Lekha Books

A+ A A-

மகாசக்தி! - Page 2

rasikkathane azhagu-mahasakthi

ஆண், பெண் இருவரும் சேர்ந்து சம்பாதித்தால்தான் குடும்ப வண்டியை ஓட்ட முடியும் என்ற பிரச்சனையை எதிர் கொண்டிருக்கும்  தவிர்க்க முடியாத சூழ்நிலையில், 'ஊரோடு ஒத்து வாழ்' என்கின்ற ரீதியில் வாழ்க்கை போக வேண்டியது மிகக்கட்டாயமானதாக ஆகிவிட்டது.

வீட்டிலேயே முடங்கி, அடங்கிக்கிடக்கும் வாழ்க்கைதான் நல்லது என்ற கூற்றில் நான் இவற்றைக் கூறவில்லை. அலுவலகம் சென்றாலும் ஆரோக்கியமான நடைமுறையாக இருக்கலாமே. வேலைக்குப் போகும் பெண்களின் வீட்டில் அவளுக்கு வீட்டு வேலைகளிலும், சமையல் வேலைகளிலும் குழந்தைகளைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பிலும் கணவன் உதவி செய்கிறாரா? பெரும்பாலான குடும்பங்களில் 'இல்லை' என்பதே மறுக்க முடியாத உண்மை. வயதான அம்மா, அப்பா, மாமியார், மாமனாரை விடுங்கள், இந்த 'கணவன்' எனும் குடும்பத் தலைவன் ஓரு சின்ன உதவி கூட செய்யாமல், தன்னுடைய வேலைகளைக்கூட  தானே கவனித்துக் கொள்ளாமல் எடுத்ததற்கெல்லாம் மனைவியை நொடிக்கு நூறு தரம் அழைப்பதுதான் நடக்கிறது.

வெளிநாடுகளிலும் கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு போகின்றனர். மனைவி, வீட்டிற்கு திரும்ப தாமதமானால்  கணவன், அவளுக்கும் சேர்த்து இரவு உணவை செய்து வைத்திருப்பான். பாத்திரம் கழுவும் இடத்தில் (Sink) உள்ள பாத்திரங்களை கழுவி வைத்திருப்பான். காலையில் இருவரும் சேர்ந்து சமைக்கிறார்கள். வீட்டை சுத்தம் செய்கிறார்கள். இது போன்ற சமத்துவம் இங்கே இல்லை.

இங்கே பெண்ணுக்கு மிஞ்சுவது சங்கடம் மட்டுமே. ஆனால் அந்த சங்கடங்களையும் சமாளித்து, சந்தோஷங்களாக மாற்றிக் கொள்ளும் சக்தி நம் பெண்களுக்கு நிச்சயமாய் உண்டு.

கணவன் இறந்து போனபின் மறுமணமே செய்து கொள்ளாமல் தன் குடும்பத்தையும், குழந்தைகளையும் தனி ஆளாய் நின்று வளர்த்து, ஆளாக்கி விடும் சக்திமிக்கவள் பெண். கணவனைப் பிரிந்த பெண்கள் கூட தனித்திருந்து ஒரு தவமாய் தன் பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கிறார்கள். இத்தகைய சக்தி பெண்களிடம் மட்டுமே உள்ளது என்று ஆணித்தரமாய் கூறுவேன்.

ஒரு ஆண், தன் மனைவியை பிரிந்திருந்தாலோ அல்லது இழந்திருந்தாலோ வெகு விரைவில் மறுமணம் செய்து கொள்கிறான். அவனால் தனித்து வாழ முடியாது. அவனால் தனித்து தன் பிள்ளைகளை வளர்க்கவும் முடியாது. 'தனியாக வாழ்வதா? பிள்ளைகளை வளர்ப்பதா' என்று மலைத்துப் போய், மனம் துவண்டு போவான். இதற்கு வடிகாலாக தனக்கு ஒரு மறுவாழ்க்கையைத் தேடிக் கொள்வான்.

ஒரு தகப்பன் தனியாக வாழ்ந்து, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது மிக மிக அபூர்வம். ஆனால் பெண், தன் மேல் சுமத்தப்படும் அத்தனை சுமைகளையும் சுமந்து, வெற்றி காண்கிறாள். இதனால்தான் பெண்களும், பெண்மையும் 'சக்தி' என்று போற்றப்படுகிறார்கள்.

பெண்கள் தங்களின் புத்திசாலித்தனத்தையும், தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கு அலுவலகப் பணிகள் ஆதாரமாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத நிகழ்வு! ஆனால் அதற்காக அவள் எத்தனை கஷ்டப்பட வேண்டி இருக்கிறது! எத்தனை தியாகங்கள் செய்ய வேண்டியதிருக்கிறது! ஆபிஸிலிருந்து வீடு திரும்ப தாமதமானல், வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் கணவன் உட்பட 'ஏன் இவ்வளவு லேட்?' என்று கடுமை தொனிக்க கேட்பார்கள். பஸ் காரணமாக தாமதமாகி இருக்கலாம். ஸ்கூட்டரில் போகும் வழக்கம் உடைய பெண் என்றால் ஸ்கூட்டர் பழுதாகி இருக்கலாம். 'ட்ராஃபிக்' காரணமாக இருக்கலாம். ஆபிஸில் எதிர் பாராதவிதமாக முக்கியமான வேலைகளை முடிக்க நேர்ந்திருக்கலாம். இவ்விதம் எத்தனையோ காரணங்கள் இருக்க, அதைக்கூட புரிந்து கொள்ளாமல் குடும்பத்தினர் கேட்கும் கேள்வியின் கடுமையைத் தாங்கிக் கொள்வதற்கு மிகவும் கஷ்டப்படுவாள்.

