
'போவோம்!'- நாங்கள் புறப்பட்டோம். போகும்போதே எங்களிடமிருந்த ரொட்டியை துண்டு துண்டாக பிய்த்து, வாய்க்குள் போட்டு தின்றோம். மழை மிகவும் பலமாக பெய்து கொண்டிருந்தது. நதி பயங்கரமான இரைச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தது. அது எங்கோ தூரத்திலிருந்து கேலி செய்து ஊதும் விஷிலைப் போலவும், இந்த மோசமான இலையுதிர் கால மாலை வேளையில் எதற்கும் பயமில்லாத ஏதோ அரக்கன் பூமியில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் அதன் கதாநாயகர்களான எங்களின் மீதும் ஆசையுடன் மோதுவதைப் போலவும்- பார்க்கும்போது இருந்தது. அந்த சத்தம் என்னுடைய இதயத்தில் வேதனையை உண்டாக்கியது. நான் இந்த அளவிற்கு வெறி பிடித்து, இதற்கு முன்பு எந்தச் சமயத்திலும் சாப்பிட்டதே இல்லை. அந்த இளம் பெண்ணும் அப்படித்தான். அவள் என்னுடைய இடது பக்கத்தில் நடந்து வந்து பொண்டிருந்தாள்.
'உன் பெயர் என்ன?'- ஏன் கேட்டோம் என்று தெரியாமலே நான் கேட்டேன்.
'நடாஷா'- அவள் சத்தமாக மென்று கொண்டே பதில் கூறினாள்.
நான் அவளையே பார்த்தேன் என் இதய வேதனை குறைந்ததைப் போல இருந்தது எனக்கு முன்னால் கவிந்திருந்த இருட்டையே நான் பார்த்தேன். மோசமான நிலையிலிருந்த என்னுடைய விதி என்னைப் பார்த்து புதிர் தன்மையுடனும், எந்தவித உணர்ச்சி இல்லாமலும் சிரிப்பதைப் போல எனக்குத் தோன்றியது.
மழை படகின் மீது சிறிதும் சோர்வடையாமல் ஓசை உண்டாக்கியவாறு பெய்து கொண்டேயிருந்தது. அது எழுப்பிய சிறு சத்தம் சோகமான சிந்தனைகளை கிளர்ந்தெழச் செய்தது. உடைந்திருந்த அடிப் பகுதியிலிருந்த ஒரு சிறு துளைக்குள் நுழைந்தபோது, காற்று விஷிலடித்தது. அதற்கு அருகில் எதனுடனும் பிணைக்கப்படாமல் இருந்த ஒரு குச்சி, ஓசை உண்டாக்கி, ஒரு முனகல் சத்தத்துடன் அதிர்ந்து கொண்டிருந்தது. அலைகள் கரையின் மீது வேகமாக மோதிக் கொண்டிருந்தன. அவற்றின் இரைச்சல் சத்தம் ஒரே சீரான தன்மையுடனும், நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதைப் போன்றும் இருந்தது. தாங்கிக் கொள்ள முடியாமல் பயங்கரமாக இருக்கக் கூடியதாகவும், அழுத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவும் இருக்கக் கூடிய ஏதோவொன்றைப் பற்றி அவை வெளியே கூற நினைப்பதைப் போல இருந்தது. அதை பார்த்துப் பார்த்து களைத்துப் போனதைப் போலவும், அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கு முயல்வதைப் போலவும் அதனுடைய செயல் இருந்தது. அதே நேரத்தில்- அதைப் பற்றி அது தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தது. மழையின் ஓசை அலைகளின் ஆர்ப்பரிப்புடன் கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது. தலை கீழாக கவிழ்ந்து கிடந்த படகிற்கு மேலே முடிவற்று நீண்டு கொண்டிருந்த வெப்பம் நிறைந்த கோடையின் மீது கோபமும் எரிச்சலும் அடைந்து, குளிர்ந்த... ஈரமான... பனி முடிய இலையுதிர் காலம பூமிக்கு ஆறுதல் உண்டாக்குவதைப் போல அது உரத்து சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது. ஆள் அரவமற்ற கரையை நோக்கி காற்று வீசிக் கொண்டிருந்தது. நுரைந்து பொங்கிக் கொண்டிருந்த நதி அசைந்து கொண்டே, சோக பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தது.
