Lekha Books

A+ A A-

தெருவிளக்கு - Page 3

theruvilaku

சில சமயங்களில் ஏதாவது பாட்டை முணுமுணுத்துக்கொண்டே விளக்கு ஏற்றுவான் அவனையும் அறியாமல்.

விளக்கு மரத்தில் சாய்ந்தவாறு கடந்துபோன நாட்களில் ஆழ்ந்து கொச்சு குட்டி நீண்ட ஒரு பெருமூச்சு விட்டான். நடந்ததை யெல்லாம் மறக்க வேண்டும் என்றுதான் அவன் நினைக்கிறான். ஆனால் நினைவுகள்... அவை எப்படி சாகும்? அழிவே இல்லாத நினைவுகள்...

அதன்பிறகு அங்கு நடந்ததெல்லாம்... எதிர்பார்ப்புகள் அடித்தளமின்றி சரிந்து வீழ்ந்தன. வெறுப்பு தரும் நினைவலைகள் மனத் திரையில் வந்து மோதியபோது வானை நோக்கி வெறித்துப் பார்த்தான் கொச்சு குட்டி. அங்கே, கல்லறையில் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தி மாதிரி நான்கைந்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.

கிறிஸ்துமஸுக்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நாடு முழுவதும் பரவிக் கொண்டிருந்த அந்தக் கொடுமையான நோய்தான் எத்தனை ஆயிரம் உயிர்களை எடுத்துச் சென்றுவிட்டது.

குப்பைகளைப் பெருக்கும் ஏலிச் சேட்டத்தியும் அதில் பலியாகி விட்டாள். சின்னம்மாவையும் அது விட்டு வைக்கவில்லை. கொஞ்சமும் எதிர்பார்க்காமலேயே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

கொச்சு குட்டி ஓடிச் சென்று மருந்து வாங்கி வந்தான். டாக்டரை அழைத்துக்கொண்டு வந்தான். ஆனால், பயன்...? நோய்தான் முற்றிக் கொண்டே வந்தது. இரவும் பகலும் கண் விழித்து அவளைக் கவனித்தான் கொச்சு குட்டி. அவனுடைய இதயத்தில் வேதனையின் குவியல்கள். அன்றொரு நாள் எங்கும் நிசப்தம் நிலவிக் கொண்டிருந்த வேளையில், சக்தியற்ற தன்னுடைய விழிகளைத் திறந்து கண்ணீருக்கு மத்தியில் கொச்சு குட்டியின் கரங்களை எடுத்து தன்னுடைய முகத்துடன் சேர்த்துவைத்து அணைத்துக் கொண்டாள் சின்னம்மா. அவளுடைய கண்ணீர் வழிந்து கொண்டிருந்த கன்னங்களில் தன்னுடைய கரம் பட்டபோது, அழுகையை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான் கொச்சு குட்டி. அவனுடைய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து அவளுடைய மார்புப் பகுதியை நனைத்துக் கொண்டிருந்தது.

“நீங்க இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செஞ்சிக்கணும், மறக்காம...''

இதைக் கூறுவதற்குள் அவள் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. விழிகளில் நீர் பெருகியது. ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைத்ததைப்போல் அவளிடமிருந்து நீண்ட ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. அன்று இரவிலேயே நடக்க வேண்டியது நடந்துவிட்டது. ஒரு வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

வாழ்க்கை அதற்குப் பிறகு எப்படி எல்லாமோ போனது. வாழ்க்கைப் பாதையில் ஒளி வீசிக் கொண்டிருந்த விளக்கு அணைந்து விட்டது. பாய்மரமற்ற கப்பலாய் கொச்சு குட்டியின் வாழ்க்கை போகிற போக்கில் போய்க்கொண்டிருந்தது. எப்போது பாறையில் மோதி அது தகரும் என்று அவனுக்கே தெரியாது.

நாட்கள் ஓடிக்கொண்டேயிருந்தன. ஆனால், ஒவ்வொரு மாலையிலும் ஒளி தர மட்டும் அந்தத் தெருவிளக்கு தவறியதே இல்லை.

