குழந்தைகள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4783
‘கொல்லக் கூடாது. அதற்கு ஒருவேளை குஞ்சுகள் இருக்கலாம்’ — அல்யோஷா உரத்த குரலில் கூறினான்.
கரப்பான் பூச்சியை கவனித்துக் கொண்டிருந்த சோனியா அதன் குஞ்சுகள் எந்த அளவிற்கு சிறியனவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாள்.
‘நாற்பத்து மூணு! ஒண்ணு!’ — அன்யாவிற்கு இரண்டு வரிசைகள் சேர்ந்திருக்கின்றன என்ற வேதனையுடன் க்ரிஷா தொடர்ந்து கூறினான்: ‘ஆறு!’
‘என்னுடையது முடிந்து விட்டது. நான் வெற்றி பெற்று விட்டேன்’ — குறும்புத்தனம் நிறைந்த கண்களை உருட்டி, சத்தமாக சிரித்தவாறு சோனியா உரத்த குரலில் கத்தினாள். மற்றவர்கள் முகங்களின் தாழ்ந்தன.
‘அவளுடைய சீட்டைச் சோதித்துப் பாரு’ — சோனியாவையே வெறித்துப் பார்த்தவாறு க்ரிஷா கூறினான்.
அங்கு இருந்தவர்களிலேயே மூத்தவனும் அறிவாளியுமான க்ரிஷாதான் முடிவுகளை எடுப்பவன். அவன் கூறுவதை அவர்கள் கேட்டு நடப்பார்கள். சோனியாவைக் கூர்ந்து சோதித்துப் பார்த்தான். திருட்டு விளையாட்டு அல்ல என்பதை கண்டு பிடித்த விஷயம் எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் நொறுக்கி விட்டது.
புதிய விளையாட்டு ஆரம்பமானது.
‘நேற்று நான் ஒரு விஷயத்தைப் பார்த்தேன்’ — தனக்குத் தானே கூறிக் கொள்வதைப் போல அன்யா உரத்த குரலில் கூறினாள்: ‘ஃபிலிப் ஃபிலிப்போவிச் கண்களின் மடிப்புகளை விரிய வைத்தவாறு மேலே பார்த்தான். சிவப்பு நிறத்தால்... சாத்தானின் கண்களைப் போல. பார்த்தால் பயம் தோன்றும்.’
‘நானும் பார்த்தேன்’ — க்ரிஷா கூறினான்.
‘எட்டு! எங்களுடைய வகுப்பில் ஒரு சிறுவனால் காதுகளை அசைக்க முடியும். இருபத்து ஏழு!’
ஆந்த்ரே தலையை உயர்த்தி க்ரிஷாவைப் பார்த்தான். ஒரு நிமிடம் யோசித்தான். பிறகு கூறினான்: ‘என்னாலும் காதுகளை அசைக்க முடியும்.’
‘அப்படியென்றால், பார்க்கலாமே!’ — ஆந்த்ரே உதடுகளையும் விரல்களையும் அசைக்கச் செய்தான். காதுகளும் அசைகின்றன என்று அவன் நினைத்தான். சுற்றிலும் குலுங்கிக் குலுங்கி சிரிக்கும் சத்தம் உயர்ந்தது.
‘அவன் அந்த அளவிற்கு நல்ல மனிதனல்ல... அந்த ஃபிலிப் ஃபிலிப்போவிச்’ — சோனியா பெருமூச்சு விட்டாள். ‘நான் நேற்று இரவு உடை மட்டும் அணிந்து நின்று கொண்டிருந்தபோது, அவன் நர்சரிக்குள் நுழைந்து வந்தான்... நான் ஒரு மாதிரி ஆயிட்டேன்.’
‘விளையாட்டு முடிந்து விட்டது’ — தட்டினை நாணயங்களுடன் வேகமாக பாய்ந்து எடுத்துக் கொண்டே க்ரிஷா கூறினான்: ‘நான் வெற்றி பெற்று விட்டேன். வேண்டுமென்றால், சோதனை பண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.’
சமையல்காரனின் மகன் தலையை உயர்த்தி பெருமூச்சு விட்டான்: ‘என்னால் இனி விளையாட முடியாது.’
‘ம்... ஏன்?’
‘அது... அது... என் கையில் பணமில்லை.’
‘பணமில்லாவிட்டால், விளையாட முடியாது’ — க்ரிஷா கூறினான்.
அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்ப்பதைப் போல ஆந்த்ரே தன் பாக்கெட்டிற்குள் தேடிப் பார்த்தான். பலகார துண்டுகளையும், முனை கடிக்கப்பட்ட ஒரு பென்சிலையும் தவிர, வேறு எதுவுமே இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு முகத்தை வேண்டுமென்றே இறுக வைத்துக் கொண்டான். அவன் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றிருந்தான். இனி எந்த நிமிடமும் ஒரு அழுகை வெடிக்கலாம்.
‘உனக்காக நான் பணம் வைக்கிறேன்’ — அவனுடைய அந்த பரிதாப நிலையைப் பார்க்க முடியாமல் சோனியா கூறினாள்: ‘பிறகு... திருப்பி தரணும்.’
எல்லோரும் பணம் வைத்தார்கள். அடுத்த விளையாட்டு ஆரம்பமானது. ‘மணியடிக்கும் சத்தம் கேட்பதைப் போல இருக்குது’ — தட்டுகளைப் போன்ற பெரிய கண்களுடன் அன்யா கூறினாள்.
விளையாட்டை நிறுத்தி விட்டு, அவர்கள் சாளரத்திற்கு அருகிலிருந்த இருட்டையே வெறித்துப் பார்த்தார்கள். விளக்கின் பிரதிபலிப்பு இருட்டில் ஒளிர்ந்தது.
‘உனக்கு வெறுமனே தோன்றியிருக்கணும்’ - ‘இரவில் மணியடிக்கப்படும் ஒரேயொரு இடம் சுடுகாடுதான்’ — ஆந்த்ரே கூறினான்.
‘என்ன காரணம்?’
‘தேவாலயத்திற்குள் திருடர்கள் நுழையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக... அவர்களுக்கு மணிச் சத்தம் என்றால் பயம்.’
‘திருடர்கள் ஏன் தேவாலயத்திற்குள் நுழைய வேண்டும்?’ — சோனியாவிற்கு சந்தேகம் உண்டானது.
‘என்ன சந்தேகம்? காவலாளியைக் கொல்வதற்குத்தான்.’
ஒரு நிமிடம் பேரமைதி. ஒரு அதிர்ச்சியுடன் எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அடுத்த விளையாட்டு ஆரம்பமானது. இந்த முறை ஆந்த்ரேதான் வெற்றி பெற்றான்.
‘அவன் திருட்டு விளையாட்டு விளையாடினான்’ — அல்யோஷா அவனையே வெறித்துப் பார்த்தான். வேகமாக எழுந்து ஒரு முழங்காலை உயர்த்தி மேஜையின் மீது வைத்துக் கொண்டு ஆந்த்ரேவின் கன்னத்தில் ஒரு அடி அடித்தான். அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மேலும் ஒவ்வொன்றாகக் கொடுத்து விட்டு, இருவரும் அழ ஆரம்பித்தார்கள். சாப்பிடும் அறையில் பல வகையான அழுகைச் சத்தங்களும், புலம்பல்களும் கேட்டன. எனினும், விளையாட்டு முடியவில்லை. ஐந்து நிமிடங்களில் எல்லோரும் பழைய மாதிரியே சிரிப்பும், பேச்சுமாக ஆகி, முகத்தில் வழிந்த கண்ணீர் அடையாளங்களுக்கு மத்தியில் சிரிப்பு மலர்ந்தது. அல்யோஷாவிற்குத்தான் அதிக சந்தோஷம் — ஒரு சண்டையைப் பார்க்க முடிந்ததே!
ஐந்தாம் வகுப்பு படிக்கும் வாஸ்யா அறைக்குள் நுழைந்து வந்தான். அவனுடைய முகம் முழுவதும் தூக்கக் கலக்கமும், வெறுப்பும் நிறைந்திருந்தன.
‘வெட்கக் கேடு!’ — நாணயம் குலுங்கிக் கொண்டிருந்த பாக்கெட்டைத் தடவியவாறு க்ரிஷா அமர்ந்திருப்பதைப் பார்த்தபோது, அவனுக்குத் தோன்றியது அப்படித்தான்: ‘குழந்தைகளுக்கு பணம் கொடுப்பது... பிறகு அவர்கள் பணத்திற்காக போட்டி போட்டு விளையாடுவது... இப்படித்தான் குழந்தைகளை வளர்ப்பதா? வெட்கக் கேடு!’
ஆனால், அவர்களுடைய அளவற்ற ஆர்வத்தைப் பார்த்து விட்டு, அவனுக்கும் கூட விளையாட வேண்டும் என்று தோன்றியது: ‘ஒரு நிமிடம்... நானும் விளையாடுகிறேன்.’
‘ஒரு கோபெக் வைக்கணும்.’
‘இதோ... ஒரு நிமிடம்...’ — அவன் பாக்கெட்டிற்குள் தேடினான்: ‘என் கையில் கோபெக் இல்லை. ரூபிள்தான் இருக்கு. நான் ஒரு ரூபிள் வைக்கிறேன்.’
‘அது முடியாது. கோபெக்தான் வேணும்.’
‘முட்டாள்கள்! ரூபிள், கோபெக்கை விட பெரியது. வெற்றி பெறும் ஆள் எனக்கு மீதி சில்லரையைத் தந்தால் போதும்.’
‘வேண்டாம். கொஞ்சம் போனால், போதும்.’
தோளைக் குலுக்கியவாறு அவன் சமையலறையை நோக்கி நடந்தான். வேலைக்காரர்களின் கைகளில் கோபெக் எதுவுமில்லை.
‘நீ எனக்கு சில்லரை தா’ — திரும்பி வந்த வாஸ்யா, க்ரிஷாவிடன் கூறினான்: ‘நான் அதற்கு பலன் கிடைக்கிற மாதிரி தர்றேன். அதுவும் இல்லாவிட்டால், நீ ஒரு ரூபிளுக்கு பத்து கோபெக்குகளை எனக்கு விற்பனை செய்.’
க்ரிஷா, வாஸ்யாவையே சந்தேகத்துடன் பார்த்தான்: ‘இவன் என்னை எப்படியாவது ஏமாற்றி விடுவானோ?’
‘நான் தர மாட்டேன்’ — பாக்கெட்டை இறுக பிடித்துக் கொண்டே அவன் சொன்னான். வாஸ்யாவிற்கு கோபம் வந்தது. அவன் அவர்களை முட்டாள்கள் என்றும், மந்த புத்தியைக் கொண்டவர்கள் என்றும் கூறினான்.
‘நான் பணம் வைக்கிறேன். வாஸ்யா, உட்காரு’ — சோனியா கூறினாள்.
இரண்டு சீட்டுகளை முன்னால் வைத்துக் கொண்டு அவன் அமர்ந்தான். அன்யா சத்தம் போட ஆரம்பித்தாள்.