படகிற்குக் கீழே நாங்கள் இருந்த இடம் எந்தவித சவுகரியங்களும் இல்லாமல் இருந்தது. அது அலங்கோலமாக சிதிலமடைந்து, ஈரமாக காணப்பட்டது. அடியிலிருந்த துளையின் வழியாக மழையின் அழகான, குளிர்ச்சியான துளிகளும் காற்றின் வீச்சுகளும் வந்து கொண்டிருந்தன. நாங்கள் மிகவும் அமைதியாக, குளிரில் நடுங்கிக் கொண்டே உட்கார்ந்திருந்தோம். நான் தூங்குவதற்கு விரும்பினேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். நடாஷா தன் முதுகை படகின் பக்கவாட்டில் சாய்த்துக் கொண்டு, ஒரு சிறிய பந்தைப் போல சுருண்ட நிலையில் காணப்பட்டாள். தன்னுடைய முழங்காலைக் கட்டிக் கொண்டு, தன்னுயை தாடையை அதன் மீது வைத்துக் கொண்டு, கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டு அவள் நதியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்திலிருந்த வெளிறிப் போன நிறம், அதற்குக் கீழே இருக்கும் சிராய்ப்புகளால் மிகவும் பயங்கரமாக தெரிந்தது. அவள் சிறிது கூட அசையவில்லை. அவளுடைய அசைவற்ற தன்மையும், அமைதியாக இருந்ததும் படிப்படியாக எனக்குள் ஒருவித பயத்தை உண்டாக்கியது. நான் அவளிடம் பேச வேண்டும் என்று விருப்பினேன். ஆனால், அதை எப்படி ஆரம்பிப்பது என்றுதான் எனக்கு தெரியவில்லை.
அவள்தான் முதலில் பேசினாள்.
'என்ன நாசபாப் போன வாழ்க்கை!'- அவள் கூறினாள். அவளுடைய பேச்சு தனித்துவம் நிறைந்ததாகவும், வெளிப்படையானதாகவும், முழுமையாக தீர்மானிக்கப்பட்டதாகவும் இருந்தது.
அது ஒரு புகாராக இருக்கவில்லை. அவளுடைய குரலில் ஒரு மாறுபட்ட தன்மை இருந்தது. அதைப் பற்றி அவள் பல தடவைகள் திரும்பத் திரும்ப சிந்தித்திருக்கிறாள், பின்னர் ஒரு இறுதி தீர்மானத்திற்கு வந்திருக்கிறாள். அதை உரத்த குரலில் வெளியே கூறியிருக்கிறாள்- இதுதான் உண்மை. என்னை முரண்பாடாக நானே நினைக்காமல், அதை என்னால் மறுத்துப் பேச முடியாததால், நான் மிகவும் அமைதியாக இருந்தேன். அவள் அதே இடத்தில் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு, எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தாள். என்னை கவனிக்காதது மாதிரியும் காட்டிக் கொண்டாள்.
'நான் வெடித்தால்...'- நடாஷா மீண்டும் ஆரம்பித்தாள். இந்த முறை அவளுடைய குரல் மிகவும் அமைதியானதாகவும், தெளிவு கொண்டதாகவும் இருந்தது. இப்போது அவளுடைய குரலில் எந்தவித புகாரும் இல்லை. வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பார்த்து, தன்னுடைய வாழ்க்கையையே அலசி ஆராய்ந்து பார்த்து, அவள் அமைதியாக இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அதன் மூலம் வாழ்க்கையின் கிண்டல்களிலிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று அவள் தீர்மானித்தாள். அவள் வேறு எதுவும் செய்ய முடியாது. தான் கூறியதைப் போல உரத்த குரலில் அவளால் 'வெடிக்க' மட்டுமே முடியும்.
அவளுடைய சிந்தனையிலிருந்த தெளிவு, வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு என்னை பாடாய் படுத்தியது. இப்படியே இன்னும் அமைதியாக இருந்து கொண்டிருந்தால், கட்டாயம் அழுது விடுவேன் என்று எனக்கு தோன்றியது. அந்த இளம் பெண்ணுக்கு முன்னால் அதைச் செய்வதற்கு எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. குறிப்பாக- அவள் அழாமல் இருக்கும் சூழ்நிலையில். உரையாடலில் அவளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook