Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

கன்யாகுமாரி - Page 3

kanyakumari

7

ரெஸ்ட் ஹவுஸின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ரிஸப்ஷன் அறைக்குள் சாமியார் நுழையும்போது, உரத்த குரலில் இந்தியில் உரையாடல் கேட்கிறது:

“அரெ பாய் க்யா ஹுவா? ங்ஹா, ங்ஹா உஸ்னெக்யா போலா?”

சாமியார் நடக்கும் காட்சியைப் பார்க்கிறார். கவுண்டரின் முன்னால் வெள்ளை நிறத்தில் பைஜாமாவும் ஷர்ட்டும் அணிந்த தொப்பியைக் கொண்ட சேட் ஒருவர் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டு பயங்கர கோபத்துடன் தொலைபேசியில் யாருடனோ கத்திக் கொண்டிருக்கிறார். தொப்பைக்கார சேட்டின் கோபத்தை அங்கிருக்கும் எல்லோருமே பார்க்கிறார்கள். பக்கத்தில் சேட்டின் மனைவி நின்றிருக்கிறாள். அவளுக்கு வயது 35 இருக்கும். பருமனான உடலைக் கொண்ட பெண் அவள். அவளின் இடுப்பில் சாவிக் கொத்து தொங்கிக் கொண்டிருக்கிறது. வாயில் வெற்றிலை போட்ட சிவப்பு இருக்கிறது.

சேட்: ஃபிர் க்யா ஹுவா? போலோ, அரெ போலோ தும்.

சேட்டின் மனைவி தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் தன் கணவரைப் பார்த்து கையால் சைகை செய்கிறாள்.

“மெதுவா?”

அதை கவனிக்காமல்-

சேட்: மாதவன் கெ பாஸ் ஃபோன் தே தோ.

ஒரு நிமிடம் இளைப்பாறி விட்டு, தொழிற்சாலையில் கணக்கெழுதும் மலையாளியை சேட் பயங்கர கோபத்துடன் திட்டுகிறார்.

“டேய் மாதவா, நாயோட மகனே... கடற்கரையில இருக்குற கோடவுனுக்கு ஐநூறு மூடையை உடனே மாற்றணும்னு நான் சொல்லியிருந்தேனே! நாயோட மகனே. இப்போ என்ன நடந்தது? (அடுத்த பக்கம் என்ன பதில் வருகிறது என்பதை கவனிக்காமலே) பணம் யாருக்கு நஷ்டம்? சொல்லுடா? சொல்லுடா நாயோட மகனே!”

தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு தனக்குத் தானே என்னவோ முணுமுணுத்தவாறு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டு நின்றிருக்கிறார் சேட். கவுண்டருக்குப் பின்னால் நின்றிருக்கும் மேனேஜர் தன்னுடைய சிரிப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் சேட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறான். சேட்டின் முகம் கோபத்தால் பயங்கரமாக சிவந்து காணப்படுகிறது. இரத்தக் கொதிப்பால் உண்டாகும் நீண்ட பெருமூச்சு அவரிடம் வெளிப்படுகிறது. அவர்கள் அங்கிருந்து நகர்வதற்காக சாமியார் காத்திருக்கிறார்.

சேட்டின் மனைவி தன்னுடைய பையில் இருந்து வேகமாக மாத்திரைகள் இருக்கும் குப்பியை எடுத்து ஒரு மாத்திரையை மட்டும் வெளியே எடுத்து சேட்டின் கையில் தருகிறாள். அவர் அதை விழுங்கிவிட்டு மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு, பிறகும் என்னவோ தனக்குள் முணுமுணுத்தவாறு அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பிக்கிறார். அவருடைய மனைவி அவரைப் பின் தொடர்கிறாள். சாமியாரைப் பார்த்ததும், சேட் வணக்கம் சொல்கிறார்.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று எண்ணிய சாமியார் கவுண்டரை நெருங்குகிறார்.

8

டலிலிருந்து வீசும் காற்றால் அறையின் ஜன்னல் கதவு வேகமாக அடைக்கிறது. அதை மீண்டும் திறந்து கொண்டியைச் சரியாக மாட்டி விடுகிறான் பணியாள். காற்றில் பறந்து கொண்டிருக்கும் திரைச்சீலையை ஒரு மூலையில் கட்டிவிட்டு நிறுத்திய அவன் சொன்னான்:

“இந்த இடத்துல நின்னு பார்த்தா, கடல் நல்லா தெரியும்!”

அப்போது இன்னொரு ஜன்னலின் அருகில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞனை நாம் பார்க்கிறோம். சாமியாரின் பார்வையில் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருக்கும் கடற்கரையும், கோவிலின் ஒரு பகுதியும் தெரிகிறது. பணியாள் மெத்தை விரிப்பில் இருந்த சுருக்கங்களைச் சரி செய்கிறான். அலமாரியில் இருந்த பழைய தண்ணீர் இருந்த கூஜாவை எடுத்துக் கொண்டு வெளியே போக முயற்சிக்கும்போது -

“ராத்திரி சாப்பிடுறதுக்கு என்ன வேணும்?”

சாமியார்:  எது இருந்தாலும் சரிதான்.

பணியாள் வெளியே செல்கிறான். சாமியார் வாஷ் பேஸினில் முகத்தைக் கழுவிவிட்டு திரும்பி வந்து பெட்டியைத் திறக்கிறார்.

பெட்டியைத் திறந்தவுடன் மேலே பல வர்ணங்களைக் கொண்ட புடவை இருக்கிறது. அதைப் பார்த்ததும் சாமியார் அதிர்ச்சியடைகிறார். வேகமாக அதில் இருக்கும் சாமான்கள் ஒவ்வொன்றையும் வெளியே எடுக்கிறார். பெண்ணின் உடைகள், வாசனைப் பொருட்கள்... எல்லாவற்றையும் மீண்டும் பெட்டிக்குள் வைத்து மூடுகிறார். ஒரு நிமிடம் பெட்டியையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார்.

கூஜாவில் நீருடன் வந்த பணியாள் அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்றிருக்கிறான். அவன் பேசிக் கொண்டிருப்பதில் மிகவும் விருப்பம் உடையவன் என்பதைக் காட்டுகிறோம்.

பணியாள்: சாமி, இப்போத்தான் முதல் தடவையா இங்கே வர்றீங்களா?

சாமியார்: பல வருஷங்களுக்கு முன்னாடி ஒரு தடவை வந்திருக்கேன்.

பணியாள்: அப்போ இந்த ரெஸ்ட் ஹவுஸே இருந்திருக்காதே! இதை ஆரம்பிச்சதுல இருந்து நான் இங்கே இருக்கேன். ஆனா, ஒரு பிரயோஜனமும் இல்லை சாமி!

சாமியார் ஜன்னலின் அருகில் நின்று வெளியே பார்க்கிறார். பணியாள் வருத்தப்பட்டுவிடக் கூடாதே என்று அவன் பேசுவதைக் கேட்பது மாதிரி ‘உம்’ கொட்டுகிறார்.

பணியாள்: அமைச்சர் வந்தப்போ சொன்னாரு. செக்ரட்டரி வந்தப்போ சொன்னாரு. இருந்தும் ஒண்ணுமே நடக்கல. நாங்க வாங்குற சம்பளத்தை வெளியே சொல்றதுக்கு இல்ல. ரொம்ப கம்மி.

சாமியார் அவன் சொன்னதைக் கேட்டதை வெளிப்படுத்துவது மாதிரி, அவனைப் பார்த்து புன்னகைக்கிறார்.

அப்போது அவரின் பார்வையில் கட்டிடத்தின் இன்னொரு பகுதியில் ஜன்னலின் அருகில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் வெளுத்து மெலிந்து போயிருக்கும் இளைஞன் படுகிறான்.

பணியாள்: அந்தப் பக்கம் இருக்குற அறைகள்தான் ரொம்பவும் நல்லா இருக்கும். சூரியன் உதயமாகுறதையும், மறையிறதையும் அங்கே நின்னு பார்க்கலாம்.

சாமியார்:  அப்படியா?

பணியாள்: அது யாருன்னு நினைக்கிறீங்க? கே.பி.டி. முதலாளியோட மகன். பேரு ஜெயன் முதலாளி.

சாமியார்:  (சாதாரணமான குரலில்) அப்படியா?

பணியாள்: கே.பி.டி. யை சாமி, உங்களுக்குப் பழக்கம் உண்டா?

சாமியார்:  இல்ல...

பணியாள்: கே.பி.டி.க்கு பஸ் சர்வீஸ், எஸ்டேட் எல்லாமே இருக்கு. அவருக்கு ஒரே மகன் இந்த ஜெயன்தான். முன்னாடி இவர் ஒரு பயங்கரமான ஆளு. எவ்வளவோ பணத்தை அழிச்சிட்டாரு. எவ்வளவு அழிச்சாலும் இன்னும் பணம் தீராம இருக்குன்னா பார்த்துக்குங்களேன். ஒரு வாரமா இங்கே இருக்காரு. மதுவைக் கையில தொட்டா அவ்வளவுதான்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க. இப்போ ஆளே முழுசா மாறிப் போயாச்சு. ரொம்பவும் அமைதியான ஆளா மாறிட்டாரு. சிகரெட்கூட குடிக்கிறது இல்ல...

சாமியார் எதிர் திசையில் நின்றிருக்கும் அந்த இளைஞனையே பார்த்தவாறு நின்றிருக்கிறார்.

பணியாள்: சாமி, உங்களோட ஆஸ்ரமம் எங்கே இருக்கு?

சாமியார்:  எனக்கு ஆஸ்ரமும் இல்ல... ஒண்ணும் இல்ல.

பணியாள்: உங்களுக்கு எந்த ஊரு?

துக்கத்தின் சாயல் கலந்த ஒரு மெல்லிய புன்னகையுடன்-

சாமியார்:  ஊரைவிட்டு வந்து எத்தனையோ வருடங்களாச்சு. இனி ஊருன்னு அதை எப்படி நான் சொல்ல முடியும்? சொல்லத்தான் முடியுமா?

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version