

66

சாமியார் சம்பவம் நடக்கும் இடத்திற்கு வரும்போது அவர் காணும் காட்சி:

விழுந்து கிடக்கும் ஃப்ரெடரிக்கின் மார்பின் மீது அமர்ந்து சங்கரன் பைத்தியம் பிடித்தவனைப் போல சுத்தியலால் ஃப்ரெடரிக்கின் தலையில் அடித்துக் கொண்டிருக்கிறான். சாமியார் அவனைப் பிடித்து நிறுத்துகிறார். இரத்தத்தில குளித்த தலை. ஃப்ரெடரிக்கின் உடல் அசைவற்று கிடக்கிறது.

தளர்ந்து போய் கீழே விழுந்து கிடக்கும் பார்வதியைப் பிடித்துத் தூக்குகிறார் சாமியார். அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு தொண்டை அடைக்க கூறுகிறார்-

சாமியார்:  உலகத்தால கள்ளங் கபடமில்லாத தன்மையை தாங்கிக்க முடியல, மகளே!

சாமியார் அவளை அணைத்துப் பிடித்தவாறு நடத்திக் கொண்டு போகிறார். சிறிது தூரம் ஒரு இயந்திரத்தைப் போல அவர்களைப் பின் தொடர்கிறான் சங்கரன். பிறகு சுத்தியலைக் கடலில் வீசி எறிந்த அவன் தளர்ந்து போய் உட்கார்ந்து கேவிக் கேவி அழுகிறான்.

67

ங்கக் கடலில் சூரிய உதயம்.

ஒரு பஸ் கன்யாகுமாரியை விட்டு புறப்படுகிறது. பின்னால் போய்க் கொண்டிருக்கும் நிலப் பகுதி. பஸ்ஸின் பின்னிருக்கையில் விலங்கு மாட்டப்பட்ட கைகளையே பார்த்தவாறு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறான் சங்கரன். அவனின் இருபக்கங்களிலும் போலீஸ்காரர்கள் அமர்ந்திருக்கின்றனர்.

முன்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கும் சாமியார் அவனைப் பார்க்கிறார். அவன் அதைப் பார்க்கவில்லை.

ஜன்னல் வழியாக சாமியார் வெளியே பார்க்கும் போது-

ஆள் அரவமற்ற கடற்கரையில் தன்னந்தனியாக நின்றிருக்கிறாள் பார்வதி.

காற்றில் அவளின் எண்ணெய் தேய்க்காத தலைமுடி பறக்கிறது.

துக்கத்தால் கறுத்துப்போன அவளின் முகம். பஸ்ஸின் உறுதியான சக்கரங்கள் அந்த முகத்தைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கின்றன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version