Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

சிறிய அலைகள்

சிறிய அலைகள்

எம். முகுந்தன்

தமிழில் : சுரா

 

சி

றிய வீட்டில்' பங்கஜாக்ஷனின் மனைவி ஶ்ரீதேவியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? தினமும் காலையில் ஸ்கூட்டரில் ஏறி அலுவலகத்திற்குச் செல்லும் கணவரை அனுப்பி வைப்பதற்காக அவள் களைப்புடன் மொட்டை மாடியில் வந்து நின்று கொண்டிருப்பாள். அப்போது கூந்தல் அவிழ்ந்து கிடக்கும். ரவிக்கையின் சில பொத்தான்கள் கழன்று கூட கிடக்கலாம். நெற்றியிலிருந்த செந்தூர திலகம் பாதியோ அல்லது முழுதாகவோ அழிந்து போய் விட்டது என்ற நிலையும் உண்டாகலாம். கணவரின் ஸ்கூட்டர் சத்தம் அகன்று... அகன்று இல்லாது போகும்போது, அவள் வீட்டிற்குள் நுழைந்து செல்வாள்.

பிறகு... மதியம் நீங்கள் மீண்டும் அவளைப் பார்க்கிறீர்கள். இப்போது அவள் குளித்து முடித்து, வாயல் புடவை அணிந்து, கூந்தலை அழகாக மடித்துக் கட்டி, நெற்றியில் வட்ட வடிவத்தில் சிவப்பு நிறத்தில் பொட்டு வைத்து, அழகான தோற்றத்துடன் காணப்படுவாள். மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி கணவரின் திரும்பி வருதலை எதிர்பார்த்தவாறு அவள் வெளி வாசலில் நின்று கொண்டிருப்பாள். அதற்குப் பிறகு சாயங்காலம் நீங்கள் மீண்டுமொரு முறை அவளைப் பார்க்கிறீர்கள். அப்போது பல வர்ணங்களைக் கொண்ட புடவையை அணிந்து, ஸ்கூட்டருக்குப் பின்னால் அமர்ந்து, கணவருடன் சேர்ந்து கடற்கரைக்குப் போய்க் கொண்டிருப்பாள்.

இனி .... ஶ்ரீதேவியைப் பார்க்காதவர்களுக்காக அவளுடைய ஒரு தோற்றத்தைப் பற்றி கூறுகிறேன்.

வெளுத்த நிறம் ... இடைவெளி இல்லாத அடர்த்தியான கூந்தல்.... அரிசிப் பற்கள்... தாடைக்கு மேலே ஒரு சிறிய பள்ளம்... அழகான சிறிய மார்பகங்கள்.. சிறிய உரோமங்களால் அலங்கரிக்கப்பட்ட தொப்புள்.... ஸ்கூட்டருக்குப் பின்னால் அமர்ந்து பயணிக்கும்போது, புடவை பாதங்களிலிருந்து சற்று மேலே உயர்ந்து இருப்பது மாதிரி இருந்தால், வெள்ளியில் செய்யப்பட்ட கொலுசுகள் அலங்கரித்துக் கொண்டிருக்கும் அவளுடைய கணுக்கால்களைப் பார்ப்பதற்கான அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆனால், அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்காமல் இருக்கட்டும் என்று கதாசிரியரான நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். காரணம் - நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், அந்த கணுக்கால்களைப் பற்றிய நினைவு வரும் நாட்களில் உங்களுடைய தூக்கத்தைக் கெடுக்கும். அந்த நினைவு அகலாத நோயைப் போல உங்களைப் பின் தொடரும்.

அவ்வாறு தூக்கத்தை இழந்தவர்களில் ஒருவன்தான் மோகனன் குறுப்பு என்ற இளைஞன்...

கீழ் நோக்கி வளைந்த அடர்த்தியான மீசையும், கரகரப்பான குரலும் கொண்ட ஒரு நல்ல இளைஞனாக அவன் இருந்தான். அவனுக்கு சிவப்பு நிறத்திலிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் இருந்தது. கடற்கரையின்  நீர் ஊறிக் கொண்டிருக்கும் வெளுத்த மணலில் வைத்துத்தான் முதல் தடவையாக அவன் அவளைப் பார்த்தான். அந்த நிமிடம் பங்கஜாக்‌ஷன் கரையிலிருந்த மணலில் இழுத்து போடப்பட்டிருந்த ஒரு சிறிய படகின் மீது சாய்ந்து அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவள் ஈரம் படிந்த வெள்ளை நிற மணலில் நின்றவாறு இளம் அலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிய அலைகள் மணலின் வழியாக உருண்டு வந்தபோது அவள் புடவையைச் சற்று உயர்த்திப் பிடித்தவாறு பின்னோக்கி நகர்ந்து நிற்பாள். அலைகள் பின்னோக்கி செல்லும்போது, மீண்டும் அவள் கடலை நோக்கி நகர்வாள். சில சூழ்நிலைகளில் பின்னோக்கி நகர்ந்து விலகிச் செல்வதற்கு முன்பே, அலைகள் அவளுடைய கால்களில் வந்து மோத ஆரம்பித்திருக்கும்.

