Lekha Books

A+ A A-

தூண்டில்

தூண்டில்

பி. பத்மராஜன்

தமிழில் : சுரா

 

மேற்பகுதிக்குச் சற்று கீழே ஒரு பச்சை நிற தவளை, கண்களையும் பின் கால்களையும் உயர்த்தி முன் கைகளை அழுத்தியவாறு மிதந்து கொண்டிருந்தது, இடையில் அவ்வப்போது அது பின் கால்களை துடிக்கச் செய்து, மிதந்து கொண்டிருந்த கட்டையைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தது.

மிதந்து கொண்டிருந்த மரத் துண்டில் சுற்றப்பட்டிருந்த கயிறு கீழ் நோக்கி போய்க் கொண்டிருந்தது.

நீருக்கு மேலே, மரங்களின் நிழல் விழுந்து உண்டாக்கிய நிழலில் கிழக்கு திசையிலிருந்து மிதந்து வந்து கொண்டிருந்த முருங்கை இலைகளும் நுரைகளும் தேங்கி நின்றிருந்தன. நிழலுக்குக் கீழேயிருந்த குளிர்ச்சியில் வரால் மீன்களும் கரிமீன்களும் பிற சிறிய மீன்களும் பதுங்கி நின்று கொண்டிருந்தன. பல வேளைகளில் அவற்றைத் தொட்டு உரசியவாறு கிழவனின் பழைய தூண்டில் உயிரற்று தொங்கிக் கிடந்தது.

வெயில் கண்களில் அடித்துக் கொண்டிருக்கும்போது இடது உள்ளங்கையை விரித்தவாறு அவன் சிறிய மிதக்கும் கட்டையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கிழவனின் முகம் முற்றிலும் சகிக்க முடியாத அளவிற்கு இருந்தது. அவனுடைய வாய்க்குள் உதடுகள் இறங்கிப் போயிருந்தன. நாசியின் மேற் பகுதியில் ஒரு நரை முடி வளர்ந்து சுருண்டு நின்று கொண்டிருந்தது. வாய்க்குக் கீழே நீண்ட காலம் மணலில் புதைந்து கிடந்த சப்பி எறியப்பட்ட ஒரு மாங்கொட்டையைப் போல தாடை எலும்பு ஒட்டிக் கொண்டிருந்தது.

வாய்க்காலின் இரண்டு பக்கங்களிலும் அண்ணாசிப் பழ செடிகளும் புதரென புற்களும் வளர்ந்து நின்று, நீருக்கு மேலே இருளை வரச் செய்து கொண்டிருந்தன. கிழக்கிலிருந்து வரும் வாய்க்கால், இடையில் வடக்கு நோக்கி திரும்பி மீண்டும் மேற்கு திசை நோக்கி ஓடிச் செல்கிறது. அந்தத் திருப்பத்தில் நீரோட்டம் குறைந்து ஆழமுள்ள பகுதியில் நீர் பல வேளைகளில் ஒரு சுழலாக மாறியது. சுழலில் அண்ணாசிச் செடியின் பூக்களிலிருந்து உதிர்ந்த பூக்கள் சுற்றிக் கொண்டிருந்தன.

கிழவன் இவையெதையும் பார்க்கவில்லை. வலது கையிலிருந்து தூண்டிலின் கழி அவ்வப்போது பலமில்லாமல் நடுங்கியது, அறியாமல் தூங்கி விடும்போது. பிடியை விட்டு நீருக்கு மேலே விழுந்து, அது முழக்கமிடும் ஒரு சத்தத்தை உண்டாக்கியது.

கடந்த ஐந்து நாட்களாக ஒரு சிறிய மீன் கூட தூண்டிலைக் கடிக்கவில்லை. தினமும் காலையில் தூண்டிலுடன் கிளம்பும் போது, மகள் அழைத்து கூறுவாள்: 'சரியாக இருக்காது. போகும்போதே தெரியலையா? எதுவுமே கிடைக்காது என்பதைச் சொல்கிற மாதிரி ஒரு முக வெளிப்பாடு'.

ஒரு சிறிய மீன் கூட கிடைக்காது என்றாலும், அப்படிப்பட்ட ஒரு மனநிலை அவனுக்கு உண்டானதில்லை.

இன்று குழந்தைகள் யாரும் இல்லை. சில வேளைகளில் அவர்கள் வருவார்கள். வந்தால் தொந்தரவுகள் கொடுப்பார்கள்.  நீரில் இறங்குவதற்கு முன்பு, யாருக்கும் தெரியாமல் இரையை ஓரத்தில் வைத்து விட்டு, தூண்டிலின் நுனியைச் சீர் செய்வான். நுனிப் பகுதி வெளியே தெரிந்து கொண்டிருந்தால், ஒரு பரல் மீன் கூட திரும்பிப் பார்க்காது.

கிழக்கு திசையிலிருந்து மெல்லிய காற்று வீசும்போது வெயிலின் கடுமை தெரியாத நிழலில் தளர்வடைந்த கண்கள் சுகமான ஒரு அனுபவத்துடன் மூடின. அறுபது வருடங்களுக்கு முன்னால் தான் கடந்து வந்த சிறு வயது கால அனுபவங்களைக் கொண்ட நிகழ்வுகளும், மரண நாள் வரை தன்னை கவனித்துக் கொண்ட மனைவியின் முகமும் இடையில் ஞாபகத்தில் வந்தன. தூண்டிலின் இன்னொரு நுனிப் பகுதியில் ஒரு சிறிய அசைவு தெரிந்ததும், அதிர்ச்சியடையவும், மிதந்து கொண்டிருந்த சலனமற்ற தன்மையைப் பார்த்து மீண்டும் தன்னுடைய பழைய மன நிலைக்கு திரும்பிச் செல்லவும் செய்தான்.

காலையில் கிளம்பியபோது மகள் சாபம் போட்டாள்.'

'கடைசி பயணம்......'

இறுதி யாத்திரை...

பல வேளைகளிலும் காதில் விழுந்திருந்தாலும், இன்று வார்த்தைகளுக்குள் விசேஷமான ஒரு அர்த்தமும் சேர்ந்து கேட்டது. திரும்பி வராத ஒரு பயணம்... அவள் கூறியதைப் போல நடக்கப் போகிறது.

வாய்க்காலின் ஓரத்தில் தூண்டிலைப் போட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு மரணம் நடக்கக் கூடாது. பிணம் அங்கேயே கிடக்கும். சாயங்காலம் மரணம் நடைபெற்றால், அழிய ஆரம்பித்திருக்கும் பிணத்தைத் தேடி மறு நாள்தான் ஆட்கள் வருவார்கள்.

வெயில் இறங்கியது. காட்டு புற்களுக்கும் சேம்பு தண்டுகளைப் போல வளர்ந்து நின்று கொண்டிருக்கும் வசம்புச் செடிகளுக்குமிடையிலிருந்து குளக் கோழிகள் சத்தம் உண்டாக்கி சிலிர்த்தன. நீரில் மிதந்து வந்த ஒரு பெரிய நீர் பாம்பு அண்ணாசி மரத்தின் படர்ந்து முற்றிய வேர்களுக்கு மத்தியிலிருந்த பொந்துக்குள் நுழைந்து ஊர்ந்து சென்றது. தவளையின் பொந்து.... நீருக்கு மேலே தலையை நீட்டிக் கிடக்கும் பச்சை நிற தவளையின் இறுதி நெருங்கியிருக்கிறது.

ஒரு சிவப்பு நிற ஆம்பல் மலர் மிதந்து வந்து நூலின் மீது மாட்டிக் கொண்டது. கிழவன் தூண்டிலை எடுத்து, பூவை அகற்றி வீசி எறிந்தான். புதிய மாமிசத்தைக் கோர்த்து மீண்டும் இட்டான்.

மேல் தளத்தில் மெல்லிய நீர் வளையங்கள் உயர்ந்து மறைந்தன. மிதந்து கொண்டிருந்த தவளை முன் கால்களை மேலும் சற்று ஆழத்திற்குள் செலுத்தி, ஓசை உண்டாக்கியவாறு, நகர்ந்தது. பொந்தை நோக்கி இருக்கலாம். 'சீக்கிரமா போ...' - மனதிற்குள் கூறினான்: 'மரணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.'

பொழுது கடந்ததுடன், சாயங்காலம் முழுமையை அடைந்ததுடன், பதைபதைப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. காலையில் மகள் கூறிய சாப வார்த்தையின் இருண்ட அர்த்தத்தைப் பற்றி பல தடவைகள் மனதில் ஆழமாக எண்ணிப் பார்த்தான். தனக்கு மரணம் நடக்காது, இறந்தால், பிறகு அவளுக்கு யார் இருக்கிறார்கள்? முப்பத்தெட்டு வயதுள்ள திருமணமாகாத மகளைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது, தான் இறக்கக் கூடாது என்று அவன் உறுதியாக முடிவு செய்தான்.

மிதந்து கொண்டிருந்த மரத்தடியில் ஒரு சிறிய அசைவு தெரிந்தது. சற்று தாழ்ந்து மீண்டும் உயர்ந்து வந்தது. கவனமாக பார்த்தான். இல்லை... சலனமற்ற நிமிடங்கள்...

குளக் கோழிகள் மீண்டும் பயந்து சத்தம் போட்டன. ஒரு கறுத்த ஆமை, நீருக்குள்ளிருந்து ஒரு அண்ணாசி மர வேரின் மீது பிடித்து ஊர்ந்து, கரையில் ஏறிச் சென்றது.

கிழவன் பயத்துடன் நான்கு பக்கங்களிலும் பார்த்தான். இருள் பரவிக் கொண்டிருந்தது. இன்னும் மீன் எதுவும் கிடைக்கவில்லை. வெறும் கையுடன் திரும்பி வரும் தான் ..

பொந்துக்குள்ளிருந்து சிதறி விழுந்ததைப் போல தவளையின் அழுகைச் சத்தம் உயர்ந்து கேட்டது. அது நீர் பாம்பின் வாய்க்குள் போயிருக்கிறது. பின் வாசலில் மரணத்தைப் பார்க்கும்போது எழுப்பக் கூடிய கூப்பாடு .... அத்துடன் கைகள்  அசையாமலாயின, அவனுடைய நான்கு பக்கங்களிலும் மரணம் என்ற பயங்கரமான உண்மை இவ்வளவு நேரமும் உறங்கிக் கிடந்தது, அவனுடைய கைகளில் தூண்டில் ..... அதன் இன்னொரு நுனியில் எந்த நிமிடத்திலும் மரணத்தை எதிர்பார்த்து நின்றிருக்கும் வரால் மீன்கள்...

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel