Category: ஆரோக்கியம் Published Date Written by சுரா Hits: 4798
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
1969-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவியபோது, தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே பலருக்கும், புற்றுநோய் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால், இன்று? புற்றுநோய் என்பது சர்வ சாதாரணமாகிட்டது.
இன்று ஒவ்வொரு குடும்பத்திலோ அல்லது ஒன்றுவிட்ட குடும்பத்திலோ யாராவது ஒருவருக்கு கட்டாயம் புற்றுநோய் இருக்கிறது என்ற அளவுக்கு நிலைமை உள்ளது.
சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் என்னுடைய அம்மா, அப்பாவுடன் நான் கேரளாவில் இருந்தேன். அப்போது அம்மா, சமையலுக்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை உபயோகப்படுத்தி வந்தார். பிறகு என் அப்பாவின் தொழில் நிமித்தமாக எங்கள் குடும்பம் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்தது. அப்போதுதான் ரீஃபைண்டு ஆயில் என்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் அறிமுகமானது.
காலப்போக்கில் என்னுடைய அம்மாவும் சமையலுக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யைப் பயன்படுத்தத் தொடங்கினார். அதற்குக் காரணம் ‘சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்’ என்ற அதன் அடையாளப் பெயர்தான்!
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை சுத்தமான எண்ணெய் என்று அவர் தவறாகப் புரிந்துகொண்டார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன், என் அம்மாவின் உடல்நலம் பாதித்து, அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவரைப் பரிசோதித்த மருத்துவர் கூறிய செய்தியைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். ’என் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்’ என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி!
சில மாதங்களில் அம்மா புற்றுநோயால் மிகவும் அவதிப்பட்டு மரணத்தைத் தழுவினார். அவர் இறந்தபோது, புற்றுநோய்க்கான காரணத்தைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
ஆனால், பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும், ‘ரீஃபைண்டு ஆயிலைப் பயன்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன’ என்ற செய்தியைப் படித்தபிறகு, ‘என் தாயாருக்கு புற்றுநோய் வந்ததற்கு, அவர் சமையலுக்குப் பயன்படுத்திய ரீஃபைண்ட் ஆயில் காரணமாக இருந்திருக்குமோ’ என்று என் மனம் இப்போது சிந்திக்கிறது.
நம்மைச் சுற்றி, நம்மை வசீகரிக்கக்கூடிய ஆயிரம் விஷயங்கள் இருக்கலாம். நமக்கு தேவையானவை எவை? தேவையற்றவை எவை? என்பதை நாம்தான் தீர்மானித்தாக வேண்டும். எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவது என்ற குணத்தை முதலில் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
கல்வி வசதிகள் சொல்லிக்கொள்கிற அளவுக்கு இல்லாத அந்தக் காலத்திலேயே நல்லெண்ணெய்யின் சிறப்புகளை எல்லோரும் தெரிந்து வைத்திருந்தார்கள் என்றால், இந்த கணினி யுகத்தில் வாழக்கூடிய நாம் அபார ஆற்றல் கொண்ட நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதில் உடனடியாக ஈடுபட்டு பயனடைய வேண்டாமா?