
“பட்டாளக்காரனின் வீட்டிற்கு இவையெல்லாம் அலங்காரம், நளினி. பட்டாளக்காரனின் மனைவி பலவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று அதனால்தான் நான் சொன்னேன்.''
“பழிக்குப் பழி வாங்குவதற்காக அவனுடைய ஆவி இங்கே எங்கேயாவது அலைந்து கொண்டிருந்தால்...?''
அதைக் கேட்டு ராஜசேகரன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“பழிக்குப் பழி! பழிக்குப் பழி! அவன் இறந்துவிட்டான் அல்லவா? அவனுடைய இனமும் முடிந்துவிட்டது. பார்... அந்த வட்டமான குழிகளில் பெரிய இரண்டு கண்களும் உருள, இந்த ஓட்டிற்குள் மூளை செயல்பட்டுக் கொண்டிருக்க, அந்தப் பற்களுக்கு மத்தியில் சிங்கத்தின் கர்ஜனையைப் போன்ற சத்தம் புறப்பட்டு வந்து கொண்டிருந்த நேரத்திலேயே அவனால் என்னை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. அதற்குப் பிறகுதான் இது!''
ஒரு நிமிடம் கழித்து அவன் தொடர்ந்து சொன்னான்:
“பிசாசைப் பற்றியாவது உண்மையான விஷயங்களைக் கூற வேண்டாமா? அவன் அசாதாரணமான மனிதனாக இருந்தான். ஒரு தலைவனாக இருப்பதற்காகவே அவன் பிறந்திருந்தான். அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதற்கு ஆயிரக்கணக்கான பேர் தயாராக இருந்தார்கள்.''
நளினி எதுவும் பேசவில்லை. அவள் நினைத்தது அது அல்ல. அந்த மண்டை ஓடு அங்கு இருக்கும்போது, பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று தாகமெடுத்து அலையும் ஆன்மா அதற்குள் நுழைந்து கொண்டு இருக்காதா என்று அவள் நினைத்தாள். ஒரு பேய்க்கு வீட்டிற்குள் தங்குவதற்கு இடத்தை ஏன் தர வேண்டும்? ஆனால், ராஜசேகரன் புரிந்து கொண்டது அதுவல்ல. பட்டாளக்காரனுக்கு ஆவியைப் பற்றிய பயம் இருக்குமா என்ன? அவள் அந்த மண்டை ஓட்டிற்கு கண்ணும் மூக்கும் இட்டுப் பார்த்தாள். அந்த உருவத்தை அவள் பார்க்கிறாள். வட்டமான கண்கள், நீளமான மூக்கு... இப்படி ஒரு உருவம். அவள் அவனுடைய அலறல் சத்தத்தைக் கேட்கிறாள்.
ஒரு பட்டாளக்காரனுக்கு அதைப் பற்றிய பயம் எதுவும் இல்லை. அவன் போர்க்களங்களையும், ஏராளமான மரணங்களையும், ரத்த ஆறுகளையும் பார்த்தவன்தான். அவனுக்கு ஆவியைப் பற்றிய பயமில்லை. எதிரியை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினாலும், அந்த தலையையும் கைகளையும் அறுத்து எடுத்து பதப்படுத்தி எலும்பாக மட்டும் எப்படி ஆக்கினான்? அதற்காக உழைத்தானா? அந்த மண்டை ஓட்டைத் தொடர்ந்து இருக்கும் உறுப்புகள் எங்கே? இப்படி ஏராளமான கேள்விகளும் சந்தேகங்களும் நளினிக்கு இருந்தன.
இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும்? எதற்கெல்லாம் துணையாக இருக்க வேண்டும்?
அரசாங்க செயலாளரின் வீட்டில் அன்றொரு நாள், வேறு நான்கு பெரிய பதவியில் இருப்பவர்களின் மனைவிகள் ஒன்று சேர்ந்தார்கள். அவர்களுக்குக் கூற இருந்தவை குற்றச்சாட்டுகள் மட்டும்தான். கணவர்கள் அவர்களுடைய உரிமைகளைப் புறம் தள்ளிவிட்டு செயல்படுவதைப் பற்றி ஒருவரோடொருவர் கூறிக் கொள்ளும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல; அந்தப் பெண்கள் தங்களின், தங்களுடைய குழந்தைகளின் செழிப்பான வாழ்விற்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கும் தடைகளைப் பற்றி மனதில் வேதனைப் பட்டுக் கூறுவதும் அங்கு நடந்து கொண்டிருந்தது. அந்த செகரட்டரி தாசில்தாராக இருந்தபோது, வெறும் மாஜிஸ்ட்ரேட்டாக மட்டுமே இருந்த மனிதர் இன்றைய சீஃப் செகரட்டரி. தன்னுடைய கணவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி கிடைக்காததைப் பற்றி அவளுக்கு குறைபாடு இல்லாமல் இருக்குமா? அது மட்டுமல்ல; அவரை அங்கேயிருந்து ஏதோ முக்கியத்துவம் குறைவான ஒரு இடத்திற்கு மாறுதல் செய்யப் போவதாகவும் ஒரு தகவல் உலாவிக் கொண்டிருந்தது. செகரட்டரியின் மனைவி- அவளுடைய பெயர் கவுமுதி. அவளிடம் ஒரு சிறிய டிப்பார்ட்மெண்ட் தலைவனின் மனைவியான ஹிரண்மயி சொன்னாள்:
“சரி... அது இருக்கட்டும். அக்கா, உங்களுக்கு என்ன வயது?''
“எதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும்? ஜோதிடம் பார்க்கவா?''
கவுமுதிக்கு தனக்கு எத்தனை வயது நடக்கிறது என்பதைக் கூறுவதற்கு ஒரு தயக்கம்.
இப்போது சஸ்பென்ஷனில் இருக்கும் முக்கியமான பதவியில் இருந்தவரின் மனைவி (விலாசினி என்பது அவளின் பெயராக இருக்கட்டும்) கேட்டாள்:
“எத்தனை வயது என்று சொல்லுங்க. அதற்குப் பிறகு விஷயம் என்ன என்று கூறுகிறோம்.''
“எனக்கு பத்து... நாற்பது வயதாகிவிட்டது. என்ன விஷயம்?''
ஹிரண்மயி ஒரு கேள்வியைக் கேட்டாள்.
“இருபத்தைந்து வயது உள்ளவளுக்கா, நாற்பது வயது உள்ளவளுக்கா...? இவர்களில் யாருக்கு மதிப்பு?''
கவுமுதிக்கு விஷயம் புரிந்தது. அவள் சொன்னாள்:
“மதிப்பு இருபத்தைந்து வயது உள்ளவளுக்குத்தான். சந்தேகம் சிறிதுகூட இல்லை.''
விலாசினிக்கும் ஒரு கேள்வி இருந்தது.
“சரி... அது இருக்கட்டும்... ஹிரண்மயி அம்மா, இருபத்தைந்து வயது உள்ளவளா - நாற்பது வயது உள்ளவளா... இவர்களில் யார் மிகவும் அழகானவள்?''
ஹிரண்மயி கவுமுதியம்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்:
“அது நாற்பது வயது பெண்ணாக இருந்தாலும், அந்த அழகல்ல விஷயம்...''
கவுமுதியம்மா சொன்னாள்:
“என் தங்கைமார்களே! என்னால் அதெல்லாம் முடியாது. நான் அதையெல்லாம் கற்கவில்லை. என்னால் முடியாது.''
அப்போது விலாசினி சொன்னாள்:
“அப்படியென்றால் கணவர் எப்போதும் இப்படியேதான் இருப்பார். நல்ல ஆடைகள் அணிந்து அலங்காரம் செய்து கொண்டு பார்க்க வேண்டிய மனிதர்கள் எல்லாரையும் போய் பார்த்தால்தான் நடக்குமா என்பது தெரியும்.''
“என்னால் முடியாது... அப்பா... என்னால் முடியாது. எனக்கு அலங்காரமாக ஆடைகள் அணிந்து இருக்கத் தெரியாது. பார்க்க வேண்டியவர்களின் வீடுகளும் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவும் இல்லை.''
ஹிரண்மயி சொன்னாள்:
“அப்படின்னா இப்படியே இருங்க. நாங்கள் கொஞ்சம் சோதனை பண்ணிப் பார்ப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம். எங்களுடைய கணவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்குமா என்று சோதித்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோம்.''
கவுமுதி அம்மாவின் சந்தேகம் அதுவல்ல. அவள் கேட்டாள்:
“என் தங்கையே! அவளைப் பார்த்தால் மனித வடிவத்தில் இருப்பதைப் போல இருக்கிறதா? ஒரு மர பொம்மையைப் போல அல்லவா இருக்கிறாள்!''
"பேசாமல் இருங்க” என்று சைகை காட்டியவாறு ஹிரண்மயி சொன்னாள்:
“பேசக்கூடாது. அக்கா, நீங்க யாரைப் பற்றி சொல்றீங்க? உங்க கணவரின் மேலதிகாரியைப் பற்றித்தான் பேசுறீங்க. யாருக்கு அழகு இல்லைன்னு சொல்றீங்க தெரியுமா? இப்போ பிரதம அமைச்சருக்கு மிகவும் பிடித்திருக்கும் ஒருத்தியைப் பற்றிப் பேசுறீங்க. பேசாதீங்க! தலை போகும் விஷயம்...''
கவுமுதி அம்மா கேட்டாள்:
“இப்போ மேலே இருக்கும் கொம்பில்தான் பிடியா?''
“அதனால்தானே புதிய பதவி கிடைத்தது?''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook