Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

கன்யாகுமாரி

kanyakumari

தாண்டவத்திற்குரிய தாளம் துடி. துடி சத்தம் ஒலிக்க சுசீந்திரத்தின் கருங்கல் சுவரில் இருக்கும் சிற்பங்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன.

வெவ்வேறு இடங்களில் இருக்கும் சிலைகள் நடனமாடுவதைப்போல பார்வையாளர்களுக்கு தோன்றும் விதத்தில் நாம் காட்டுகிறோம். கற்சிலைகள் கதை சொல்லலாம்.

அப்போது ஒரு குரல்:

“கன்னிப் பெண்ணான தேவி பராசக்தி அக்கரையில் மூணு கடல்கள் ஒண்ணு சேர்கிற முனையில் சுசீந்திரத்தில் இருக்குற சிவனுக்காக தவமிருந்தா. திருமணத்தை தேவர்கள் நிச்சயம் செஞ்சாங்க!”

குரல் முடியும்போது, குரலுக்குச் சொந்தக்காரனின் முகம் காட்டப்படுகிறது. வழிகாட்டியின் முகம். வேஷ்டி அணிந்திருக்கிறான். தோளில் துண்டு இருக்கிறது. பெரிய கோவில்களில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக நின்று கொண்டிருக்கும் கைடுகளில் ஒருவன் அவன்.

கைடு தொடர்கிறான்:

“நள்ளிரவு நேரத்துலதான் திருமணத்திற்கான முகூர்த்தம். சுசீந்திரத்துல இருந்து சரியான முகூர்த்த நேரத்துக்குப் போய்ச் சேரணும்னு வேக வேகமா நடந்து போகிறார் சிவன். ஆனா, சேவல் வடிவத்துல வந்து தேவேந்திரன் கூவியதைக் கேட்டு, முகூர்த்தம் தாண்டிப் போயிடுச்சேன்னு பதறிப்போன சிவன் பயங்கர கவலையுடன் திரும்பிப் போறாரு!”

சுற்றுலாப் பயணிகள் வழிகாட்டி சொன்ன கதையைக் கேட்கிறார்கள். வெவ்வேறு வகைப்பட்ட பெண்களும் ஆண்களும். கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமி தன் தாயிடம் தாழ்ந்த குரலில் கேட்கிறாள்:

“சேவலாக வந்து கூவுறது நாரதர்தானேம்மா?”

தாய்: சும்மா இருக்கியா என்ன?

சிறுமி:    இல்ல... தாத்தா சொன்னாரு...

தாய்: (வெறுப்புடன்) சும்மா இருக்க மாட்டியா?

சிறுமி:    (யாரிடம் என்றில்லாமல் - தனக்குத்தானே கூறிக் கொள்வது மாதிரி) இப்படியா பொய் சொல்றது!

2

மாலை நேரம். சுசீந்திரம் கோவில்.

சுவரில் இருக்கும் ஒரு அழகான கருங்கல்லால் ஆன சிலையோடு சேர்ந்து நின்று கொண்டிருக்கிறாள் ஒரு இளம்பெண்.

அவள் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். கூட்டத்தில் ஷர்ட்டும், பேன்ட்டும் அணிந்திருக்கும் நாகரிகமான ஒரு இளைஞன் அவளைப் புகைப்படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவன் படும் சிரமத்தைப் பார்க்கும்போது தனக்கு எடுக்கத் தெரியாத ஒரு கேமராவை வைத்து அவன் என்னவோ பண்ணிக் கொண்டிருக்கிறான் என்பது தெரிகிறது.

அவளோ தன்னைத் தாண்டி நின்றிருக்கும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இளைஞன்:     (வெற்றிப் பெருமிதத்துடன்) நான் இந்த ஆட்டோமேட்டிக் ஸ்விட்சை ஆன் செய்ய மறந்துட்டேன். நௌ இட் ஈஸ் ஓகே. ரெடி. மாலதி, ரெடி, ஸ்மைல்... ஸ்மைல் ப்ளீஸ்...

இளம்பெண்:     (கைடிடம்) ஹலோ... அதுக்குப் பிறகு தேவி என்ன பண்ணினா?

கைடு:     (அவளுக்கு மட்டும் தனியாக அல்ல - மொத்த கூட்டத்திற்கும் சேர்த்து) தேவி கழுத்துல இருந்த மாலையை வீசி எறிஞ்சா, பந்தலை தாறுமாறா இழுத்து கீழே போட்டா. அங்கே இருந்த உணவு பதார்த்தங்களை மணல்ல வீசி எறிஞ்சா. இன்னைக்கும் கன்யாகுமரி மணல்ல அந்த நிற வேறுபாட்டைப் பார்க்கலாம்.

இளைஞன்:     (தன் மனைவி தான் எடுக்கும் புகைப்படத்திற்கு சரியாக போஸ் தரவில்லை என்ற மனக்குறையுடன்) கமான்... இங்கே பாரு. மாலதி... இலேசா சிரி.

இளம்பெண்:     எனக்கு சிரிப்பு வந்தாத்தானே? (மீண்டும் சுற்றுலா பயணிகளையும் கைடையும் பார்த்தவாறு) அதுக்குப் பிறகு தேவி என்ன ஆனா?

கைடு:     தேவி இன்னைக்கும் ஒரு நித்யகன்னியா காத்திருக்கா.

இளைஞன்:     மாலதி, ஒரு செகன்ட்... ரெடி... கேமராவை ‘க்ளிக்’ செய்கிறான்.

அவள் நடந்து அவனுடன் சேர்ந்து கூட்டத்தை நோக்கி வரும்போது-

இளைஞன்:     போஸ் நல்லா இல்ல...

இளம்பெண்:     எனக்கு சிரிப்பே வரமாட்டேங்குது.

இளைஞன்:     சும்மா இருக்கிற நேரத்துல எல்லா தேவையில்லாம சிரிப்பே...

கூட்டத்தில் வயதான ஒருவர், தான்தான் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை பொறுப்பேற்றிருப்பவர் என்பது மாதிரி எல்லோரிடமும்,

“இதுக்கு மேல தாமதமானா, நாம சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க முடியாமப் போயிடும். நாம போகலாம்.”

எல்லோரும் ஒன்று சேர்ந்து ‘கலகல’வென பேசியவாறு நடக்கிறார்கள். கூட்டத்தில் ஒருவர்:

“எனக்கு இந்த ஊரை நல்லா தெரியும். இங்க பக்கத்துல இருக்குற ஒரு கடையில அருமையான பொரிச்ச கோழி கிடைக்கும். நாங்க திருவனந்தபுரத்துக்கு போறப்போ...”

பலதரப்பட்ட பேச்சுக்களுக்கு மத்தியில் அந்த மனிதனின் கோழியைப் பற்றிய நினைவு யாருக்குமே கேட்கவில்லை. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சாலையில் நிறுத்தியிருக்கும் டூரிஸ்ட் பஸ்ஸை நோக்கிச் செல்கிறது. கூட்டத்திலேயே கடைசியாக நடப்பவர்கள் அந்த இளைஞனும் அந்த இளம்பெண்ணும்தான். கைடு ஆட்களை எண்ணுகிறான்.

முதலில் சந்தேகக் கேள்வி கேட்ட சிறுமி:

அம்மா... அந்த சாமியாரை எங்கே?

கைடு:     ஒரு ஆளு குறையுதே!

நகைச்சுவையாகப் பேசக்கூடிய ஆள் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆண்: சாமியாரைத்தான் காணோம். சன்னியாசிகளுக்குத்தான் மறையிற வித்தை தெரியுமே!

சுற்றுலாப் பயணிகள் கூட்டம் பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருக்கு, கோவிலுக்குப் பின்னால் இருந்து காவி உடை அணிந்த சாமியார் வருகிறார். அவருக்கு வயது ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்துக்குள் இருக்கும். நரை விழுந்த தாடியும், தலைமுடியும், காவி உடையும் அணிந்த சாமியார் அவர். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் தனக்காக காத்திருக்கிறது என்பது தெரிந்ததும் வேகவேகமாக அவர் வருகிறார்.

குவியலாகக் கிடக்கும் செருப்புகள், ஷூக்கள்... பல கால்கள் அவற்றுக்குள் நுழைகின்றன. அவர்கள் அங்கிருந்து திரும்புகிறார்கள்.

3

டற்கரை - பகல்.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் கடற்கரை வழியாகப் போகிறது. பஸ்ஸில் இருக்கும் பயணிகளுக்கிடையே பலதரப்பட்ட உரையாடல்கள். வாழ்க்கையில் வெவ்வேறு முகங்களை அவர்களின் பேச்சில் நம்மால் காண முடிகிறது.

வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் சிறுமி தன் தாயிடம்:

“அம்மா... கடல் எங்கே இருக்கு?”

சிறுமியின் தாய்:     கொஞ்சம் சும்மா இருக்கியா?”

சாமியாரின் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு ஆள் சாமியாரை உரையாடலுக்கு இழுக்க முயற்சிக்கிறார்:

“வியாபாரத்தை வச்சு இந்தக் காலத்துல ஒண்ணுமே பண்ண முடியாது சாமி. சேல்ஸ் டாக்ஸ்காரங்களோட தொந்தரவைத் தாங்க முடியல. சில நேரங்கள்ல தோணும். பேசாம எல்லாத்தையும் விட்டுட்டு எங்காவது ஓடிப்போய் ஒரு மூலையில அமைதியா உட்கார்ந்துட்டா நல்லா இருக்குமேன்னு... என்ன சாமி, நான் சொல்றது சரிதானா?”

சாமியார் அதற்கு பதிலெதுவும் கூறாமல், வெறுமனே புன்னகைக்கிறார்.

வியாபாரி: சாமி, நீங்க அமெரிக்காவுக்கு போயிருக்கீங்களா?

சாமியார் ‘இல்லை’ என்று தலையை ஆட்டுகிறார்.

வியாபாரி: சன்னியாசிகளுக்கு அங்கே நல்ல மார்க்கெட். ஒவ்வொருத்தரும் அங்கே போயி டாலர்களை அள்ளிட்டு வர்றாங்க. சாமியார்களும் இந்தக் காலத்துல கொஞ்சம் பிராக்டிக்கலா சிந்திக்கணும்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version