Category: சினிமா Published Date Written by சுரா Hits: 4337
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
பால்ஸாக் அன்ட் த லிட்டில் சைனீஸ் ஸீம்ஸ்ட்ரெஸ் – Balzac and the Little Chinese Seamstress
(சீன திரைப்படம்)
சி
ல திரைப்படங்களைப் பார்த்தவுடன் நாம் மறந்து விடுவோம். சில படங்கள் நாட்கணக்கிலோ, வாரக் கணக்கிலோ நம் மனங்களில் நின்று கொண்டிருக்கும். ஒரு சில திரைப் படங்கள்தாம் பல மாதங்கள் கடந்து போன பிறகும், பல வருடங்கள் கடந்தோடிய பிறகும், சிறிதும் மறையாமல் நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் பசுமையாக அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கும். அத்தகைய ஒரு படம் இது.
2002 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் 111 நிமிடங்கள் ஓடக் கூடியது.
சீனா- ஃப்ரெஞ்ச் கூட்டுத் தயாரிப்பில் உருவான இப்படம் `Mandarin' மொழியில் எடுக்கப்பட்டது.
படத்தின் இயக்குநர் Dai Sijie.
2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.
Dai எழுதிய இதே பெயரைக் கொண்ட புதினம்தான், 'Balzac and the Little Chinese Seamstress' படத்திற்கான அடிப்படை. சீனாவில் கலாச்சார புரட்சி நடைபெற்ற காலத்தில், Sichuan பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு சீர்திருத்தக் கல்விக்காக இரண்டு பதின்பருவத்தில் உள்ள இளைஞர்கள் அனுப்பப்படுகிறார்கள். அவர்களையும், அவர்கள் சென்ற கிராமத்திற்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பேரழகு படைத்த ஒரு இளம் பெண்ணையும் சுற்றி பின்னப்பட்டதே இப்படத்தின் கதை.
1971 லிருந்து 1974 வரை நடைபெறுவதாக படத்தின் கதை காட்டப்படுகிறது. கிராமத்திற்கு வரும் இரு இளைஞர்களில் ஒருவனின் பெயர் Luo Min. இன்னொருவனின் பெயர் Ma Jianling. அவர்கள் வந்து சேரும் அந்த கிராமம் ஒரு அழகான மலைப் பகுதியில் இருக்கிறது. கிராமத்திற்குள் நுழைந்தவுடன், கிராமத்தின் தலைவரால் அந்த இரு இளைஞர்களும் சோதிக்கப்படுகிறார்கள். அவர்களின் குடும்பப் பின்னணி பற்றி அவர் விசாரிக்கிறார். லுவோவின் தந்தை ஒரு பல் வைத்தியர் என்பதும், மாவின் தந்தை ஒரு டாக்டர் என்பதும் தெரிய வருகிறது. இளைஞர்களின் பைகளை கிராமத்தின் தலைவர் சோதித்துப் பார்க்கிறார். அப்போது அவருடைய கையில் ஒரு சமையல் புத்தகம் கிடைக்கிறது. அதை அவர் உடனடியாக எரித்து விடும்படி ஆணை பிறப்பிக்கிறார். `பூர்ஸுவாக்களின் சொத்து' அது என்கிறார் அவர். மாவின் பையில் ஒரு வயலின் இருக்கிறது. அதை நெருப்பில் அவர் போட்டு எரிக்க முயல்கிறார். அதை வேகமாக தடுத்து நிறுத்தி விடுகிறான் லுவோ. அந்த வயலினை வைத்து 'Mozart is Thinking of Chairman Mao' என்ற `மலை பாடலை' மா அருமையாக வாசிப்பான் என்று பொய் சொல்கிறான் லுவோ. அதைக் கேட்டு அந்த வயலினை விட்டு விடுகிறார் கிராமத்தின் தலைவர்.
அந்த இரு இளைஞர்களுக்கும் ஒரு வீடு தரப்படுகிறது. அந்த கிராமத்து மனிதர்களுடன் சேர்ந்து அவ்விருவரும் பல்வேறு வேலைகளையும் செய்கின்றனர். அவர்கள் மனிதக் கழிவுகளை வாளிகளில் பயிர்களுக்கு உரமாக எடுத்துக் கொண்டு போய் போடுகின்றனர். அங்கிருக்கும் நிலக்கரிச் சுரங்கத்திற்குச் சென்று வேலை பார்க்கின்றனர்.
ஒரு நாள் பக்கத்திலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் அந்த ஊருக்கு வருகிறாள். பார்ப்போரைக் காந்தமென சுண்டி இழுக்கக் கூடிய பேரழகு படைத்த அழகு தேவதை அவள். பக்கத்து கிராமத்திலிருக்கும் ஒரு வயதான தையல்காரரின் பேத்தி அவள். தன் தாத்தாவுடன் அவள் இளைஞர்கள் தற்போது இருக்கும் கிராமத்திற்கு வரும்போது, மா வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் -மா வயலின் இசைப்பதைக் கேள்விப்பட்டுத்தான் அந்த பெண்ணே அங்கு வருகிறாள். லுவோவும், மாவும் அந்த இளம் பெண்ணுக்கு மிக விரைவிலேயே நண்பர்களாக ஆகிறார்கள்.
அந்த இரு இளைஞர்களும் அந்த இளம் பெண்ணின் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அந்த பெண் படிப்பறிவு இல்லாதவள். ஆனால், உலகத்தில் நடைபெறும் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடியவள் அவள். பலவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கு கொண்டவளாக அவள் இருக்கிறாள். சாதாரண கிராமத்துப் பெண்ணாக இருக்கக் கூடாது, அறிவு நிறைந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப் படுகிறாள்.
இரு இளைஞர்களும் அந்த கிராமத்து இளம் பெண்ணை முற்றிலும் மாற்றுவதாக உறுதி அளிக்கின்றனர். அதற்காக அவர்கள் அவளிடம் ஒரு திட்டம் வகுத்து தருகின்றனர். அதன்படி அந்த கிராமத்தில் வாழும் வேறொரு இளைஞனிடம் இருக்கக் கூடிய சூட்கேஸைத் திருடிக் கொண்டு வருவது என்று அவர்கள் திட்டம் தீட்டுகிறார்கள். அந்த இளைஞனும் அவர்கள் இருவரையும் போல சீர் திருத்த கல்விக்காக வந்திருப்பவன்தான். ஆனால், அவன் நிரந்தரமாக நகரத்திற்குத் திரும்பிச் செல்லும் நிலையில் இருக்கிறான். அவனுடைய சூட்கேஸிற்குள் தடை செய்யப்பட்ட மேற்கத்திய நாடுகளின் நாவல்களின் மொழி மாற்ற புத்தகங்கள் இருக்கின்றன. சீனாவில் கலாச்சார புரட்சி நடைபெறுவதால், அந்த நாவல்கள் அந்த நாட்டில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.