Category: சினிமா Published Date Written by சுரா Hits: 4415
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஹவ் ஓல்ட் ஆர் யூ? – How Old Are You?
(மலையாள திரைப்படம்)
நான் சமீபத்தில் பார்த்து வியந்த மலையாள திரைப்படம் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ?' நடிகர் திலீப்பிடமிருந்து குடும்ப வாழ்க்கையில் பிரிந்த பிறகு, மஞ்சு வாரியர் நடித்த படம். அதனால் இந்த படத்திற்கு ஆரம் பத்திலிருந்தே ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை நூறு சதவிகிதம் சந்தோஷப்படும் அளவிற்கு நிறைவேற்றி தந்திருக்கிறார் படத்தின் இயக்குநரான ரோஷன் ஆன்ட்ரூஸ்.
பரபரப்பாக பேசப்பட்ட அப்படத்தின் கதைதான் என்ன? கதை இதோ:
நிருபமா ராஜீவ் ஒரு குடும்பத் தலைவி. 36 வயதான அவள் வருவாய் துறை அலுவலகத்தில் ஒரு க்ளார்க்காக பணியாற்றுகிறாள். அவளுடைய கணவன் ராஜீவ் நாராயணன் 'ஆகாஷ் வாணி'யில் அறிவிப்பாளராக பணியாற்றுகிறான். அவர்களுக்கு ஒரு மகள். அவள் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். ராஜீவிற்கு அயர்லேண்டிற்குச் சென்று செட்டிலாகி விட வேண்டும் என்பது பல வருட ஆசை. அவனுக்கும் மகளுக்கும் விசா கிடைத்து விடிகிறது. நிருபமாவிற்கு எவ்வளவோ முயற்சி செய்தும், விசா கிடைக்கவில்லை. அவளின் வயது ஒரு காரணம். இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்திய குடியரசு தலைவர் கலந்து கொண்ட ஒரு அரசு விழாவில், அவருக்கு முன்னால் பதட்டத்தின் காரணமாக அவள் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுகிறாள். அந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகி விடுகிறது. அன்றிலிருந்தே எல்லோருக்கும் அவள் கேலிப் பொருளாக ஆகி விடுகிறாள்.
விசா கிடைக்காத காரணத்தால், அவளுடைய கணவனும், மகளும் மட்டும் அயர்லேண்டிற்கு கிளம்பி விடுகின்றனர்.
ஒரு சாதாரண பெண்ணாக அலுவலகத்திற்கு போய் வந்து கொண்டிருக்கிறாள் நிருபமா.
இந்தச் சூழ்நிலையில் அவளை ஒருநாள் சிறிதும் எதிர்பாராமல் சந்திக்கிறாள் அவளுடைய தோழியும், அவளுடன் ஒரு காலத்தில் சேர்ந்து படித்தவளுமான சூசன் டேவிட். அவள் ஒரு தொழிலதிபராக இருக்கிறாள். நிருபமாவின் இப்போதைய சராசரி தோற்றத்தையும், சுறுசுறுப்பற்ற போக்கையும் பார்த்து அவள் மிகவும் ஆச்சரியப்படுகிறாள். ஒரு காலத்தில் கல்லூரியில் மிகச் சிறந்த மாணவியாகவும், பல நல்ல விஷயங்களுக்காக போராடியவளாகவும், பலரின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்த அந்த நிருபமாவா இவள் என்று அவள் வியப்புடன் நினைக்கிறாள். தான் மனதில் நினைப்பதை அவளிடம் வெளியிடவும் செய்கிறாள். திருமண வாழ்க்கை அவளை எந்த அளவிற்கு கோழையாகவும், தன்னம்பிக்கையற்றவளாகவும் மாற்றி விட்டிருக்கிறது என்பதை நினைக்கிறாள். அவளை தான் பார்த்த பழைய நிருபமாவாக அவள் மாற்ற முயற்சிக்கிறாள்.
இதற்கிடையில் தன் வீட்டின் மொட்டை மாடியில் தான் இது வரை இயற்கை உரங்களைப் போட்டு 'ஆர்கானிக்' முறையில் வளர்த்த காய்கறி தோட்டத்தை அழிக்க நினைக்கிறாள் நிருபமா. தான் இனிமேல் அதை கவனிக்க முடியாது என்பதே காரணம். அங்கிருந்த காய்கறிகளைப் பறித்து அவள் தனக்கு தெரிந்த ஒரு வேலைக்காரப் பெண்ணிடம் தருகிறாள். அந்தப் பெண் அவற்றைக் கொண்டு போய் தான் வேலை செய்யும் வீட்டில் கொடுக்க, அந்த வீட்டின் உரிமையாளர் காய்கறியின் சுவையைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து விடுகிறார். அந்த காய்கறிகளைப் பயிரிட்டு உருவாக்கிய நிருபமாவை வர வைக்கிறார். இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் தன் மகனின் திருமணத்தின் விருந்தின்போது தேவைப்படும் காய்கறிகள் முழுவதையும் சப்ளை செய்ய முடியுமா என்று அவளிடம் அவர் கேட்கிறார். அதுவும் 2000 பேருக்கு. ஏதோ ஒரு நம்பிக்கையில் சரி என்று தலையை ஆட்டி விடுகிறாள் நிருபமா. சிறிய அளவில் தன் வீட்டு தேவைக்கென காய்கறி பயிரிட்டுக் கொண்டிருந்த அவள் 2000 பேருக்கு தேவைப்படும் காய்கறிகளை எப்படி உருவாக்குவாள்?அதற்கான நிலத்திற்கு எங்கே போவது?