Category: சினிமா Published Date Written by சுரா Hits: 5345
பாலைவன மணல் பகுதியில் ஆடுகள் பிரசவித்த குட்டிகள் இங்குமங்குமாக இறந்து கிடக்கின்றன, இந்த விஷயத்தை மிருக மருத்துவரின் பார்வைக்குக் கொண்டு செல்கிறான் ஓன்டாஸ். அவர் ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய மனிதர். அவர் ஒரு நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகக் குட்டியை ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் ஏற்றி வைத்தவாறு அங்கு வருகிறார். இறந்து கிடக்கும் ஆட்டுக்குட்டியின் வாயைப் பிளந்து இப்படியும் அப்படியுமாக பார்க்கிறார். அது இறந்து விட்டது, பிழைப்பதற்கு வழியில்லை என்பது தெரிந்தவுடன், புழுதி பறக்க, தன் மோட்டார் சைக்கிளில் ஒட்டகக் குட்டியுடன் அவர் கிளம்புகிறார்.
ஆஸாவிற்கு தன் சகோதரியின் கணவன் ஓன்டாஸுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடும், சண்டையும் உண்டாகும். அந்த மாதிரி நேரங்களில் 'நான் இங்கிருந்து கிளம்புகிறேன்' என்று கோபத்துடன் கிளம்புவான் ஆஸா. பரந்து கிடக்கும் பாலைவனப் பகுதியில் கோபித்துக் கொண்டு செல்லும் தன் தம்பியைப் பின் தொடர்ந்து ஓடுவாள் சமல். கண்ணீர் மல்க அவனிடம் கெஞ்சி, மீண்டும் அவனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வருவாள் சமல். தன் தம்பியின் மீது உயிரையே வைத்திருக்கும் அன்பு மனம் கொண்ட அருமையான அக்கா அவள்!
சமலின் குடும்பம். அவளின் மகள் கிராமிய பாடலை பாடிக் கொண்டிருக்கிறாள். மகன் ரேடியோவில் உலக செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். எல்லோருக்கும் இளைய மகன் தன் விருப்பப்படி எல்லோரையும் அடித்தவாறு, வீடெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறான். சமல் தன் கவலைகள் அனைத்தையும் மறந்து, காற்றைக் கிழித்துக் கொண்டு பாடுகிறாள். அவர்கள் எல்லோரையும் பார்த்தவாறு படுத்திருக்கிறான் ஓன்டாஸ்.
துல்பனின் வீட்டு வாசலில் போய் நிற்கிறான் ஆஸா. அவனுடன் போனியும். மூடப்பட்டிருந்த கதவிற்கு வெளியே நின்று துல்பனை அழைக்கிறான் ஆஸா. பல முறை அழைத்தும், கதவு திறக்கப்படவில்லை. அப்போது அங்கு வேகமாக வருகிறாள் துல்பனின் தாய். 'துல்பன் இங்கு இல்லை. நீ இங்கிருந்து புறப்படு. இனிமேல் இங்கு நீ வரக் கூடாது. உன்னை என் மகளுக்குப் பிடிக்கவில்லை. நீ கொண்டு வந்த சர விளக்கை நீயே எடுத்துக் கொள்' என்று கூறி, சர விளக்கை அவனிடமே திருப்பித் தருகிறாள். அத்துடன் நிற்காமல், அவனை விரட்டியும் அடிக்கிறாள். தன்னுடைய கனவு தேவதையாக கற்பனை பண்ணிய துல்பன் இனிமேல் தனக்கு இல்லவே இல்லை என்ற மிகப் பெரிய ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்புகிறான் ஆஸா. அவனுடைய நிலைமையைப் பார்த்து உண்மையிலேயே நமக்குக் கூட வருத்தம் உண்டாகத்தான் செய்கிறது.
சமலின் கணவன் ஓன்டாஸுடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு வேகமாக கிளம்பிச் செல்கிறான் ஆஸா. சமல் அவனுக்குப் பின்னால் ஓடுகிறாள். திரும்பி வரும்படி கெஞ்சுகிறாள். ஆனால், அவன் கேட்பதாக இல்லை. இன்னும் வேகமாக நடக்கிறான். கண்களில் கண்ணீர் வழிய, புயலென செல்லும் தன் அன்புத் தம்பியையே பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறாள் சமல்.
பாலைவனப் பகுதி. பரந்து கிடக்கும் வறண்டு போன வெட்ட வெளியில் வேகமாக நடந்து வந்து கொண்டிருக்கிறான் ஆஸா. அப்போது ஒரு இடத்தில் கர்ப்பமான ஒரு செம்மறி ஆடு வேதனையுடன் படுத்திருக்கிறது. அது பிரசவமாகக் கூடிய நிலையில் இருக்கிறது. அதைப் பார்த்து 'ஓன்டாஸ்... ஓன்டாஸ்...' என்று சத்தம் போடுகிறான் ஆஸா. ஆனால், எங்கோ இருக்கும் ஓன்டாஸின் காதுகளில் அது எப்படி விழும்? ஆஸாதான் ஆட்டின் பிரசவ காட்சியை ஏற்கெனவே பார்த்திருக்கிறானே! அந்த அனுபவத்தில் அவன் தன் கைகளை பயன்படுத்தி ஆட்டுக்குட்டியின் வெளியே வந்த கால்களை இழுத்து, அதை வெளியே எடுக்கிறான். சிறிது சிறிதாக ஆட்டுக் குட்டியின் தலைப் பகுதி வெளியே வருகிறது. புழுதியில் விழுந்து அது சுருண்டு கிடக்கிறது. அதன் வாயில் தன் வாயை வைத்து காற்றை ஊதுகிறான் ஆஸா. ஆட்டுக்குட்டி மெதுவாக அசைகிறது. அதற்கு எந்த ஆபத்தும் இல்லை. அதை தாய் ஆட்டின் அருகில் போய் போடுகிறான் ஆஸா. தாய் ஆடு தன் குட்டியை வாஞ்சையுடன் நக்கி, பால் தருகிறது. அந்த அழகான காட்சியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் ஆஸா. ஒரு ஆட்டின் பிரசவத்தைத் தன்னுடைய கையால் நிறைவேற்றிய மிகப் பெரிய பெருமிதம் அவனுடைய முகத்தில்!
சமலின் கூடாரம் பிரிக்கப்படுகிறது. கூடாரமும், வீட்டிற்குள் இருந்த பொருட்களும் வாகனத்தில் ஏற்றப்படுகின்றன. சமல், அவளுடைய இரண்டு மகன்கள், ஒரு மகள் அனைவரும் அதில் ஏறுகின்றனர். அவர்கள் அங்கிருந்து வேறு இடத்திற்குக் கிளம்புகின்றனர். இன்னொரு பாலைவனப் பகுதிக்கு. அவர்கள் வேறு எங்கு போவார்கள்? இது அவர்களுக்குப் பழகிப் போன விஷயம்தானே!
அந்த ஏழ்மையான குடும்பத்திற்குப் பின்னால் அவர்களுடைய ஆட்டு மந்தை.
அதற்குப் பின்னால் கழுதையில் அமர்ந்திருக்கும் ஓன்டாஸ். அவனுக்கு அருகில்.... ஆஸா! அவன் வேறு எங்கு போவான்?
அந்த விரிந்து கிடக்கும் பாலைவனத்தில் அவர்கள் இன்னொரு இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள். அந்த ஏழை உயிர்களுக்கும், ஆட்டு மந்தைக்கும் பின்னால் ஒரே தூசிப் படலம்!
அவற்றையெல்லாம் தாண்டி அந்த அன்பு உள்ளங்களும், அந்த செம்மறி ஆடுகளின் கூட்டமும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து, ஒரு புதிய உலகத்தையே பார்க்கக் கூடிய மிகப் பெரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்த உணர்வுடன் நாம் அமர்ந்திருக்கிறோம்.
தான் பார்த்த மக்களின் சந்தோஷம், கவலைகள், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், இலட்சியம் அனைத்தையும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உயிரோட்டத்துடன் சித்தரித்த இயக்குநர் செர்ஜெய் ட்வார்ட்ஸெவாய்க்கு -- ஒரு ராயல் சல்யூட்!