
வலி இல்லாமல் அதைக் கொல்ல முடியாது என்ற நம்பிக்கையை மனதில் கொண்டு நடப்பவன் நாராயணன். வார்த்தைகள் வலி தாங்காமல் துடிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது என்பது அவனுக்கு மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்.
நான்கு மணிக்கு வசுந்தராவை தியேட்டருக்கு அழைத்துப் போவதற்காக நாராயணன் அவளுடைய வீட்டிற்குச் சென்றான். மரியாவையும் உடன் அழைத்துச் செல்ல அவன் தீர்மானித்தான். ஜாவேத் ஏற்கெனவே தியேட்டருக்குப் போய் அங்கு நடக்கும் பல்வேறு வேலைகளையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். ஃபெர்னாண்டெஸ் மாஸ்ஸி உயிருடன் இருந்திருந்தால் அவர் முதலிலேயே தியேட்டருக்கு வந்திருப்பார். அதே நேரத்தில் அவர் நாடகத்தின் வெற்றிக்கு என்று கூறுவதைவிட அது நடப்பதற்கே ஒரு மிரட்டலாக இருந்திருப்பார் என்பது நிச்சயம். தன்னுடைய மகள் பகவந்தியாக நடிப்பதை அவர் ஏற்றுக் கொண்டிருப்பாரா? மரியா, பகவந்தி கதாபாத்திரத்தைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகு எப்படி நடந்து கொள்வாள் என்பதையும் நாராயணன் நினைத்துக் குழம்பினான். இந்த விஷயத்தைப் பற்றி முன் கூட்டியே தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்று மரியா கூட நினைத்தாலும் நினைக்கலாம். ஆனால், பல வகைப்பட்ட தந்திரங்களையும் உபயோகித்துத்தான் யாராலும் ஒரு போரில் வெற்றி என்ற ஒன்றைப் பெற முடியும் என்பதை மரியா புரிந்து கொள்ளாமலா இருப்பாள்? பகவந்தியின் கதையை எழுதி தான் கரீம்பாயையும் வசுந்தராவையும் மற்றவர்களையும் ஒரு போர்க்களத்திற்கு அழைத்துப் போவது மாதிரி கொண்டு சென்ற பொறுப்பிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. அந்தப் பொறுப்பு ஒரு இரும்பு குழாயைப் போல அழுத்தி அவனைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. கலை என்பது இந்த அளவிற்குப் போராட்டங்களும், கஷ்டங்களும் நிறைந்த ஒன்றா என்ன? நாராயணன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டான்.
ஒரு நீண்ட பயணத்திற்குச் செல்வதைப் போல நன்றாக ஆடையணிந்து ஒரு ஏர் பேகை வைத்தவாறு வசுந்தரா தயாராக நின்றிருந்தாள். அவளின் கலங்கிப் போயிருந்த கண்கள் அவள் இதுவரை அழுது கொண்டிருந்திருப்பாளோ என்றொரு எண்ணத்தை நாராயணனின் மனதில் உண்டாக்கியது. அவன் ஆர்வம் மேலோங்க அவளைப் பார்த்துக் கேட்டான். “ஆர் யூ ஆல் ரைட்?”
“நிச்சயமா...”- அவள் சொன்னாள். “என் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான நாள் இது. மனசுல கொஞ்சம் டென்ஷன் இருக்கு. அவ்வளவுதான்.”
அதைச் சொன்ன அவள் அடுத்த நிமிடம் புறப்படத் தயாரானாள்.
“அம்மா வரலியா?”
“இல்ல...”
“ஏன்? என்ன ஆச்சு?”
அவள் பதிலெதுவும் கூறாமல் அவன் கையைப் பற்றியவாறு அவனுடன் நடந்து போனாள். ஆழமுள்ள ஒரு பள்ளத்தில் விழப்போகும் ஒருவர் எப்படி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக யாரையாவது பிடித்துக் கொள்ளப் பார்ப்பார்களோ, அப்படி இருந்தது வசுந்தரா பிடித்தது. அவள் கைகள் இறுகப் பிடித்ததை அவன் தன் கைளில் உணர்ந்தான்.
பகல் முழுவதும் ஆள் நடமாட்டமே இல்லாமல், மாலை ஆறு மணி ஆகும்போது மட்டும் மனிதர்கள் வந்து கூடும் தியேட்டருக்கு முன்னால் எப்போதும் இல்லாமல் சிலர் சுற்றிக் கொண்டிருப்பதை நாராயணன் கவனித்தான். சாதாரணமாக நாடகங்கள் நடக்கும் தியேட்டர்களில் பார்க்காத முகங்கள் அவை. சினிமா தியேட்டர்களில் சுற்றிலும் பார்த்துக் கொண்டும் பதுங்கிக் கொண்டும் பகல் நேரத்தில் காட்டப்படும் படங்களைப் பார்க்க வரும் மனிதர்களின் முகங்களைப் போல அவை இருப்பதாக நாராயணன் நினைத்தான். பார்த்தா மீண்டுமொரு முறை லைட்டிங் வேலைகளைச் சோதனை செய்து பார்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். விக்டர் கரீம்பாய் அடர்த்தியான ஒரு நீல நிற டெனிம் ஷர்ட் அணிந்து, கழுத்தில் மஃப்ளரைத் தொங்கவிட்டவாறு அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தார். அவரின் முகத்தில் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருப்பது பார்க்கும்போதே தெரிந்தது. கடைசி காட்சி முடிந்து திரைச்சீலை கீழே விழுந்தால், அந்த கணமே அவர் க்ரீன் ரூமுக்குள் ஓடிச் சென்று அங்கு மறைத்து வைத்திருக்கும் ரம் பாட்டிலை எடுத்து வாய்க்குள் ஊற்ற ஆரம்பித்து விடுவார். அதுவரை அவரிடம் இந்தப் போராட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும். நாடகம் நடக்கின்ற நாட்களில் திரைச்சீலை கீழே விழும் வரை அவர் குடிப்பதில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம். கலைக்காக அவர் தனக்குத்தானே ஏற்றுக்கொண்ட ஒரு கடுமையான தண்டனை இது என்று கூடக் கூறலாம். அந்தத் தண்டனையின் கனத்தைத் தாங்கியவாறு அவர் ஒரு பைத்தியம் பிடித்த மனிதனைப் போல க்ரீன் ரூமுக்கும் மேடைக்கும் இடையில் அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தார். கலை கரீம்பாய்க்கு ஒரு நோய் மாதிரிதான்.
நாடகம் தொடங்குவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்பே தியேட்டர் முழுமையாக நிறைந்துவிட்டது. பெரிய சிவப்பு எழுத்துக்களில் ‘ஹவுஸ் ஃபுல்’ என்று எழுதப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகையை ஜாவேத் நுழைவாயிலில் கொண்டு போய் வைத்தான். அந்தப் பலகை அந்தத் தியேட்டரையே ஒரு திரைப்பட கொட்டகையாக மாற்றியது. அப்படிப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகை அந்தத் தியேட்டரிலேயே இப்போதுதான் முதல் தடவையாக வைக்கப்படுகிறது. அதைப் பார்த்த நாராயணன் கேட்டான். “இதை எங்கே நீ வாங்கினே?”
“நான் வர்றப்பவே எழுதி எடுத்திட்டு வந்தேன்” - ஜாவேத் மகிழ்ச்சியுடன் சொன்னான். “இந்தக் கூட்டம் நான் எதிர்பார்த்ததுதான்.”
நடக்கப்போகும் காரியங்களை முன் கூட்டியே புரிந்து கொண்டு அதற்குப் பொருத்தமாகச் செயலாற்றக் கூடிய குணத்தைக் கொண்டவன் ஜாவேத் என்பதை இந்தச் சம்பவம் காட்டியது.
மேடையின் ஒரு ஓரத்தில் மறைந்து நின்று கொண்டு நாராயணன் அரங்கத்திற்குள் தன் பார்வையை ஓட்டினான். தூரத்தில் பால்கனிக்கு மேலே டிம்மர் போர்டின் அருகில் ஒரு தொப்பியை அணிந்துகொண்டு நிற்கின்ற பார்த்தாவை அவன் பார்த்தான். அவனுடைய அந்தத் தொப்பி கரீம்பாயின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மஃப்ளரைப் போல எப்போதும் அவன் தலையில் இருக்கும். மழையோ பனியோ இல்லாத இந்தத் தியேட்டருக்குள் ஒரு தொப்பிக்கும் மஃப்ளருக்கம் என்ன தேவை வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். கரீம்பாயிடமோ பார்த்தாவிடமோ இதைப் பற்றி யாராவது கேட்டால், அதற்குரிய சரியான பதிலை அவர்களால் தர முடியுமா என்பது கூட சந்தேகமே.
அரங்கத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்த ஜனக்கூட்டத்தில் தனக்கு அறிமுகமான முகங்கள் பல இருப்பதை அவனால் காண முடிந்தது. நான்காவதோ ஐந்தாவதோ வரிசையில் அமர்ந்திருந்த இடுங்கிய தோள்களைக் கொண்ட கோட் அணிந்திருந்த மனிதரை இதற்கு முன் தான் எங்கோ பார்த்திருப்பதைப் போல நாராயணனுக்குத் தோன்றியது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook