Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

'மேஜிக்' ராதிகா

மறக்க முடியுமா?சுரா (Sura)

'மேஜிக்' ராதிகா

னக்கு அருகில் நின்று கொண்டிருப்பவர் 'மேஜிக்' ராதிகா. இன்று வடபழனி ஆர். கே. வி. ஸ்டூடியோவில் அரை மணி நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். என் மனம் பின்னோக்கி பயணித்தது.

அநேகமாக 1968 ஆம் வருடமாக இருக்க வேண்டும். இயக்குநர் திலகம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் 'சின்னஞ்சிறு உலகம்' என்ற ஒரு படத்தை இயக்கினார். ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்தான் இந்த ராதிகா. நான் அப்போது மதுரையில் 6ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். 'சின்னஞ்சிறு உலகம்' படத்தை நான் போடிநாயக்கனூர் சுப்பராஜ் திரையரங்கில் பார்த்தேன். அந்தப் படத்தில் சைக்கிளில் அமர்ந்த வண்ணம் தன் தோழிகளுடன் புதுமைப் பெண்களடி என்று பாடிக் கொண்டே ராதிகா வரும் காட்சி இப்போது கூட மனதில் பசுமையாக நிற்கிறது. அதே படத்தில் உள்ளம் என்பது உருவமாகலாம், விட்ட குறையோ கை தொட்ட குறையோ என்ற பாடல் காட்சிகளும் ராதிகாவிற்கே கொடுக்கப்பட்டன. அந்தப் படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.

அதற்குப் பிறகு ராதிகா ஜெய்சங்கருக்கு ஜோடியாக 'நான் யார் தெரியுமா?' படத்தில் நடித்தார். புத்திசாலிகள், வெகுளிப்பெண் ஆகிய படங்களின் கதாநாயகியும் ராதிகாதான். 'தெய்வீக உறவு' படத்தில் மனோகருக்கு இணையாக ராதிகா நடித்தார். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கி, 25 வாரங்கள் ஓடி சாதனை புரிந்த 'ஆதி பராசக்தி' படத்தில் சுருளிராஜனுடன் சேர்ந்து 'ஆத்தாடி மாரியம்மா' என்று ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்வித்தவர் இந்த ராதிகாதான். நடிகர்திலகம் நடித்த 'சிவந்த மண்' படத்தில் கப்பலில் ஒரு நடனக் காட்சி வரும். அதற்கு ஆடியவர் ராதிகா. அந்தப் படத்தின் இந்தி ஆக்கமான 'தர்த்தி'யிலும் ராதிகாவின் நடனம் இடம் பெற்றது. தொடர்ந்து எம். ஜி. ஆர். நடித்த 'நல்ல நேரம்' படத்திலும் ராதிகா நடனமாடினார். 'கருப்பு ரோஜா' படத்தில் கதாநாயகனுக்கு அம்மாவாக ராதிகா நடித்தார்.

மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிப் படங்களிலும் ராதிகா நடித்தார்.

கோபி கிருஷ்ணாவிடம் கதக், உடுப்பி லக்ஷ்மண், சோப்ரா, ஹீராலால், சின்னி சம்பத் ஆகியோரிடம் க்ளாஸிக் மற்றும் மேற்கத்திய நடனம், புகழ் பெற்ற மேஜிக் மேதை ரமணா ரெட்டியிடம் மேஜிக், 'கராத்தே'மணியிடம் கராத்தே என்று பலவற்றையும் கற்று தன்னை வளர்த்துக் கொண்டவர் ராதிகா. ஆன்டனி மேரி என்ற இவரின் பெயரை 'ராதிகா' என்று மாற்றி வைத்தவர் சின்ன அண்ணாமலை. பல வருடங்களுக்கு முன்பு இவர் மதுரை, பரமக்குடி, திருப்பூர், ஈரோடு, பெங்களூர் ஆகிய ஊர்களில் கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் பைக் ஓட்டியிருக்கிறார்.

மதுரையிலிருந்து சென்னை வந்த சார்ட்டட் விமானத்தை ஜெமினி கணேசன், சாவித்திரி அடங்கிய 25 படவுலக நட்சத்திரங்கள் அமர்ந்திருக்க, ராதிகா சிறிது தூரம் ஓட்டியிருக்கிறார்.

லண்டன், பாரீஸ், அமெரிக்கா என்று உலகத்தின் பெரும்பாலான இடங்களில் மேஜிக் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கும் ராதிகா,  எல்லோராலும் 'மேஜிக்'ராதிகா என்று பின்னர் அழைக்கப்பட்டார்.

இவரிடம் நிறைய பேர் மேஜிக் கற்றிருக்கிறார்கள்.

தற்போது ராதிகா எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டார். தேவாலயங்களில் சொற்பொழிவு. நிகழ்த்துகிறார். அப்போது தன் மேஜிக் திறமைகளை அத்துடன் கலந்து வெளிப்படுத்துகிறார்.  

இப்போது 'மேஜிக்' ராதிகா இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் இயக்கும் படத்தின் பெயர் 'கூட்ஸ் வண்டியிலே'. படத்தின் கதை, திரைக்கதை, வசனமும் கூட ராதிகாதான்.

இப்போதும் துடிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் ராதிகாவைப் பார்த்து, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'உங்களை உற்சாகத்துடன் செயல்பட வைத்துக் கொண்டிருப்பது உங்களின் ஆன்மீக எண்ணங்கள்தாம்' என்று நான் சொன்னதற்கு,  'அதுதான் உண்மை' என்றார் 'மேஜிக்'ராதிகா புன்னகையுடன்.

அப்போது நான் 6 ஆம் வகுப்பு படிக்கும்போது திரையில் பார்த்த 'சின்னஞ்சிறு உலகம்'படத்தின் இளமை தவழும் கதாநாயகியான ராதிகா சைக்கிளில் 'புதுமைப் பெண்களடி' என்று உற்சாகமாக பாடியவாறு என் மன வெளியில் வலம் வந்தார். 

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version