அப்படித்தான் கடலின் உயிர்ப்பான அலைகள் நுரைகளைக் கொண்டு வந்து சேர்த்த வெள்ளியால் ஆன கொலுசுகள் அணியப்பட்டிருந்த அவளுடைய கால்களை மோகனன் குறுப்பு பார்த்தான். அவன் தன்னுடைய சிறப்புத் தன்மை கொண்ட நாய்க் குட்டியைத் தடவிக் கொடுத்தவாறு சற்று தூரத்தில் மணலில் அமர்ந்திருந்தான். கடற்கரையை நோக்கி வரும் செம்மண் பாதையில் அவனுடைய சிவப்பு நிற மோட்டார் சைக்கிள் நின்றிருந்தது.

அன்று இரவு அவனுக்கு உறக்கம் இல்லாமற் போனது. ஶ்ரீதேவி அவனுக்குள் நுழைந்து விட்டிருந்தாள். எப்போதும் போல மறுநாளும் அவன் கடற்கரைக்குச் சென்றான். படகின் நிழலில் அமர்ந்து அவன் அமைதியாக சூரியன் மறைவதைக் கண்டு கொண்டிருக்க, அவள் அலைகளுடன் விளையாடிக் கொண்டும், கால்களில் கடலின் நுரைகளை வாங்கிக் கொண்டும் இருந்தாள்.

'அந்த நாயுடன் அமர்ந்திருக்கும் ஆளைப் பார்த்தீர்களா?' - ஒரு முறை அவள் தன் கணவனிடம் கூறினாள்: 'அவன் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.'

நன்கு சவரம் செய்யப்பட்டு, சிவந்து பிரகாசமாக காட்சியளிக்கும் முகத்தைக் கொண்ட ஒரு இளைஞனாக பங்கஜாக்‌ஷன் இருந்தான். மீசை இல்லாததால், அவனுடைய முகத்திற்கு பெண்மைத் தன்மை இருப்பதைப் போல தோன்றினாலும், அவனுக்கு ஆண்மைத்தனம் வந்து வீங்கிய சதைப் பிடிப்பான கை, கால்கள் இருந்தன. அவனுடைய பலமான உடலமைப்பை அவள் வழிபட்டாள்.

'நாம் அந்தப் பக்கம் விலகி உட்காருவோம்' - அவள் கூறினாள்: 'அவனுடைய பார்வை எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை:

கடலின் எல்லையில் நீரில் மஞ்சள் நிற சூரியன் சிறிது நேரம் தலையை நீட்டிக் கொண்டு கிடந்தது.  பிறகு அது நீரின் மாமிசத்தில் கீழே இறங்கிக் கொண்டும், வெளுத்த மணலில் இருட்டை விழச் செய்யவும் செய்தவுடன் அவர்கள் எழுந்து கைகளைக் கோர்த்து பிடித்தவாறு ஸ்கூட்டரை நோக்கி நடந்தார்கள். அப்போது அவன் தன்னுடைய நரைத்த முடியைக் கொண்ட நாய்க் குட்டியைக் கையில் வைத்தவாறு தங்களுக்குப் பின்னால் வருவதாக அவள் உணர்ந்தாள். பிறகு தெரு விளக்குகளிலிருந்து வெளியேறி வந்த அளவற்ற பிரகாசத்தில் நகரத்தின் அகலமான சாலையின் வழியாக ஸ்கூட்டரில் பயணித்த போது, பின்னால் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளின் இரைச்சலை அவள் கேட்டாள். அவனுக்குப் பின்னால் அவனுடைய இடுப்பை இரு கைகளாலும் பிடித்தவாறு, ஒரு மனிதக் குழந்தையைப் போல நாய்க்குட்டி அமர்ந்திருந்தது.

அதற்குப் பிறகு பெரும்பாலும் தினமும் அவள் அவனைப் பார்த்தாள். கடற்கரையில் எப்போதும் அமரக் கூடிய படகின் நிழலை அடையும் போது, பின்னால் மோட்டார் சைக்கிள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் அவளுக்கு பரிச்சயமானது.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version