வீட்டிலும், ஆபிஸிலும் உழைத்து, சோர்ந்து போய் திரும்பி வரும் அந்தப்பெண், தனக்குள் கூனிக்குறுகிப் போவாள். அற்புதமான பெண்மையை அற்பப்புழுவாய் மதிப்பிடும் அந்தக் கணம், அவளது மனம் நொறுங்கிப் போகும். 'எதையும் தாங்கும் இதயம்' கொண்டு, பொறுமையாய் பதில் சொல்வாள். இயக்குனர் சிகரம்  திரு. கே. பாலச்சந்தர் படத்தில் வரும் 'மனம் பேசும் பேச்சு' (Mind Voice) போல அவளது மனம் மட்டுமே கேள்வி கேட்கும், நியாயம் கேட்குமே தவிர அவளது உதடுகளிலிருந்து எந்தக் கேள்விகளும் வெளிவராது.

 'ஏன் லேட்' என்று கடுமை தொனிக்க கேட்பதைக் கூட ஒரளவு தாங்கிக் கொள்ளலாம். சில கணவன்கள், வீட்டுப் பெரியவர்கள் ஆகியோர், தங்கள் மனதிற்குள் புதைந்திருக்கும் சந்தேகம் எனும் விஷத்தைக் கக்குவார்கள். இந்த விஷம் பாம்பின் விஷத்தை விட வீரியம் மிக்கது. கொடியது. அப்படி அந்தப் பெண் மீது சந்தேகம் எனில் ஏன் வேலைக்கு அனுப்ப வேண்டும்? 'வீட்டிலேயே சுகமாய் இரு. குடும்பப்  பொறுப்பை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஏன் சொல்லுவதில்லை?' 'அவள் சம்பளம் வேண்டும். ஆனால் அவனுக்கு சந்தேகமும் வரும். அதற்கு அப்பாற்பட்டவளாக அவள் வாழ வேண்டும்' என்ற எழுதப்படாத சட்டத்தை மறைமுகமாக நிர்ணயிப்பார்கள்.

திருமணம் ஆகாத பெண்கள் கூட பெற்றோராலும், உடன்பிறப்புகளாலும் இந்த சந்தேகம் எனும் வியாதிக்கு ஆளாகி சங்கடப்படுகிறார்கள். அந்நிய ஆண்களுடன் அலுவலகரீதியாகப் பழக நேரிடும் என்று தெரிந்துதான் வேலைக்கு அனுப்புகிறார்கள். அனுப்பிய பிறகு ஆயிரம் யோசனை யோசிக்கிறார்கள். ஆனால் மாதம் முடிந்து மாதம் பிறந்தால் அவளது சம்பளப் பணத்திற்கு ஆலாய்ப் பறக்கிறார்கள். இதென்ன நியாயம்? இதென்ன நேர்மை? வேலைக்கு அனுப்பப்படுவது மனைவியோ, மகளோ யாராக இருந்தாலும் முதலில் குடும்பத்தினருக்குத் தேவை நம்பிக்கை. நம்பிக்கைதான் தெளிவான வாழ்க்கை. இல்லை எனில் வாழ்க்கை என்பது கலங்கிய குட்டையாகி குழம்பி நிற்கும். நம் குடும்பத்து அங்கத்தினர்களை நாமே சந்தேகப்படுவது நம் மீது நாமே சேற்றை அள்ளிப் பூசிக் கொள்வதற்கு சமம்.

 'சக்தி' என்ற சொல்லில் தீ என்பது மறைமுகமாக உள்ளது. 'சக்தி' 'சக்தி' என்று போற்றப்பட்டு வந்த பெண், நாளடைவில் தூற்றப்பட்டு வருகிறாள். ஒட்டு மொத்தமாக அனைவரையும் குற்றம் கூற முடியாது. சந்தேகம் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் மிக வன்மை யானவை. பூங்கொடி போன்ற பெண்கள் புயலாய் உருமாறுவதும் இந்த சந்தேகம் எனும் சாத்தானால்தான்.

 அதே சமயம் தங்கள் மகள்/மனைவி வேலைக்கு செல்லும் பட்சத்தில் அவர்களைக் கண்ணின் கருமணியாய் பாதுகாக்கும் கணவன், தாய், தகப்பனும் இருக்கிறார்கள். அலுவலகம் சென்று வரும் அலுப்பு தீர அவளுக்கு உணவு கொடுத்து உபசரிப்பது, வீட்டில் அவளுக்கு அதிக வேலைகள் கொடுக்காமல் இருப்பது, துணைக்கு அவளுடன் சென்று வருவது போன்ற செயல்களால் பெண் எனும் சக்திக்கு உதவிக்கரம் நீட்டும் அவர்களது நேயம், போற்றுதலுக்குரியது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பிசாசு

பிசாசு

November 12, 2013

கிளி

கிளி

July 25, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel