Category: சினிமா Published Date Written by சுரா Hits: 2894
மீ பிஃபோர் யூ (Me Before You)
(2016 - பிரிட்டிஷ் - அமெரிக்க திரைப்படம்)
சுரா
2016ஆம் ஆண்டில் திரைக்கு வந்த பிரிட்டிஷ்- அமெரிக்க திரைப்படம். இப்படத்தின் இயக்குநர் தியா ஷராக். இவர் ஒரு பெண் இயக்குநர். இவர் இயக்கிய முதல் படமிது. இதே பெயரில் ஜோஜோ மொயெஸ் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய புதினமே இந்தப் படத்திற்கு அடிப்படை.
ஐக்கிய குடியரசை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு வரலாற்றில் பதிவான பல இடங்களிலும் நடந்தது. வேல்ஸில் இருக்கும் பேம்ப்ரோக் கோட்டை, இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் ஷைரில் உள்ள செனீஸ் மேனர் ஹவுஸ் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இந்தப் படத்தின் கதாநாயகன் ஸாம் க்ளாஃப்லின். கதாநாயகியாக நடித்தவர் திறமை வாய்ந்த நடிகையான எமிலியா க்ளார்க்.
இப்படத்திற்கு ‘பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது’ கிடைத்தது. சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான ‘எம்.டி.வி. விருது’க்காக ஸாம், எமிலியா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
இது ஒரு முக்கோண காதல் கதை. ஆரம்பத்திலிருந்து இறுதி வரை இளம் நெஞ்சங்களில் இடம் பிடிக்கக் கூடிய வகையில், கவித்துவத் தன்மை கொண்ட காட்சிகளுடன் படத்தை இயக்கிய தியா ஷராக்கை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும்.
‘மீ பிஃபோர் யூ’ படத்தின் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ.....
லூயிஸா க்ளார்க் 26 வயது கொண்ட ஒரு இளம் பெண். அவள் ஒரு உணவகத்தில் பணி புரிகிறாள். அவளின் வருமானத்தை நம்பித்தான் அவளுடைய குடும்பம் இருக்கிறது. திடீரென்று ஒரு நாள் அவளை அந்த பணியிலிருந்து நீக்கி விடுகிறார்கள். அதைக் கேட்டு அவள் அதிர்ச்சியடைகிறாள். அவளுடைய தந்தையும், தாயும் உள்ள மொத்த குடும்பமும் கூடத்தான்......
ஆனால், சில நாட்களிலேயே அவளுக்கு ஒரு பணி கிடைக்கிறது. மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிக்கி, உடல் ரீதியாக செயல்பட முடியாமல் இருக்கும் நல்ல வசதி படைத்த இளைஞனான வில் ட்ரேய்னரை அவள் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் அவள் பார்க்க வேண்டிய வேலை.
முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்து, துயர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் வில்லுக்கு ஆரம்பத்தில் லூயிஸாவின் மீது எந்த பிடிமானமும் உண்டாகவில்லை. அவளை ஒருவித வெறுப்புடனே அவன் பார்க்கிறான்.
ஆனால், சில சம்பவங்களைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே நல்ல நட்பு உண்டாகிறது. இருவரும் தினமும் பல விஷயங்களைப் பற்றி உரையாடுகிறார்கள் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்த அனுபவங்களைப் பெற்றவனாக இருக்கிறான் வில். லூயிஸாவோ தன் குடும்பத்தைத் தவிர, வேறு எந்த உலகமும் தெரியாதவளாக இருக்கிறாள். அவளுடைய உலகத்தையும், பார்வையையும் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அக்கறையுடன் கூறுகிறான் வில்.
லூயிஸாவுக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவனுடைய பெயர் பேட்ரிக். அவனும் லூயிஸாவும் அடிக்கடி சந்திக்கிறார்கள். தங்களுடைய விஷயங்களைப் பற்றி ஆழமாக பேசிக் கொள்கிறார்கள். ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட அவன், நார்வேயில் நடைபெறும் ஓட்டப் பந்தய போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறான்.
மனம் வெறுத்து, தற்கொலை செய்து கொள்வதற்குக் கூட முன்பு வில் முயன்றிருக்கிறான் என்ற தகவலைத் தெரிந்து கொண்ட லூயிஸா, அவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறாள். அவனை அவள் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறாள். வாழ்வின் உன்னதத்தை அவனுக்கு அவள் புரிய வைக்க முயற்சிக்கிறாள். இருவரும் சேர்ந்து குதிரைப் பந்தயம் பார்க்க செல்கிறார்கள்..... அதில் பங்கு பெறுகிறார்கள்..... இசை மேதை மொஸார்ட்டின் இசை நிகழ்ச்சிக்குச் செல்கிறார்கள்.
தொடர்ந்து அவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் செல்கிறார்கள். அது.... முன்பு வில்லின் தோழியாக இருந்த அலிஸியாவின் திருமணம். அங்கு அனைவருக்கு முன்பும் வில்லும் லூயிஸாவும் நெருக்கமாக இருக்கிறார்கள்....... நடனமாடுகிறார்கள்......
லூயிஸாவின் பிறந்த நாளன்று, அவளுடைய வீட்டிற்கு வந்து, அவளுக்கு அன்புப் பரிசு அளிக்கிறான் வில். தான் பார்த்த வேலையை இழந்த லூயிஸாவின் தந்தைக்கு தன் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறான். இவற்றையெல்லாம் பார்த்த..... கேள்விப்பட்ட லூயிஸாவின் நண்பனும், அவளை உயிரென நேசித்தவனுமான பேட்ரிக் மிகுந்த பொறாமைக்கு ஆளாகிறான். அதன் விளைவாக பல வருடங்களாக அவனுக்கும் லூயிஸாவுக்குமிடையே இருந்து வந்த நட்பு முறிந்து போகிறது. கவலை படர்ந்த முகத்துடன் அவளிடமிருந்து விலகிச் செல்கிறான் பேட்ரிக்.
வில்லும் லூயிஸாவும் மொரிஷியஸுக்குப் பயணமாகிறார்கள். அங்கு தங்கியிருக்கும்போது, அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாகிறது. அதைத் தொடர்ந்து லூயிஸா மட்டும் திரும்பி வருகிறாள். அவள் அந்த பணியிலிருந்து விலகுகிறாள்.
வில் ஸ்விட்சர்லாந்துக்குச் செல்கிறான். தன் தந்தை வற்புறுத்தியதற்காகவும், வில்லுக்கு உதவியாக இருப்போமே என்று முடிவு செய்ததாலும், தன் மனதை மாற்றிக் கொண்ட லூயிஸா ஸ்விட்சர்லாந்துக்குப் பயணமாகிறாள். அவளுடைய வருகை வில்லுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. அவனுடன் மிகவும் நெருக்கமாக தன் நேரத்தைச் செலவிடுகிறாள் லூயிஸா. நம்பிகையிழந்து வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளைஞனின் வாழ்வில் ஒரு சுகமான தென்றலாக வீசுகிறாள் லூயிஸா.
சில வாரங்களில் வில் மரணத்தைத் தழுவுகிறான். லூயிஸா பாரிஸில் இப்போது தனக்குப் பிடித்த காஃபியகத்தில் அமர்ந்திருக்கிறாள். இறப்பதற்கு முன்பு வில் எழுதிய கடிதத்தை அவள் வாசிக்கிறாள். தான் ஆசைப்படும் வாசனைப் பொருட்கள் விற்கப்படும் கடையை (பெர்ஃப்யூம் ஷாப்) உடனடியாக ஆரம்பிக்கும்படி அவளை ஊக்கப்படுத்தி எழுதியிருக்கும் அவன், அவளுடைய கனவுகள் நிறைவேறுவதற்குத் தேவையான பணத்தை தான் விட்டுச் செல்வதாக. அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறான். வில்லை இழந்த கவலை ஒரு பக்கம் இருந்தாலும், தன் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் வில்லின் உருவத்தை மனதிற்குள் நினைத்தவாறு நடந்து கொண்டிருக்கிறாள் லூயிஸா. அத்துடன் படம் முடிவடைகிறது.
வில் கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்திருந்தார் ஸாம் க்ளாஃப்லின். லூயிஸா கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார் எமிலியா க்ளார்க். அவரின் அப்பாவித்தனம், சுறுசுறுப்பு, முக வெளிப்பாடு..... அத்தனையையும் முழுமையாக ரசிக்கலாம். இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு அவர்!
பல கதாபாத்திரங்கள் படத்தில் வந்தாலும், பிரதான கதாபாத்திரங்கள் இரண்டுதான்! அவற்றை வைத்து படத்தை சுவாரசியம் குறையாமல் இயக்கிய பெண் இயக்குநரான தியா ஷராக் பாராட்டிற்குரியவர்.
வில்-லூயிஸா பங்கு பெறும் அனைத்துக் காட்சிகளிலும் புதுமை...... இளமை! அதனால்தான் அந்த காட்சிகளை நம்மால் நம்மை மறந்து ரசிக்க முடிகிறது. அந்த கதாபாத்திரங்களுடன் இரண்டற கலக்க முடிகிறது.
லூயிஸாவின் கனவு, வில்லின் முயற்சியால் நிறைவேறப் போவதை அறிந்து, அவளுடன் சேர்ந்து நாமும் சந்தோஷப்படுகிறோம்! உற்சாகத்தில் குதிக்கிறோம்! அவளின் தியாக உள்ளத்திற்கும், முழுமையான அர்ப்பணிப்பிற்கும் அவளுடைய எதிர்கால வாழ்க்கை ஒளி மயமாக இருப்பதுதான் நியாயம்! அத்தகைய பிரகாசமான வாழ்க்கையை லூயிஸா வாழட்டும்! பாரிஸில் நறுமண பொருட்கள் விற்கப்படும் கடையை நடத்த இருக்கும் அவளின் வாழ்க்கையில் தினமும் நறுமணம் கமழட்டும்!