ஜல சமாதி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6803
நடு இரவில், நான்கு- பன்னிரண்டுக்கான ஷிஃப்ட் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தான் முனுசாமி. சைக்கிள் பழுதாகி விட்டிருந்தது. அதை சரி செய்ய வேண்டுமென்றால் அடுத்த சம்பளம் வரை காத்திருக்கவேண்டும். மங்கலான கிராமத்து வெளிச்சத்தின் வழியாக, மரங்களின் குளிரைத் தாண்டி, நான்கரைமைல் அவன் நடந்தேயாக வேண்டும். போத்திக்கலுங்கு வரை- அதாவது ஒன்றரை மைல் தூரம் வரை தன்னுடைய சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து வரலாமென்று கருப்பையன் சொன்னான்.
நல்ல சுறுசுறுப்பான பையன் அவன். பி.யூ. சின்னப்பாவின் ஏதோ ஒரு பழைய பாட்டை உரத்த குரலில் பாடியவாறு கருப்பையன் அழுத்தி சைக்கிளை மிதிக்கும்போது எதிரில் காற்று வேகமாக வந்து மோதிக் கொண்டிருந்தது.
கருப்பையன் மூக்கின் ஒரு ஓட்டையை அடைத்துக்கொண்டு சின்னப்பா, சுந்தராம்பாள் ஆகியோரின் உண்மையான குரலை வரவழைப்பான். பாட்டுக்களைப் பாடிக் கொண்டிருக்கும்போது இடையில் அவற்றை நிறுத்திவிட்டு ஏதாவது வசனம் பேசுவான். நடிகர் திலகத்தின் அருமையான வசனங்களெல்லாம் அவனுக்கு மனப்பாடமாக இருக்கும். ஆனால், "பராசக்தி”யின் வசனத்தைவிட அவனுக்கு "மனோகரா”வில் சங்கிலியை உடைத்தெறிந்து தூண்களை கீழே விழச் செய்யும்போது பேசும் வசனங்கள்மீதுதான் விருப்பம் அதிகம்.
கூர்மையான கற்கள் சிதறிக் கிடக்கும் பாதை வழியாக, இருக்கையிலிருந்து தன்னுடைய பின் பகுதியைச் சற்று உயர்த்தி, பாதி எழுந்திருந்து அழுத்தி மிதிக்கும்போது, இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்தமான வாகனம் தன்னுடைய சைக்கிள்தான் என்ற உறுதியான எண்ணத்தில் இருப்பான் கருப்பையன். அவனுடைய உடம்போடு அந்த அளவிற்கு அந்த சைக்கிள் ஐக்கியமாகி விட்டிருந்தது. வேலாண்டி பட்டியின் மாட்டுச் சந்தையில் தொடர்ந்து நூறு மணி நேரம் நிறுத்தாமல் சைக்கிள் ஓட்டியதால் கிடைத்த புகழைக்கூட அவன் இதுவரை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மழை தூறிக்கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில் நூறு மணி நேரம் முடிந்தபோது, மக்கள் ஆரவாரம் செய்து அவனைச் சுற்றி கூடினார்கள். அப்போது அவனைப் பெற்ற தாய் வேகமாக ஓடி வந்து நெஞ்சிலடித்துக் கொண்டு அவனைப் பிடித்து இறக்கவில்லையென்றால், அதற்குப் பிறகும் நூறு மணி நேரம் அவன் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருப்பான். அந்தச் சமயத்தில் வேலாண்டிப்பட்டியில் கிடைத்த பெருமையுடன் அவன் அதற்குப் பிறகு ஜவ்வாதுப் பட்டிக்குப் போனான்.
எருமைப் பாலத்தை தாண்டியவுடன் மங்கலான கிராமத்து வெளிச்சத்தில் உயரமாக வளர்ந்திருந்த புளிய மரங்களின் நிழல் படர்ந்த ஒரு சிறிய திருப்பம் வந்தது. அங்கிருந்து இறக்கத்தில் செல்ல வேண்டும். இருள் குகைக்குள்- அகலம் குறைவான கிராமத்துப் பாதையில் பயணம் செய்ய வேண்டும்.
கருப்பையன் சைக்கிளை விட்டு இறங்காமல் கால்களை ஊன்றியவாறு நின்றான். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகத்திலும் கழுத்திலும் இருந்த வியர்வையையும் பனியையும் துடைத்தான். முனுசாமி பின்னாலிருந்த இருக்கையிலிருந்து இறங்கினான். அந்தத் திருப்பத்திலிருந்து மூன்று மைல் தூரம் கிழக்கு திசையில் சைக்கிளை மிதிக்க வேண்டும். கருப்பையனின் கிராமத்திற்குப் போக எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு தூரம் முனுசாமியின் வீட்டிற்கும் இருக்கும்.
சைக்கிளை அப்படியே திருப்பி ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி கருப்பையன் நின்றான். அவன் என்னவோ தீவிரமாக சிந்திப்பதைப் போல் இருந்தது. ஒரு பீடியைப் பற்ற வைத்து வேகமாக இழுத்த அவன் மெதுவான குரலில் சொன்னான்:
“நான் கொண்டு விடுறேன் அண்ணே.'' அவன் பருமனான உடலைக் கொண்டிருந்தாலும், அவனுக்கு கிளியின் குரல்தான் இருந்தது.
தேவையில்லை என்று தலையை ஆட்டினான் முனுசாமி. அந்த நடு இரவு நேரத்தில் பெரிய பெரிய கற்கள்மீது இனியும் மூன்று மைல் தூரம் சைக்கிளை மிதித்துப்போவது, பிறகு திரும்பி வருவது... வயது குறைவானவனாக இருந்தாலும், அவனுக்கு இரவு வேலையால் உண்டான களைப்பு இருக்கத்தானே செய்யும்?
கருப்பையன் மீண்டும் சந்தேகமான குரலில் கேட்டான்: “எனக்கு எந்த கஷ்டமும் இல்லை அண்ணே. நான் தயார்!''
“வேண்டாம். நீ போயி படுத்துத் தூங்கு.''
“இந்த நேரத்துல நீங்க அவ்வளவு தூரம்...?''
“அதுக்கென்னடா. தெரிஞ்ச வழிதானே?''
நன்கு பழகிப்போன வழியில் தனக்கு துணையாக வருவதற்கு அந்தப் பையன் தயாராக இருக்கிறானே என்பதை நினைத்தபோது முனுசாமிக்கு சிரிப்பு வந்தது.
என்னவோ கூறவேண்டுமென்று நினைத்து அதை உடனே கூறாமல் தயங்கியவாறு நின்றிருந்தான் கருப்பையன்.
“வீட்டுக்குப் போடா, கண்ணா.'' முனுசாமி பாசத்துடன் அவனு டைய முதுகைத் தட்டினான். “உன் பொண்டாட்டி உனக்காக காத்திருப்பா. அதுவும் புதுசா கல்யாணமான பொண்ணு...''
“அது ஒரு பக்கம் இருக்கட்டும். கேளுங்கண்ணே. இது நேரம் கெட்ட நேரம். ரொம்பவும் மோசமான காலம் இது. நீங்க தனியா போக வேண்டாம்.''
முனுசாமி தன்னையே அறியாமல் அதைக் கேட்டு நடுங்கி விட்டான். இதே வார்த்தைகளைத்தான் தொழிற்சாலையில் அந்தக் காலத்திலிருந்து அவனுடன் பணியாற்றும் ஜம்புவும் கூறினான். ஒருமுறை அல்ல, பலமுறை.
“ரொம்பவும் மோசமான காலம். கவனமா போங்க அய்யா.'' மிகவும் முரட்டுத்தனமான குரலைக் கொண்டவன் ஜம்பு. அதைக் கேட்கும்போது காதுக்குள் குடைச்சல் எடுப்பதைப்போல் இருக்கும்.
இளம் வயதில் வெளியூரைச் சேர்ந்தவர்களுடன் ஆற்று மணலில் படுத்து சண்டை போட்டுப் போட்டே தன்னுடைய உடம்பைக் கட்டுமஸ்தாக ஆக்கிக் கொண்ட ஜம்பு எதற்கும் கலங்கக் கூடியவனில்லை. எதையும் எதிர்கொள்வதற்கு எப்போதும் தைரியமாக இருக்கக்கூடியவன். ஆனால், என்ன காரணத்தாலோ இப்போது ஜம்பு கூறிய வார்த்தைகளில் ஏதோ ஒரு நடுக்கம் இருப்பதை முனுசாமியால் உணரமுடிந்தது.
அதற்குமேல் எதுவும் கூறாமல் அந்த நிமிடமே ஜம்பு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாலும் அவன் சொன்னதன் அர்த்தத்தைப் பின்னர்தான் முனுசாமியால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை அவனுக்கு ஐம்பத்தொன்பது வயது ஆரம்பிக்கிறது.
இங்கு ஐம்பத்தொன்பது வயது என்பது பெரிய ஒரு திருப்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது.
கடந்த பத்து, பன்னிரண்டு வருடங்களுக்குள் ஐம்பத்தொன்பது வயதைக் கடந்த எட்டு தொழிலாளிகள் நீரில் மூழ்கி இறந்திருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் போய் விழுவது அவர்களுக்குச் சிறிதும் அறிமுகமில்லாத பாழும் கிணறுகளில் என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம். அவர்களை விழுங்குவதற்கு காற்றும் வெளிச்சமும் இல்லாத நீர்ப்பரப்பின் இருண்ட ஆழம் தயாராக இருந்தது.
சுற்றுப் பாதைகளிலிருந்த ஊர்களில் முட்செடிகள் வளர்ந்திருக்கும் தரிசு நிலங்களில் இப்படி எத்தனையோ பாழும் கிணறுகள். அவற்றில் சில மிகவும் ஆழம் கொண்டவையாக இருக்கும். சிலவற்றில் ஆழம் மிகவும் குறைவாக இருக்கும்.
+Novels
Short Stories
July 31, 2017,
May 28, 2018,
June 3, 2016,
March 7, 2016,