Category: சினிமா Published Date Written by சுரா Hits: 4526
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
மதுமதி
(இந்தி திரைப்படம்)
காலத்தை வென்று நிற்கக் கூடிய அமர காவியங்கள் எப்போதாவது ஒருமுறைதான் உருவாக்கப்படும். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் இது. 1958ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இந்த காவியத்தை இயக்கியவர் பிமல் ராய். படத்தின் நாயகன் – திலீப்குமார். நாயகி – வைஜெயந்திமாலா. வில்லன் – ப்ரான்.
கதை – ரித்விக் கட்டக்
உரையாடல் – ராஜேந்தர் சிங் பேடி
படத் தொகுப்பு - ரிஷிக்கேஷ் முகர்ஜி
இசை – சலீல் சவுதரி
இவ்வளவு பெரிய திறமைசாலிகளின் கை வண்ணத்தில் உருவான திரைப்படம் எப்படிப்பட்ட உன்னதத் தன்மை கொண்டதாக இருக்கும் என்பதைக் கூறவும் வேண்டுமா?
முன் பிறவியைப் பற்றிய கதை இது.
மழை பெய்து கொண்டிருக்கும், சூறாவளிக் காற்று வீசிக் கொண்டிருக்கும் ஒரு இரவு வேளையில் எஞ்ஜீனியரான தேவேந்திரா தன் நண்பனுடன் ஒரு மலைப் பகுதியில் காரில் பயணம் செய்கிறான். புகை வண்டி நிலையத்தில் தன் மனைவியையும், குழந்தையையும் அழைப்பதற்காக அவன் போய்க் கொண்டிருக்கிறான். இயற்கையின் சீற்றத்தால், கார் பயணிக்க முடியாத நிலை. வேறு வழியில்லாமல் – அருகிலிருந்த ஒரு பிரம்மாண்டமான பழைய கட்டிடத்தில் சிறிது நேரம் அவன் அபயம் தேடுகிறான்.
அந்த கட்டிடத்தை தான் ஏற்கெனவே பார்த்திருப்பதைப் போல் உணர்கிறான் தேவேந்திரா. அங்கிருந்த முன்னறையில் ஒரு பெரிய ஓவியம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை வரைந்தது தான்தான் என்பதாக அவன் உணர்கிறான். இவை அனைத்தும் நடைபெற்றது அவனுடைய முற்பிறவியில். முற்பிறவி ஞாபகங்கள் மனதில் அடுத்தடுத்து தோன்ற, அவன் தன் நண்பனிடமும், கட்டிடத்தின் பொறுப்பாளரிடமும் அந்தக் கதையைக் கூற ஆரம்பிக்கிறான். வெளியே சூறாவளி காற்று வீசிக் கொண்டிருக்கிறது – மழைக்கு மத்தியில்.
போன பிறவியில் தேவேந்திராவின் பெயர் ஆனந்த். ஆனந்த், ஷ்யாம் நகர் மர எஸ்டேட்டிற்கு மேனேஜராக பணியாற்றுவதற்காக வருகிறான். அவன் ஒரு சிறந்த ஓவியனும் கூட. அங்குள்ள மலைப் பகுதிகளிலும், மரங்களுக்கு மத்தியிலும் அமர்ந்து அவன் ஓவியங்கள் வரைந்து கொண்டிருப்பான். அப்போது அவன் மதுமதி என்ற அழகான இளம் பெண்ணைச் சந்திக்கிறான். அந்தப் பகுதியைச் சேர்ந்த மழை வாழ் பெண் அவள். மரங்களுக்கிடையே பாட்டு பாடிக் கொண்டும், மானைப் போல துள்ளிக் கொண்டும் திரியும் அவளுடைய அழகால் அவன் ஈர்க்கப்படுகிறான்.
ஒரு நாள் மதுமதியை உட்கார வைத்து, அவளை ஓவியமாக அவன் வரைகிறான். நாட்கள் செல்லச் செல்ல, அவர்களுக்கிடையே இருந்த பழக்கம் காதலாக மாறுகிறது.
உக்ரநாராயண் அவனுடைய முதலாளி.
உயரமான தோற்றத்தைக் கொண்ட அவன் ஒரு முரட்டுத்தனமான குணத்தைக் கொண்டவன். அவனைப் பார்த்தால், எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால், அவனுக்கு தலை வணங்குவதற்கு ஆனந்த் மறுத்து விடுகிறான். அதனால் அவனுடைய கோபத்திற்கு ஆனந்த் ஆளாகிறான்.
ஆனந்த் – மதுமதி காதல் விஷயம் ஒரு நாள் உக்ரநாராயணுக்குத் தெரிய வருகிறது. மதுமதியை எப்படியாவது அடைய வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்த அவனுக்கு, அது ஒரு அதிர்ச்சியைத் தரும் தகவலாக இருக்கிறது. எனினும், மதுமதியின் மீது அவன் கொண்ட மோகம் இன்னும் அடங்காமல் அப்படியே இருக்கிறது.
முன் கூட்டியே திட்டமிட்டு மதுமதியின் ஏழை தந்தையை இரண்டு நாட்கள் ஒரு வெளியூருக்கு அவன் அனுப்பி வைக்கிறான். ஆனந்த்தையும் வேலை விஷயமாக, இன்னொரு ஊருக்குப் போகும்படி செய்கிறான்.
இரண்டு நாட்களில் ஆனந்த் திரும்பி வருகிறான். அங்கு எங்குமே மதுமதி இல்லை. அவள் எங்கே போனாள்? தான் ஊரில் இல்லாத வேளையில் சதித் திட்டம் தீட்டப்பட்டு உக்ரநாராயணனின் மாளிகைக்கு மதுமதி அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாள் என்ற தகவல் ஆனந்திற்குத் தெரிய வருகிறது. அவன் அங்கு சென்று உக்ரநாராயணிடம் இது சம்பந்தமாக விசாரிக்கிறான். உக்ரநாராயணின் ஆட்கள் அவனை பலமாக அடித்து விடுகிறார்கள்.
கவலை நிறைந்த மனதுடன் மரங்களுக்கிடையே சுற்றித் திரிகிறான் ஆனந்த். அப்போது அவன் காட்டுப் பகுதியில் மாதவி என்ற பெண்ணைப் பார்க்கிறான். அவள் தோற்றத்தில் மதுமதியைப் போலவே இருக்கிறாள். இதற்கிடையில் ஆனந்தின் கனவில் தோன்றிய மதுமதி, தான் மரணமடைந்து விட்டதாகவும், தன்னுடைய மரணத்திற்குக் காரணம் உக்ரநாராயண்தான் என்றும் கூறுகிறாள்.
உண்மையில் என்ன நடந்தது என்பதை உலகத்திற்குத் தெரிவித்து, உக்ரநாராயணுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று நினைக்கிறான் ஆனந்த். அதற்கு மாதவியின் ஒத்துழைப்பை அவன் வேண்டுகிறான். இரவு எட்டு மணிக்கு உக்ரநாராயணின் மாளிகைக்கு ‘மலை வாழ் பெண்’ மதுமதியின் தோற்றத்தில், மாதவியை வரச் சொல்கிறான்.
அதற்கு முன்பு உக்ரநாராயணின் மாளிகைக்குச் சென்ற ஆனந்த், அவனை ஒரு ஓவியமாக தான் வரைய விரும்புவதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் அவனிடம் கேட்கிறான். அவன் அதற்கு சம்மதிக்க, ஆனந்த் அவனை உட்கார வைத்து, படமாக வரைந்து கொண்டிருக்கிறான். அப்போது கடிகாரத்தில் எட்டு மணி அடிக்கிறது. அப்போது மதுமதி உள்ளே வருகிறாள். இறந்த மதுமதி எப்படி உயிருடன் வர முடியும் என்று உக்ரநாராயண் திகைத்து நிற்கிறான். உண்மையை அவன் கூற வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. கட்டிடத்திற்கு வெளியே கொண்டு வந்து நிறுத்தப்பட்ட போலீஸ், உக்ரநாராயணை கைது செய்கிறது. மதுமதி புன்னகைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்கிறாள்.
இப்போது மதுமதியின் வேடத்தில் இருக்கும் மாதவி அறைக்குள் வருகிறாள். வரும் வழியில் கார் பழுதாகி விட்டதால், சற்று தாமதமாகி விட்டது என்கிறாள் அவள். அப்படியென்றால்… இதற்கு முன்பு வந்தது மதுமதியின் ஆவியா?
உக்ரநாராயணின் காம இச்சைக்கு சம்மதிக்காமல், அவனிடமிருந்து தப்பித்து ஓடிய மதுமதி, அந்த மாளிகையின் உச்சியிலிருந்து கீழே குதித்து இறந்திருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. ஆனந்த் மதுமதியின் ஆவியைப் பின்பற்றி நடந்து, மாளிகையின் உச்சியிலிருந்து குதிக்கிறான். அதன் மூலம் தன் காதலி இருக்குமிடத்திற்கு அவனும் செல்கிறான்.
தேவேந்திரா தன் முற்பிறவி கதையை முடிக்கிறான். ‘ஆனால், என் முற்பிறவி காதலியான மதுமதியே இந்தப் பிறவியில் எனக்கு மனைவியாக கிடைத்திருக்கிறாள். இந்தப் பிறவியில் அவளுடைய பெயர் ராதா’ என்கிறான் அவன்.
அப்போது அவனுடைய மனைவியும், குழந்தையும் பயணித்த புகை வண்டி விபத்திற்குள்ளாகி விட்டது என்ற தகவல் வருகிறது. சாலை சீர் செய்யப்பட, நண்பர்கள் இருவரும் வேகமாக புகை வண்டி நிலையத்திற்குச் செல்கின்றனர். புகை வண்டியின் ஒரு பெட்டியில் தேவேந்திராவின் மனைவியும், குழந்தையும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களையே ஆசையுடனும், அன்புடனும் பார்க்கிறான் தேவேந்திரா.
தேவேந்திராவாகவும், ஆனந்த்தாகவும் – திலீப்குமார் (மிகவும் இயல்பான நடிப்பு!)
மதுமதியாகவும், மாதவியாகவும், ராதாவாகவும் – வைஜெயந்தி மாலா (என்ன அழகு! என்ன துள்ளல்! என்ன உணர்ச்சிகளின் வெளிப்பாடு! என்ன வசீகரம்!)
உக்ர நாராயணாக – ப்ரான் (என்ன பொருத்தமான தேர்வு! குரலில்தான் என்ன கம்பீரம்!)
நூல் பிடித்ததைப் போன்ற திரைக்கதை… அருமையான உரையாடல்கள்… அழகான லொக்கேஷன்… தேர்ந்த, கவித்துவத் தன்மை நிறைந்த இயக்கம்!
‘மதுமதி’யின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் – சலீல் சவுதரியின் மிக அருமையான இசையமைப்பு!
சாகா வரம் பெற்ற இனிமையான பாடல்கள்! அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்! எத்தனை வருடங்கள் ஆனாலும், இப்படத்தின் பாடல்கள் நம் மனங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும்!
‘மதுமதி’யின் இன்னொரு சிறப்பம்சம் – திலீப் குப்தாவின் மிகச் சிறந்த ஒளிப்பதிவு (என்ன அருமையான லைட்டிங்!)
சிறந்த இந்திப் படத்திற்கான மத்திய அரசாங்கத்தின் விருதைப் பெற்ற ‘மதுமதி’, ‘ஃபிலிம் ஃபேர்’ பத்திரிகையின் 9 விருதுகளை அள்ளிச் சென்றது.
2006ஆம் ஆண்டு புனேயில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற டொரான்டோ திரைப்பட விழாவிலும் ‘மதுமதி’ திரையிடப்பட்டது.
ஷைலேந்திரா எழுதி, லதா மங்கேஷ்கர் தன் குயிலினும் இனிய குரலில் பாடிய ‘ஆஜா ரே பர்தேசி’ என்ற காலத்தை வென்ற பாடலை கேட்கும்போதெல்லாம், நம் மனங்களில் ‘மதுமதி’ புன்னகை தவழும் முகத்துடன் தோன்றிக் கொண்டே இருப்பாள்.