
'ஏய்... என்ன விஷயம்? உனக்கு குளிருதா? நீ உறைஞ்சு போயிட்டியா?' ஓ... நீ என்ன வாத்து மாதிரி இருக்கே! அங்கே ஒரு ஆந்தையைப் போல அமைதியா உட்கார்ந்து கொண்டு இருகே! உனக்கு குளிர் அதிகமா இருக்குன்னு நீ ஏன் என்கிட்ட சொல்லல? வா... காலை நீட்டி படு. நானும் கீழே படுக்குறேன். இப்போ உன்னோட கைகளை என்னைச் சுற்றி இறுக்கி போட்டுகோ. சரி... இப்போ உனக்கு சூடு தேவைப்படுது. அதற்குப் பிறகு நாம ஒருத்தர் முதுகை இன்னொருத்தர் முதுகு பக்கம் காட்டிக் கொண்டு படுப்போம். எப்படியோ இரவு வேளையை நகர்த்த வேண்டியதுதான்! இங்கே பாரு... நீ மது அருந்தியிருக்கிறாயா? அவங்க உன்னை போகச் சொல்லிட்டாங்களா? அதையெல்லாம் பொருட்படுத்தாதே.'
அவள் எனக்கு ஆறுதல் சொன்னாள். என்னை ஊக்கப் படுத்தினாள்.
மூன்றாவது முறையாக நான் தண்டிக்கப்பட்டிருக்கிறேனா? எனக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலை? அதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்! அந்த நேரத்தில் மனித இனத்தின் விதியைப் பற்றி நான் தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டிருந்தேன். சமூக நிலையை மீண்டும் மாற்றியமைப்பதைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தேன். அரசியல் மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தேன். புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட எல்லா வகையான தீவிரமான நூல்களையும் நான் வாசித்தேன். அந்த நூல்களில் எழுதப்பட்டிருந்த ஆழங்களை அவற்றை எழுதிய ஆசிரியர்கள் கூட அந்த நாட்களில் ஆழமாக உணர்ந்திருக்க மாட்டார்கள்- நான் முடிந்த வரைக்கும் என்னை ஒரு சுறுசுறுப்பான, குறிப்பிடத்தக்க சக்தியாக ஆக்குவதற்கு முயற்சி செய்தேன். இங்கே ஒரு விலை மாது தன்னுடைய உடலைக் கொண்டு எனக்கு வெப்பமூட்டிக் கொண்டிருக்கிறாள். பரிதாபப்படும்படியான, அழுத்தப்பட்ட, வேட்டையாடப்பட்ட உயிர்... அவளுகென்று எந்த மதிப்பும் இல்லை. வாழ்க்கையில் ஒரு இடமும் இல்லை. எனக்கு அவள் உதவி செய்யும் தருணம் வரை, நான் உதவி செய்ய வேண்டும் என்று எந்தச் சமயத்திலும் நினைத்ததில்லை. அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியிருந்தாலும், மிகவும் அரிதாகவே அவளுக்கு நான் உதவி செய்திருப்பேன். ஓ! இப்படிப்பட்ட சம்பவங்களெல்லாம் எனக்கு ஒரு கனவில், முட்டாள்தனமான- வெறுக்கக் கூடிய கனவில்தான் நடக்கின்றன என்று நான் நம்புவதற்கு தயாராக இருந்தேன்.
ஆனால், அடடா! என்னாலேயே நம்ப முடியவில்லை. குளிர்ச்சியான மழை துளிகள் என் மீது விழுந்து கொண்டிருந்தன. ஒரு பெண்ணின் மார்பகம் என்னை அழுத்திக் கொண்டிருந்தது. என் முகத்தில் அவளுடைய சூடான மூச்சுக் காற்று பட்டுக் கொண்டிருந்தது. அந்த மூச்சுக் காற்றில் சிறிது வோட்காவின் வாசனை கலந்திருந்தது. எனினும், அவை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருந்தது. காற்று ஓசை உண்டாக்கியவாறும், முனகிக் கொண்டும் வீசிக் கொண்டிருந்தது. மழை படகின் மீது வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. அலைகள் மோதியவண்ணம் இருந்தன. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் இறுக அழுத்திக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு எந்தச் சமயத்திலும் குளிர் காரணமாக நடுங்கவேயில்லை. நடந்த சம்பவங்கள் அனைத்துமே உண்மை. இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க, மோசமான கனவு உண்மையிலேயே நனவாக வேண்டும் என்று யாருமே கனவு கூட காண மாட்டார்கள் என்பதை மட்டும் என்னால் உறதியான குரலில் கூற முடியும்.
நடாஷா பேசிக் கொண்டேயிருந்தாள். பெண்களுகே இருக்கக் கூடிய மென்மைத்தன்மையுடனும், பரிதாபம் வருகிற மாதிரியும் அவளுடைய பேச்சு இருந்தது. அவளுடைய அந்த எளிமையான, நட்புணர்வுடன் பேசிய சொற்களின் மூலம், எனக்குள் ஒரு சிறிய நெருப்பு கிளர்ந்தெழுந்தது. அது என் இதயத்திற்குள் எதையோ உருகச் செய்தது.
அதைத் தொடர்ந்து என் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அது கெட்ட எண்ணங்கள், முட்டாள்தனம், கடுமைத் தன்மை, அழுக்கு என்று அந்த இரவிற்கு முன்பு எப்போதிருந்தோ சேர்ந்து விட்டிருந்த என் இதயத்தைக் கழுவி சுத்தம் செய்தது. தொடர்ந்து நடாஷா எனக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்.
'அது... அது... கண்ணு... அது போதும்! அழாதே! அது போதும். கடவுளின் அருளால் நீ நல்லா ஆயிடுவே! உனக்கு வேறொரு இடம் கிடைக்கும்.'
அவள் தொடர்ந்து எனக்கு முத்தங்கள் தந்தாள். கணக்கே இல்லாமல், அவள் எனக்கு சூடான முத்தங்களைத் தந்தாள்.
வாழ்க்கையில் ஒரு பெண்ணிடமிருந்து நான் பெற்ற முதல் முத்தங்களே அவைதாம். அவைதாம் சிறந்த முத்தங்கள். அதற்குப் பிறகு நான் பெற்ற முத்தங்கள் அனைத்தும் மிகவும் விலை மதிப்பு உள்ளவை. அந்த முத்தங்களின் மூலம் கிட்டத்தட்ட நான் எதையுமே பெற்றதில்லை.
'வா... அழுவதை நிறுத்து. நீ... வாத்து மடையா! உனக்கு போவதற்கு வேறு இடம் எதுவுமே இல்லைன்னா, நாளைக்கு உனக்கு நான் உதவுறேன், அவளுடைய மென்மையான, ஆறுதல் கலந்த முனகல் சத்தம் ஒரு கனவில் ஒலிப்பதைப் போல காதுகளில் விழுகின்றது.
பொழுது புலரும் வரை, நாங்கள் ஒருவர் கையில் ஒருவர் என்று படுத்துக் கிடந்தோம்.
பொழுது விடியும் நேரத்தில், நாங்கள் படகிற்கு அடியிலிருந்து ஊர்ந்து வெளியே வந்து, நகரத்திற்குள் சென்றோம். அங்கு ஒருவருகொருவர் நட்பு முறையில் 'குட் பை' கூறிக் கொண்டோம். அதற்குப் பிறகு நாங்கள் சந்திக்கவே இல்லை. எனினும், இப்போது விளக்கிக் கூறிய இலையுதிர் காலத்து இரவு வேளையை யாருடன் செலவழித்தேனோ அந்த இனிய நடாஷாவை, நான் அரை வருட காலம் மூலை முடுக்கெல்லாம் தேடித் திரிந்தேன்.
அவள் ஏற்கெனவே மரணத்தைத் தழுவியிருந்தால், அவளுக்கு அது நல்லதே. அப்படி நடந்திருக்கும் பட்சம், அவள் அமைதியில் ஓய்வு எடுக்கட்டும்! அதே நேரத்தில்- அவள் உயிருடன் இருந்தால், அவளுடைய மனதிற்கு அமைதி கிடைக்கட்டும்! தன்னுடைய வீழ்ச்சியைப் பற்றிய புரிதலுக்குள் அவள் எந்தச் சமயத்திலும் தட்டி எழுப்பப்படக் கூடாது அது தேவையற்ற துன்பமாகவும், இனி இருக்கும் வாழ்க்கைக்கு வேண்டாத ஒரு வேதனையாகவும் இருக்கும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook