Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

கன்யாகுமாரி - Page 2

kanyakumari

பாதி தன்னிடம் கேள்வி கேட்ட சக பயணியிடமும், பாதி தன்னிடமும் என்பது மாதிரி -

சாமியார்:  அனந்தம் பதமே வித்தம் யஸ்ய மே நாஸ்தி கிஞ்சன.

வியாபாரி: எனக்கு நீங்க சொன்னது புரியல.

சாமியார்:  ஜனகன் சொன்னது இது: என் சொத்துக்கு முடிவே இல்ல. அதே நேரத்தில் என்னிடம் எதுவுமில்லை.

4

வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் இள்மபெண்ணின் விரலை (அதில் திருமண மோதிரம் இருக்கிறது) தடவியவாறு -

இளைஞன்:     கடலைப் பார்க்குறதுன்றது நான் எப்பவும் விருப்பப்படுற ஒரு விஷயம். உன் வீட்டுக்கு நான் முதல் தடவையா வந்த அன்னைக்கு சாயங்காலம் நாம எல்லோரும் சேர்ந்து கடலைப் பார்க்கப் போனோம்...

அவன் பேசுவதை அவள் கேட்டுக் கொண்டிருந்தாலும், பஸ்ஸின் ஜன்னல் வழியாக வினாடிக்கு வினாடி மாறிக் கொண்டிருக்கும் காட்சிகளை அவள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இளைஞன்:     மாலதி, உனக்கு அது ஞாபகத்துல இருக்கா?

அவளைப் பார்க்காமல் வெளிக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டே வந்த அந்த இளம்பெண்:

“ம்... எல்லாமே ஞாபகத்துல இருக்கு. என் அக்காவை நீங்க கையைப் பிடிச்சு தண்ணில இறக்கி விட்டீங்க!”

இளைஞன்:     அப்போ நீ ரொம்பவும் பயப்பட்டே. நீ அப்போ ஒண்ணும் தெரியாத சின்னப் பொண்ணு.

இளம்பெண்:     அக்காவை நீங்க படமெடுத்தீங்க. ‘ஸ்ரீராமன் ஒரு போக்கிரி’ன்னு நான் மணல்ல எழுதி வச்சிட்டு தென்னை மரத்துக்குக் கீழே உட்கார்ந்திருந்தேன்.

அதைக் கேட்டு அந்த இளைஞன் ஒரு மாதிரி ஆகிவிடுகிறான்.

இளம்பெண்:     எனக்கு ஒண்ணும் அப்படி அழகா தெரியல.

ஒரு பிடி கையில் கிடைத்ததாக நினைத்து -

இளைஞன்:     உன் அக்காவுக்கு உன் அழகு இருக்குன்னு யார் சொன்னாங்க?

இளம்பெண்:     என் அக்கா விஷயத்தை யார் சொன்னது? நான் சொன்னது கடலை...

இரண்டு பேரும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

சாமியாரின் பார்வையில் பஸ்ஸில் இருக்கும் வெவ்வேறு வகைப்பட்ட கதாபாத்திரங்கள்.

5

ன்யாகுமரி முனை - பகல்.

பஸ் கன்யாகுமரிக்குள் நுழைகிறது. எங்கேயோ ஆம்பித்த ஒரு பாதை மூன்று கடல்கள் ஒன்று சேர்கிற ஒரு முனையில் திடீரென்று காணாமல் போய்விடுகிறது.

பஸ் நிற்கிறது.

சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொருவராக இறங்குகிறார்கள். கடைசியில் இறங்குவது சாமியார்.

சாமியார் வழிகாட்டியை எங்கே என்று தேடுகிறார். அவன் வியாபாரியுடன் பேசிக் கொண்டிருக்கிறான். சாமியார் அருகில் போய் அவர்களுடைய உரையாடல் கெட்டுவிடக்கூடாது என்று கருதி அமைதியாக அவர்களுக்குப் பக்கத்தில் நின்றிருக்கிறார்.

சாமியார்:  என் பெட்டியைக் கொஞ்சம் எடுத்துத் தந்தா...

கைடு:     ஓ... சாமியை நான் மறந்தே போனேன்.

வியாபாரி: அப்போ சாமி... நீங்க எங்ககூட இருக்குறதா இல்ல...?

சாமியார் ‘இல்லை’ என்ற அர்த்தத்தில் இலேசாக சிரிக்கிறார். கைடு பஸ்ஸின் மேல் ஏறுகிறான். பஸ்ஸில் இருந்த சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை விட்டு ஆங்காங்கே சிதறிப் போகின்றனர். தூரத்திலிருந்து சிப்பி மாலைகளையும் பனை நுங்குகளையும் எடுத்துக் கொண்டு சிறுமிகள் ஓடி வருகிறார்கள். அவர்கள் புதிதாக வந்திருக்கும் இந்தக் கூட்டத்தை மொய்க்கிறார்கள்.

பஸ்ஸின் மேலிருந்து கைடு கீழ் நோக்கி நீட்டிய பெட்டியை வாங்கும்போது, சாமியாரைச் சுற்றி பொருட்கள் விற்பவர்களின் கூட்டம்.

கைடு:     கொஞ்சம் தள்ளி நில்லுங்க. உங்களோட பெரிய ரோதனையா போச்சு.

மாலை விற்கும் சிறுமிகள்: ஒரு ரூபா... ஒன் ருப்பி... வாங்குங்க சார்...

அவர்களில் இருந்து சற்று விலகி நிற்கும் பதினான்கு அல்லது பதினைந்து வயது வரக்கூடிய ஒரு இளம் பெண்ணை சாமியார் பார்க்கிறார். அவளும் சிப்பி மாலை விற்பவள்தான். கசங்கிப் போன ஜாக்கெட். ஆங்காங்கே துணியால் ஒட்டுப் போடப்பட்ட பாவாடை. கழுத்தில் கயிறில் கோர்க்கப்பட்டிருக்கும் வெள்ளியால் ஆன ஒரு டாலர் மட்டுமே அவளின் அணிகலன்.

சாமியாரை மற்ற சிறுமிகள் மொய்த்துக் கொண்டிருக்க, அதில் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தனியே நின்று அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள் அந்த இளம்பெண்.

சாமியாரும் அவளைப் பார்க்கிறார். ஏதோ ஒரு பழைய ஞாபகம் அவரின் மனதில் வந்து அலை மோதுகிறது.

புதிதாக வந்திருக்கும் இந்தக் கூட்டத்தில் நின்று பிரயோஜனமில்லை என்பதைப் புரிந்து கொண்ட அந்த இளம்பெண் கைகளில் வைத்திருக்கும் மாலைகளுடன் வேறு இடங்களைத் தேடி ஓடுகிறாள்.

சாமியார் நடக்கிறார்.

சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கும் பல்வேறு வகைப்பட்ட மக்கள் கூட்டம், மவுத் ஆர்கன் வாசித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், காதலன் - காதலிகள், அதற்கு மத்தியில் தெர்மோஃப்ளாஸ்க், உணவுப் பொருட்கள் ஆகியவற்றுடன் அமர்ந்திருக்கும் தமிழ்க் குடும்பங்கள்.

சாமியார் நடக்கிறார்.

6

“ஒன் ருப்பி... ஒன் ருப்பி... டூ ருப்பீஸ்... த்ரீ...”

ரெஸ்ட் ஹவுஸுக்குப் போகும் நடைபாதையில் நீண்ட தாடியையும், நீளமான தலைமுடியையும் வைத்துக் கொண்டு தோளில் துணிப்பை, பைஜாமா- ஷர்ட் என்றிருக்கும் நான்கைந்து ஹிப்பிகள். அவர்களில் இரண்டு பேர் பெண்கள்.

சிப்பி மாலை விற்கும் பெண்ணின் குரல்:

“ஒன் ருப்பி... ஒன் ருப்பி... சார்... ஒன் ருப்பி”

மணல் பரப்பு வழியே நடந்து ரெஸ்ட் ஹவுஸுக்குப் போகும் நடைபாதையை அடைந்த சாமியார் பெட்டியை பாதையின் ஓரத்தில் இருந்த சிறிய சுவருக்குக் கீழே சிறிது நேரம் வைத்துவிட்டு இளைப்பாறுகிறார். கண்களால் சுற்றிலும் ஒரு பார்வை பார்க்கிறார். சற்று தூரத்தில் ஹிப்பிகளுடன் சிப்பி மாலையை வைத்துக் கொண்டு விலை பேசிக் கொண்டிருக்கும் இளம் பெண் மீண்டும் சாமியாரின் பார்வையில் படுகிறாள். யாரோ சிலர் மாலைகளை வாங்குகிறார்கள். ஹிப்பி பெண் மாலையை கழுத்தில் அணிந்து அழகு பார்க்கிறாள். ஒரு பெண் அந்த மாலையைச் சரியாக அணிய உதவுகிறாள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நாம் கேட்கவில்லை.

மாலைகளை விற்பனை செய்து முடித்த அவள் சாமியாரின் அருகில் ஓடி வருகிறாள். எதுவுமே பேசாமல் முன்பு பார்த்த சாமியாராயிற்றே என்று மனதிற்குள் நினைத்தவாறு திரும்பிப் போகப் பார்க்கிறாள்.

சாமியார்:  கொஞ்சம் நில்லும்மா.

பார்வதி:   சும்மா நேரத்தை வீண் செய்ய நான் விரும்பல.

அவளுடைய சுறுசுறுப்பையும், துடுக்குத்தனத்தையும் பார்த்து மனதிற்குள் மகிழ்ச்சியடையும் சாமியார்:

“என்ன... என்கிட்ட மாலை விற்க மாட்டியா?”

பார்வதி:   எனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு. சாமியார்கள் மாலையும் வளையல்களும் வாங்குவார்களா என்ன?

அவள் மாலைகளை விற்பதற்கு புதிய இடங்கள் தேடி ஓடுகிறாள். அவள் போவதையே ஒரு நிமிடம் பார்த்தவாறு நின்றிருக்கிறார் சாமியார். பிறகு பெட்டியை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ஹவுஸை நோக்கி நடக்கிறார்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version