
இருந்தாலும் அந்த ஆள் யார் என்பதை நாராயணனால் எவ்வளவு முயற்சி செய்தும் ஞாபகத்தில் கொண்டு வர முடியவில்லை. அவர் அரங்கில் அமர்ந்து அவ்வப்போது தன்னுடைய காதுகளைத் தடவி விட்டுக் கொண்டிருந்தார். இரண்டாவது வரிசையில் அழகாக உடையணிந்து சீராகத் தலை முடியை வாரி அமர்ந்திருந்த கோகுலையும் நாராயணன் பார்த்தான். அவன் க்ரீன் ரூமிற்குள் வந்து கரீம்பாயிடமும் வசுந்தராவிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு அவள் கன்னத்தை காதல் மேலோங்கத் தடவிவிட்டு அரங்கத்தில் போய் அமர்ந்தான். நாடகக் கம்பெனியைச் சேர்ந்த ஒரு ஆள் என்ற நிலையில் இல்லாமல் பார்வையாளர்களில் ஒருவனாகப் போய் அமர வேண்டும் என்று மனதிற்குள் ஆசைப்பட்டான் நாராயணன். இந்த நாடகமும் அதில் வரும் முக்கிய கதாபாத்திரமான பகவந்தி என்ற தலித் இளம்பெண்ணும் தன்னுடைய படைப்புகள் என்ற உண்மையை ஒரு நிமிடத்திற்காவது மறந்திருக்க அவன் முயற்சி செய்தாலும், அந்த முயற்சியில் அவன் தோல்வியடைந்தான் என்பதே உண்மை. பார்வையாளர்கள் கூட்டத்தில் தனக்குத் தெரிந்தவர்கள் யாரெல்லாம் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைத் தேடிக் கொண்டும் தேடாமலே கண்ணில் பட்ட சில முகங்களை யாரென்று ஞாபகப்படுத்திக் கொண்டும் அவன் அதே இடத்தில் நின்றிருந்தான். மேடைக்குப் பின்னால் கரீம்பாய் யாரையோ திட்டுவதும் உரத்த குரலில் பேசுவதும் அவன் காதுகளில் விழுந்தது. நாடகத்தின் திரைச்சீலை உயரும் நிமிடத்தில் கரீம்பாய் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, அவருக்கே கூட ஒரு தொந்தரவாக மாறிப் போவது எப்போதுமே இருக்கக்கூடிய ஒரு விஷயம்தான். கரீம்பாய் கழிப்பறைக்குள் நுழைந்து கதவை அடைக்காமலே ஓசை வரும் வண்ணம் சிறுநீர் கழித்தார். தன்னுடைய இன்ஷுரன்ஸ் கம்பெனியின் கேபினில் சூட்டும், டையும் அணிந்து மென்மையாகவும் மரியாதையுடனும் பேசும் கரீம்பாய் அல்ல, நாடகத்தை இயக்கும் கரீம்பாய். இப்படிப் பல விஷயங்களையும் மனதில் அசை போட்டவாறு நாராயணன் நின்றிருக்க, அரங்கில் இருந்த விளக்குகள் அணைந்து திரைச்சீலை மேலே உயர்ந்தது.
நாடகம் முடியவும் திரைச்சீலை கீழே விழவும் அரங்கம் காலியாகவும் ஆனபோது வசுந்தராவின் கண்கள் நான்கு பக்கமும் சுழன்றன. அவளுக்கு அப்போது யாருடைய நெஞ்சிலாவது தலையைச் சாய்த்துக் கொள்ள வேண்டும்போல் இருந்தது. அவள் கோகுலைத்தான் தேடுகிறாள் என்று எனக்குத் தோன்றியது. முன்வரிசை ஒன்றில் அழகாக முடியை வாரி அமர்ந்திருந்த கோகுல் எப்போது எழுந்து போனான் என்று யாருக்குமே தெரியாது. ஸைட்விங்கின் மறைவில் நின்று கொண்டு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் பிரதிபலிப்பு எப்படி இருக்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருந்த நான் அவன் உட்கார்ந்திருந்த நாற்காலி காலியாகக் கிடந்ததைத்தான் பார்த்தேன்.
“வசுந்தரா, நீ கவலைப்படாதே” - நான் அவளை சமாதானப்படுத்தினேன். “கோகுல் வெளியே எங்கேயாவது நிக்கணும்.”
வசுந்தராவின் கையில் சில மலர்கள் இருந்தன. கண்கள் நாலா பக்கங்களிலும் தேடிக் கொண்டிருக்கும்போது கூட அவள் அந்த மலர்களை இறுகப் பிடித்துக் கொண்டுதானிருந்தாள். நாடகம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து மேடைக்கு ஏறி வந்த கண்ணாடி அணிந்த ஒரு இளம்பெண் அவளுக்குத் தந்தவைதாம் அந்த மலர்கள்.
நான் காலியாகக் கிடந்த நாற்காலிகள் வழியாக நடந்து வெளியே போய் நின்று சுற்றிலும் பார்த்தேன். கோகுலை அங்கு எங்கும் காணோம். கேட்டினருகில் நின்று கொண்டிருந்த சில ரசிகர்களுடன் கரீம்பாய் என்னவோ பேசிக் கொண்டிருந்தார். அவரின் முகத்திலிருந்த ரம்மின் வாசனை ‘கும்’மென்று அடித்தது. நான் திரும்பவும் வசுந்தராவின் அருகில் வந்து என்னவெல்லாமோ சொல்லி அவளை சந்தோஷப்படுத்த முயன்றேன். இடையில் என்னையே அறியாமல் அவளை நான் பகவந்தி என்று அழைத்து விட்டேன். குண்டேச்சாவின் பாத்திரத்தை நல்ல முறையில் நடித்த அலி அக்பர் தரையில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் குனிந்து என்னுடைய பாதத்தைத் தொட்டான். ஒரு முஸ்லீமாக இருந்தாலும் அவன் செயல்கள் ஒரு இந்துவின் செயலாகவே இருப்பதை நான் கவனித்தேன்.
விருப்பமில்லாத ஏதோ ஒன்றை விழுங்கிய ஒரு மனிதனைப் போல பார்த்தா நின்றிருந்தான்.
“அயாம் ஸாரி நாராயணா” - பார்த்தா என்னிடம் சொன்னான். “அது என்னோட தப்பு இல்ல.”
“எனக்குத் தெரியும்.”
நான் அவனை சமாதானப்படுத்த முயன்றேன்.
லைட்டிங்கை வைத்து எத்தனையோ சித்து வேலைகள் செய்து காட்டத் தெரிந்த பார்த்தா அந்த ஒரு காட்சிக்காக எத்தனையோ நாட்கள் தன்னுடைய அனுபவத்தைச் செலவிட்டான். ஆனால், அவன் போட்ட கணக்கை பார்வையாளர்கள் தோல்வியடையச் செய்து விட்டார்கள். குண்டேச்சா பகவந்தியின் உடலில் இருந்த ஆடைகள் முழுவதையும் உருவியவுடன், அவள் பிறந்த மேனியுடன் நின்றிருக்கிறாள். அப்போது பார்த்தாவின் லைட்டிங்கைத் தோற்கடிக்கும் விதத்தில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தோர்களிடமிருந்த ஏராளமான கேமராக்களின் ஃப்ளாஷ்கள் தொடர்ந்து அவள் மேல் விழுந்த வண்ணம் இருந்தன.
“கேமராக்களை உள்ளே கொண்டு வரக் கூடாதுன்னு நாம முன் கூட்டியே சொல்லாம விட்டது நம்மோட தவறுதான்.”
ஜாவேத் சொன்னான். நடக்கப் போகிற விஷயங்கள் பலவற்றையும் முன்கூட்டியே நினைக்கும் அவனுக்குக் கூட அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்கும் என்று முன்பே தெரியாமல் போய்விட்டது. அதற்காக ஜாவேத் மிகவும் வருத்தப்பட்டான். பார்வையாளர்களிடம் இவ்வளவு கேமராக்கள் எப்படி வந்தன என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நாடகத்தைப் பார்க்க வருபவர்கள் எதற்காக கேமராக்களையும் கையோடு எடுத்துக்கொண்டு வர வேண்டும்? இரண்டு மணி நேரம் நடந்து கொண்டிருந்த நாடகத்தில் வேறு எந்த இடத்திலும் யாருடைய கேமராவும் ‘க்ளிக்’ ஆகவில்லை. எல்லோருமே அந்த ஒரு காட்சிக்காகவே காத்திருக்கின்றனர். விஷயங்களைத் திட்டம் போடுவதிலும், அவற்றைச் செயல்படுத்துவதிலும் ஜாவேதைப் போல சாமர்த்தியம் உள்ள மனிதர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவமே காட்டிவிட்டது.
“நீ அதுக்காக வருத்தப்படாதே” - நான் பார்த்தாவைப் பார்த்து சொன்னேன். “இனியும் நமக்கு மேடையேற்றம் இருக்குல்ல! நாளையில இருந்து கேமராக்களை உள்ளே விடக்கூடாது...”
ஆனால், பார்த்தாவின் கவலை மாறியதாகத் தெரியவில்லை. முதல் மேடையேற்றம்தான் மிகவும் முக்கியமானது. அது வீணாகி விட்டது. நாடகத்தை மதிப்புடன் பார்க்கக் கூடிய ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் முதல் மேடையேற்றத்திற்குத்தான் வருவார்கள். நாளை நாடகத்தைப் பார்க்க வருபவர்கள் வேறு வகைப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நாளை கேமராக்களை யாரும் உள்ளே கொண்டு வரக் கூடாது என்று தடை போட்டால் கூட, அதை எத்தனைப் பேர் உண்மையாகவே கேட்டு அதன்படி நடப்பார்கள்? ஒரு வேளை இன்று இருந்ததைவிட நாளை இன்னும் அதிகமான பேர் கேமராக்களுடன் வரலாம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook