Category: சினிமா Published Date Written by சுரா Hits: 4312
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
லோக்பால் - Lok Pal
(மலையாள திரைப்படம்)
2013ம் ஆண்டு ஜனவரியில் திரைக்கு வந்த படம்.
அரசியல் பின்னணி கொண்ட பல மாறுபட்ட கதைக் கருக்களைத் திரைப்படங்களாக எடுத்து தனக்கென ஒரு அருமையான பெயரைப் பெற்று வைத்திருக்கும் ஜோஷி இயக்கிய படம். ஜோஷி இயக்கி பரபரப்பாக பேசப்பட்ட ‘நியூடெல்லி’ படத்தை நம்மால் மறக்க முடியுமா?
ஜோஷியின் கை வண்ணத்தில் உருவாகும் படம் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உண்டாகத்தானே செய்யும்?
போதாததற்கு- இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பவர்- மோகன்லால்.
அரசியல் வாதிகளும், அமைச்சர்களும், காக்கிச் சட்டை அணிந்திருக்கும் காவல் துறை அதிகாரிகளும், கல்விக் கூடங்களை நடத்திக் கொண்டிருக்கும் ‘கல்வித் தந்தை’களும் எந்த அளவிற்கு கோடிக் கணக்கில் மக்களிடம் பணத்தைக் கொள்ளையடித்து ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதன் ‘லோக் பால்’ (மக்களின் காவலன்) என்ற பெயரில் அந்த ஊழல் செயல்களைக் கண்டு பிடித்து, அவர்களை எப்படி இரவும் பகலும் தூங்க விடாமற் செய்து, அந்தப் பணத்தை எப்படி அவர்களிடமிருந்து துணிச்சலாகத் தட்டியெடுத்து, மக்களிடமே கொண்டு போய் சேர்க்கிறான் என்பதுதான் இப்படத்தின் கதை.
படத்தின் ஆரம்ப காட்சியே சூட்கேஸில் பணத்தைக் கொண்டு வந்து அமைச்சரிடம் கொடுக்கும் காட்சிதான். அந்தக் காட்சிக்கு அடுத்த காட்சியிலேயே ‘லோக்பா’லின் அவதாரம் ஆரம்பமாகி விடும். இருண்ட அறைக்குள் சாய்வு நாற்காலியாக கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு ‘நான்தான் லோக்பால் பேசுகிறேன்’ என்று மோகன்லால் தனக்கே உரிய தெளிவான குரலில் பேசுவார். தொடர்ந்து அவரின் அதிரடி நடவடிக்கைகள்தான்...
அரசியல் பிரமுகர்களையும், தொழிலதிபர்களையும், அரசாங்க அதிகாரிகளையும், ஆட்சி மய்யங்களையும் விரல் விட்டு ஆட்டி அவர்களை கலங்கடித்துக் கொண்டிருக்கும் ‘லோக்பால்’ என்ற மனிதன் யார்? அவன் எங்கு இருக்கிறான்? இப்படியொரு அபார திறமை அவனுக்கு எங்கிருந்து வந்தது? ஊழல் செய்து பல மாடிகளுக்கு மேலே மிகவும் பத்திரமாக காப்பாற்றி வைத்திருக்கும் பணத்தை அவன் எப்படி ‘ஹை டெக்’ உத்திகளை பயன்படுத்தி கவர்ந்து செல்கிறான் என்று மக்களும், அவனின் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களும் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பதுதான் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது.
‘லோக்பால்’ என்றால், ஏதோ வெளிநாட்டு கார்களிலோ, வேகமாக பறக்கும் விமானங்களிலோ பயணம் செய்து, துப்பாக்கிகளுடனும், ஒரே நேரத்தில் பலரைக் கொல்லும் மெஷின்-கன்களுடனும், ரைஃபில்களுடனும், நூற்றுக் கணக்கான அடியாட்களுடனும் ‘சூப்பர் மேனாக’ வலம் வந்து கொண்டிருப்பான் என்று யாராவது எதிர்பார்த்தால், நிச்சயம் அவர்கள் ஏமாந்து விடுவார்கள்.
அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. காவல் நிலையத்திற்கு அருகிலேயே இருக்கும் ஒரு ரெஸ்ட்டாரெண்டில் ‘செஃப்’ஆக இருப்பவன்தான் மாநிலத்தையே ஆட்டிப் படைத்து, தினமும் நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாகவும், வார இதழ்களின் முகப்புக் கட்டுரைகளாகவும், தொலைக்காட்சி ஊடகங்களின் நாயகனாகவும் இருக்கும் ‘லோக் பால்’ என்றால், யாராவது நம்புவார்களா?
‘நந்து’ஸ் ஃபுட் கோர்ட்’டின் தலைமை செஃப்ஆக இருக்கும் நந்தகுமாராக - மிகவும் சாதுவாக சமையல் செய்யும் இடத்தில் அமர்ந்து கொண்டு, தக்காளியையும், உருளைக் கிழங்கையும், புடலங்காயையும் அனாயாசமாக வெட்டிக் கொண்டிருக்கும் மனிதன்தான், நினைத்துப் பார்க்க முடியாத சாகசச் செயல்களைச் செய்யும் ‘லோக் பால்’ என்பதை நாமே ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்கும் போது, படத்தில் வரும் ‘லோக் பால்’ என்ற அந்த கதாபாத்திரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி பிரமித்துப் போய் இருப்பார்கள்!
ஷங்கரின் ‘இந்தியன்’ ‘அந்நியன்’ ஆகிய படங்களிலும், கார் வண்ணன் இயக்கி, முரளி நடித்த ‘புதிய காற்று’ படத்திலும், அஜீத் நடித்த ‘சிட்டிஸன்’ படத்திலும் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கும் அதே விஷயங்கள்தான்... எனினும், சிறிதும் சோர்வு உண்டாகாமல் நம்மால் அதைப் பார்க்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம்- மோகன்லாலின் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு!
எந்தவித செயற்கைத் தனமும் இல்லாமல், மிகைப்படுத்தலும் இல்லாமல் ‘செஃப்’ நந்தகுமாராக வரும்போதும் சரி... ‘லோக்பால்’ கதாபாத்திரத்தில் வரும்போதும் சரி... மனிதர் தன்னுடைய முப்பத்து மூன்று வருட படவுலக அனுபவங்களைக் கொண்டு, ஒரு போர் வீரனுக்கும், விளையாட்டு வீரனுக்கும் இருக்கக் கூடிய இயல்புத் தன்மையுடன் மிகவும் சர்வ சாதாரணமாக நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதில் சாதனை புரிந்து, முத்திரை பதித்திருக்கிறார். சீரியஸான காட்சிகளில் கூட, பிரகாசமான முகத்துடனும், தெளிவான வார்த்தைகளுடனும் சிரித்துக் கொண்டே வசனம் பேசும் மோகன்லாலை எவ்வளவு நேரம் பார்த்தாலும்- பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் நமக்கு தோன்றும். அதுதான் மோகன்லாலின் சிறப்பே!
மோகன்லாலின் பழைய காதலியாகவும், அந்த காதல் நிறைவேறாமற் போய் இப்போது காவல் துறை அதிகாரியான மனோஜ் கே.ஜெயனின் (‘லோக்பா’லின் ஊழல் களையெடுப்பால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர் இவர்) மனைவியாகவும் காவ்யா மாதவன் திரையில் காட்டப்படும்போது... நமக்கு உண்மையிலேயே அதிர்ச்சிதான்! ஓ... இப்படியொரு flash back இருக்கிறதா?
படத்தின் அடுத்த காட்சிகளை நகர்த்திச் செல்வதற்கும், இறுதி காட்சியில் ஒரு அதிர்ச்சியை உண்டாக்குவதற்கும் காவ்யா மாதவனின் கதாபாத்திரம் நன்றாகவே உதவியிருக்கிறது.
டூ வீலரில் நவ நாகரீக பெண்ணாக வலம் வரும் மீரா நந்தன்தான் ஆரம்பத்திலிருந்து ‘யார் அந்த லோக் பால்?’ என்று ஆர்வத்துடன் தேடிக் கொண்டே இருப்பவர். தன்னுடைய வீட்டிலேயே மிகவும் சர்வ சாதாரணமாக அமர்ந்து, பேசிக் கொண்டிருக்கும் மனிதன்தான் தான் தேடிக் கொண்டிருக்கும் மாயாவி மனிதன் என்ற உண்மை தெரிந்தபோது, அதைப் பற்றி மோகன்லாலிடம் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து கேட்காமலேயே, அனைத்தையும் தெரிந்து கொண்ட சந்தோஷத்துடன் மீரா புன்னகைத்துக் கொண்டே, டூ வீலரில் ஏறி கிளம்புகிறாரே... அது நம் மனதில் பசுமையாக எப்போதும் தங்கி நிற்கும்.
முப்பது வருடங்களாக படவுலகில் இருந்து வரும் திரைக்கதாசிரியரான எஸ்.என்.சாமி கால ஓட்டத்திற்குத் தகுந்தபடி, இன்றைய தலைமுறையினர் ரசிக்கும் வகையில் ஹைடெக்காக இருக்கும் வண்ணம், இப்போதைய தொழில் நுட்ப அம்சங்களுடன் தன் திரைக்கதையில் காட்சிகளை அமைத்ததற்காக - தனிப்பட்ட முறையில் அவரை பாராட்டி கை குலுக்குகிறேன்.
‘எனக்கு புண்ணியம் வேண்டாம். அதேபோல பாவமும்… புண்ணியம் வேண்டாம் என்பவர்களை பாவம் என்ன செய்யும்?’- ஒரு இடத்தில் லோக்பாலாக வரும் மோகன்லால் பேசும் வசனம் இது.
இன்னொரு இடத்தில்-
‘திருடுவதற்கு மட்டுமல்ல மனிதா!
திறமையுடன் நிற்பதற்கும் தெரியும்’ என்பார் மோகன்லால் - சிரித்துக் கொண்டே.
இன்னொரு காட்சி-
மோகன்லாலும், காவ்யா மாதவனும் உரையாடுவார்கள்.
காவ்யா: என்னுடைய வழி சரியானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இலக்கு நல்லதாக இருந்தது.
மோகன்லால்: லோக்பாலின் இலக்கும் நல்லதுதான். வழி-அந்த அளவிற்கு சரியானதாக இல்லையென்றாலும்...
இப்படி படத்தில் பாராட்டுகிற அளவிற்கு பல இடங்களில் வசனங்கள் இருக்கின்றன. எஸ்.என்.சாமியின் பேனா இன்னும் கூர்மையாகவே இருக்கிறது!
சாய்குமார், டி.ஜி.ரவி ஆகியோருடன் முக்கிய பாத்திரங்களில் நம்முடைய ‘தலை வாசல்’ விஜய், தம்பி ராமையா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு, ரதீஷ் வேகாவின் இசை, ஷ்யாம் சசிதரனின் படத்தொகுப்பு- ‘லோக்பால்’ படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கின்றன.
பல படங்களில் நாம் பார்த்த கதையையே சுவாரசியமாக திரும்பவும் பார்க்கும் வண்ணம் படம் பண்ணுவது என்பது சாதாரண விஷயமல்ல. அந்த வகையில் ‘இன்னும் வற்றாமலிருக்கும்’ இயக்குனர் ஜோஷிக்கு - ஒரு பூச்செண்டு!