மங்கலான கண்களும் எண்ணெய் தேய்க்காத தலை முடியும் ரோமம் வளர்ந்த முகமும் கொண்ட கொச்சு குட்டியை இன்று அடையாளம் கண்டுபிடிப்பதே கஷ்டம். வளர்ந்த நீளமான மீசையும், மெலிந்து போன உடம்பும்... அவனைக் கண்டாலே யாரும் மூக்கில் விரல் வைத்து வியந்துதான் போவார்கள்.

எண்ணச் சிறையிலிருந்து விடுபட்டான் கொச்சு குட்டி. என்றாலும், விளக்கு மரத்தின்மேல் கை வைத்து நின்றபோது கடந்துபோன அந்த நாட்களை அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

எத்தனை வருடங்களாக அவனுடைய தாத்தாவும் தந்தையும் இந்தத் தெருவிளக்கை ஏற்றி வந்திருக்கிறார்கள். இன்று அதற்குரியவன் கொச்சு குட்டி. அந்தக் குடும்பத்துக்கும் அந்தத் தெருவிளக்குக்கும் இடையில் அப்படியொரு பிரிக்க முடியாத பந்தம்! இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தலைமுறை தலைமுறையாய்... தாத்தாவுக்குப்பின் தந்தை, தந்தைக்குப்பின்  மகன்.

ஆனால், இன்றோடு தெருவிளக்கின் பணி பூர்த்தியாகிறது. நாளை முதல்... நாளை முதல்... இது தேவையற்ற ஒன்றாகப்போகிறது.

நாளை காலை மின்சார அமைச்சர் வந்து பொத்தானை அழுத்தப் போகிறாராம். அதற்குப் பிறகு ஊர் முழுக்க ஒரே  மின்சார விளக்குகளின் பளபளப்புதான்... அந்தத் தெருவிளக்கு இனிமேல் அந்த மின்சார விளக்கைப் பார்த்து ஏங்கிக்   கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஒருவேளை இதை யாரேனும் கல்லெறிந்து உடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. புகை படிந்த இந்தக் கண்ணாடி உடைவதை நினைத்துப் பார்த்தபோது, கொச்சு குட்டியின் கண்களில் கண்ணீர் அரும்பியது. எத்தனை வருடங்களாக அந்தக் கிராமத்தை அது இருளிலிருந்து காப்பாற்றி வெளிச்சம் கொடுத்து வந்திருக்கிறது. கொடும்  காற்றிலும் கடுமையான இருட்டிலும் மங்கலான அந்த ஒளி அணையாது எரிந்து கொண்டிருக்கும். எத்தனை ஆயிரம் பேருக்கு அது வழிகாட்டி இருக்கிறது. எத்தனை ஆபத்துகளை நடக்க விடாமல் தடுத்திருக்கிறது.

கள்ளு குடித்துவிட்டு வருகிறவர்கள் சில வேளைகளில் எச்சிலை அதன்மேல் துப்பியதுண்டு. வாய் திறந்து கெட்ட சொல் கூறியதுண்டு. மரத் தூணில் இடித்ததுண்டு. எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டது அது. அதற்கு வெறுப்பு இல்லை; பகை இல்லை. ஆனால், நாளை முதல் இந்தத் தெரு விளக்கால் கிராமத்துக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. தளர்ந்து போன அந்த தலைமுறைக்கே சாட்சியாக நின்று கொண்டிருந்தது அந்த விளக்கு. அந்த விளக்கு தேவையில்லையென்றால் கொச்சு குட்டியும்தான். அவன்கூட நாளை முதல் தேவையற்ற ஒரு பொருள்தான்.

கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்றுகூட தோன்றவில்லை கொச்சு குட்டிக்கு. அந்தத் தெரு விளக்கை அன்புடன் இறுக அணைத்துக்கொண்ட கொச்சு குட்டி அதற்கு முத்தம் கொடுத்தான். அவனுடைய கண்ணீர் பட்டு அது ஈரமானது. தெரு விளக்கினால் அழ முடியாது. இல்லா விட்டால்... இருளினூடே  நடந்து போனான் கொச்சுகுட்டி- எவ்வித லட்சியமுமின்றி.

தெரு முழுவதும் ஒரே இருட்டு. எண்ணெய் தீர்ந்துபோன அந்தத் தெருவிளக்கு தன்னுடைய இறுதி அத்தியாயத்தை முடித்துக் கொண்டது, நிரந்தரமாக.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel