
ஜான் அங்கிள் எற்றன் நகருக்கு வந்தார். “என் வீட்டுல உனக்காக ஒரு அறையை ஒதுக்கி வச்சிருக்கேன் வின்சென்ட்” என்றார் அவர்.
“ஸ்ட்ரிக்கர் உனக்கு நல்ல ஆசிரியரை ஏற்பாடு பண்ணித் தர்றேன்னு கடிதம் எழுதியிருக்காரு”- வின்சென்ட்டின் தாய் கூறினாள்.
ஊர்ஸுலாவிடமிருந்து மன வேதனைதான் தனக்குப் பரிசாகக் கிடைத்தது என்பதை நினைத்து நினைத்து உள்ளம் நொந்து போய் தனித்திருக்கும் வேளைகளில் தன்னை மறந்து அழுதான் வின்சென்ட். மனரீதியாக தான் மிகவும் பலவீனமான மனிதனாகி விட்டதை அவனால் உணர முடிந்தது. ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தால் உயர்ந்த படிப்பைப் படிக்க முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லாமல் இல்லை. வான்கா, ஸ்ட்ரிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணம், புத்தகம், பாசம் எல்லாம் தந்து தன்னை அரவணைத்துக் காப்பாற்ற தயாராக இருக்கிறார்கள் என்பதையும் அவன் நன்றாகவே அறிந்திருந்தான். இருந்தாலும், நடந்த சம்பவங்களில் இருந்து அவனால் முழுமையாக விடுதலை பெற முடியவில்லை என்பதே உண்மை. ஊர்ஸுலா இப்போதும் இங்கிலாந்தில் திருமணம் செய்யாமல் தனித்துதான் இருக்கிறாள். ஹாலண்டில் இருக்கிற காலம் வரை அவளிடமிருந்து தான் மிகவும் அன்னியப்பட்டு இருப்பதாகவே உணர்ந்தான் வின்சென்ட். ஆங்கில நாளிதழ்களில் பிரசுரமாகியிருந்த விளம்பரங்களைப் பார்த்து வேலைக்கு அவன் பல நிறுவனங்களுக்கும் மனு போட்டான். கடைசியில் அவனுக்கு லண்டனில் இருந்து புகை வண்டி மூலம் நாலரை மணி நேரம் பயணம் செய்யக்கூடிய தூரத்தில் இருக்கும் ராம்ஸ்கேட் என்ற இடத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் வேலை கிடைத்தது.
¤ ¤ ¤
சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டிருக்கும் புல் மைதானம். அதன் மத்தியில் இருந்தது மிஸ்டர் ஸ்டாக்ஸுக்குச் சொந்தமான கல்வி நிலையம். பத்து வயதிலிருந்து பதினான்கு வயது வரை இருக்கக்கூடிய இருபத்து நான்கு மாணவர்களுக்கு ஃப்ரெஞ்ச், ஜெர்மன், டச் மொழிகளைச் சொல்லித் தர வேண்டும். பாடம் முடிந்த பிறகு மாணவர்களின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் ஒழுங்காகக் குளிக்கிறார்களா, தங்கள் கடமைகளை ஒழுங்காக செய்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். இவைதான் வின்சென்ட்டுக்கு அங்கு கொடுக்கப்பட்டிருந்த வேலை. உணவும், அவன் செய்யும் வேலைக்காக எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் அளிக்கப்பட்டன. சம்பளம் என்று எதுவும் அவனுக்குக் கிடையாது.
ராம்ஸ்கேட்டின் அமைதியான சூழ்நிலை வின்சென்ட்டுக்கு மிகவும் இணங்கியதாக இருந்தது. சதா நேரமும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு என்னவோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பான் வின்சென்ட். எப்போது பார்த்தாலும் ஊர்ஸுலாவின் நினைவாகவே இருந்தான் அவன். தான் உயிருக்குயிராகக் காதலித்த அந்த காதல் தேவதையின் நினைவைத் தவிர அவன் மனதில் வேறு எதைப் பற்றிய நினைவும் இல்லை என்பதே உண்மை.
“எனக்குக் கொஞ்சம் சம்பளம்னு ஏதாவது தரக்கூடாதா மிஸ்டர் ஸ்டாக்ஸ்?”- வின்சென்ட் ஒருநாள் கேட்டான். “கொஞ்சம் புகையிலையும், ஆடைகளும் வாங்கணும்”- வின்சென்ட் இழுத்தான்.
“நிச்சயமா தர முடியாது. சாப்பாடும், தங்குறதுக்கு இடமும் தந்தால், பணமே வாங்காம வேலை பாக்குறதுக்கு இங்கே எத்தனை பேரு தயாராக இருக்காங்க தெரியுமா?”- ஸ்டாக்ஸ் சொன்ன பதில் இது.
ஒரு சனிக்கிழமை காலையில் வின்சென்ட் ராம்ஸ் கேட்டில் இருந்து லண்டனை நோக்கி கால் நடையாக நடக்க ஆரம்பித்தான். அன்று உஷ்ணம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கான்டர்பரியின் புகழ்பெற்ற சர்ச்சைச் சுற்றிலும் இருந்த மர நிழலில் சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு மீண்டும் தன் நடையைத் தொடர்ந்தான் வின்சென்ட். போகும் பாதையில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தைச் சுற்றி பீச் மரங்களும். எம் மரங்களும் நிறைய இருந்தன. அதிகாலை நான்கு மணி வரை அங்கேயே அவன் படுத்து உறங்கினான். பறவைகளின் சிறகடி சத்தமும் ‘கிரீச் கிரீச்’ குரலும் அவனை உறக்கத்தை விட்டு எழுப்பின. சாத்தம் என்ற இடத்தை அடைந்தபோது, தூரத்தில் நிறைந்து கிடந்த நீரையும், கப்பல்கள் நின்று கொண்டிருக்கும் தேம்ஸ் நதியையும் அவன் கண்டான். மாலை நேரத்தில் அவனுக்கு நன்கு அறிமுகமாயிருந்த லண்டன் நகரத்தை அடைந்தான். நடந்து வந்த களைப்பு பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல், லோயர் ஹவுஸை நோக்கி நடந்தான்.
ஊர்ஸுலா தனக்கு மிகவும் அருகில் இருக்கிறாள் என்பதை நினைத்துப் பார்த்தபோது வின்சென்ட்டின் மனதில் ஒரு இனம் புரியாத சுகம் உண்டானது. அவன் இதயம் படபடவென அடித்தது. என்னவென்று கூற முடியாத வேதனையால், அவன் உடலில் சிறிது நடுக்கம் இருந்தது. ஒரு மரத்தின் மேல் சாய்ந்தவாறு அந்த வீட்டையே வைத்த கண் எடுக்காது பார்த்தான். ஒவ்வொன்றாக வீட்டிலிருந்த விளக்குகள் அணைந்தன. கடைசியில் ஊர்ஸுலாவின் படுக்கையறை விளக்கும் அணைந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு. அடுத்த நிமிடம் நகர மனமே இல்லாமல், வின்சென்ட் அந்த இடத்தை விட்டு திரும்ப நடக்கத் தொடங்கினான். நடக்க நடக்க ஊர்ஸுலாவை விட்டு ரொம்ப தூரம் பிரிந்து போகிறோம் என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்து அவனை அலைக்கழித்தது. ஒவ்வொரு வாரமும் இதே கதைதான். ஊர்ஸுலா குடியிருக்கும் லோயர் ஹவுஸைத் தேடி வருவதும், விளக்குகள் அணைந்ததும் மீண்டும் திரும்பிப் போவதும்... ஊர்ஸுலாவை தூரத்தில் இருந்தாவது ஒருமுறை பார்க்க முடியாதா என்ற ஏக்கத்துடன் உணவை மறந்து, உறக்கத்தை மறந்து கால்நடையாக நடந்து வந்து... இப்படித் தன்னைத்தானே வருத்திக் கொண்டிருந்தான் வின்சென்ட். ராம்ஸ்கேட்டை மீண்டும் அடையும்போது கிட்டத்தட்ட உடல் தளர்ந்து மயக்கமடைகிற நிலையில் இருப்பான் அவன்.
சில மாதங்களுக்குப் பிறகு, ஐஸ்ல்வொர்த் என்ற இடத்தில் இருந்த மிஸ்டர் ஜோன்ஸுக்குச் சொந்தமான மெத்தடிஸ்ட் பள்ளிக் கூடத்தில் ஆசிரியராகப் பணி புரியும் நல்ல ஒரு வேலை வின்சென்ட்டுக்குக் கிடைத்தது. மாணவர்களுக்குப் பாடங்கள் சொல்லித் தருவதுடன், வேத பாடங்களும் சொல்லிக் கொடுப்பதும் அவனுக்கு வேலையாக இருந்தது. தானும் ஊர்ஸுலாவும் எதிர்காலத்தில் கணவன் – மனைவியாக வாழப் போவது மாதிரி கற்பனை பண்ணி தன் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தான் வின்சென்ட். மாணவர்களுக்கு வேத பாடங்களைக் கற்றுத் தருகிற போது தன்னுடன் ஒத்துழைத்து ஊர்ஸுலாவும் பணியாற்றுவது மாதிரி கனவுலகில் அவன் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஊர்ஸுலாவுக்குத் திருமணம் நடக்கப் போகிற நாள் நெருங்கிவிட்டது என்ற உண்மையை அவன் மறக்க முயற்சித்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook