Category: சினிமா Published Date Written by சுரா Hits: 4399
இரவு நேரம். அறையில் கண்களில் நீர் கசிய, அமர்ந்திருக்கிறாள் ரெபேக்கா. அவளுக்கு முன்னால் ஸ்டெப். தன் தாயின் முகத்தில் பரவியிருக்கும் உணர்ச்சிகளை கேமராவில் படம் பிடிக்கிறாள் அவளின் அன்பு மகள் ஸ்டெப்.
ரெபேக்கா பதிப்பாளருக்கு அனுப்பி வைத்த புகைப்படங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன என்ற தகவல் ரெபேக்காவிற்குக் கிடைக்கிறது. அதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்படுகிறாள் ரெபேக்கா.
ஸ்டெப்பின் பள்ளி. மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தலைப்பில் பேச, ஸ்டெப் தான் தன்னுடைய அன்னையுடன் சேர்ந்து கென்யாவிற்குச் சென்றது, அகதிகளின் முகாமில் புகைப்படங்கள் எடுத்தது, தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் வந்து துப்பாக்கியால் சுட்டது, மக்கள் இறந்து விழுந்தது, உயிரைப் பணயம் வைத்து தன் தாய் புகைப் படங்கள் எடுத்தது என்று பலவற்றையும் கூறி 'அப்படிப்பட்ட துணிச்சலான பெண் என் அருமைத் தாய்!' என்கிறாள் மனம் நெகிழ. அதை கதவிற்கு அருகில் நின்றிருக்கும் ரெபேக்கா கேட்கிறாள். அவளுடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர்....
இரவு வேளை. தன் இளைய மகள் லிஸாவின் காதில் ரெபேக்கா 'மகளே! குட்பை...' என்கிறாள்
தன் மூத்த மகள் ஸ்டெப்பைப் பாசம் பொங்க பார்த்தவாறு 'மகளே.... நான் புறப்படுகிறேன். சீக்கிரமே திரும்பி வருவேன். அதுவரை எனக்காக காத்திரு' என்கிறாள் ரெபேக்கா, தன் அன்னைக்கு பிரியா விடை தருகிறாள் ஸ்டெப்.
தன் கணவன் மார்க்கஸிடமும் அவள் விடை பெறுகிறாள்.
அவளால் நிச்சயம் கூண்டுப் பறவையாக இருக்க முடியாது. அவள் ஒரு சுதந்திரப் பறவை. அவளுக்கென்று கடமைகள் நிறைய இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவதற்குப் பிறந்தவள் அவள்.
தன் கடமைகளைச் செய்வதற்கு அவள் புறப்பட்டு விட்டாள்.
மீண்டும் ஆஃப்கானிஸ்தான்.
சோதனைச் சாவடியில் சோதனை. அவளைச் சோதித்து விட்டு, அனுப்புகிறார்கள் -- கேமராவுடன்தான்.
ஒரு இளம் பெண்ணை மனித வெடிகுண்டாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்த வித பயமும் இல்லாமல் நின்றிருக்கிறாள் பர்தா அணிந்த அந்தப் பெண். அந்த காட்சிகளை மிகவும் அமைதியாக தன் கேமராவில் புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டிருக்கிறாள் ரெபேக்கா.
அப்போது அவள் என்ன நினைத்தாளோ..... தரையில் அமர்ந்து உரத்த குரலில் அடக்க முடியாமல் அழுகிறாள் -- 'இந்தச் செயலை நிறுத்த மாட்டீர்களா?' என்று கேட்டவாறு.
அத்துடன் படம் முடிவடைகிறது.
படம் முடிந்து பல மணி நேரங்கள் ஆன பிறகும், நம் மனங்களில் துணிச்சல் மிக்க பெண் புகைப்படக்காரராக நடித்த ஜுலியட் பினோச்சேயின் அற்புதமான நடிப்புத் திறமை என்றும் மறக்க முடியாத அளவிற்கு நிரந்தரமாக தங்கி நிற்கும்.