Category: சினிமா Published Date Written by சுரா Hits: 4399
எந்தவித கவலையும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் தன் இளைய மகள் லிஸாவையும், படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான தன் மூத்த மகள் ஸ்டெப்பையும் அவள் நினைத்துப் பார்க்கிறாள், தன் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் தன் கணவனையும்தான். தன்னால் தன் குடும்பத்தில் உள்ளவர்கள் பதட்டத்துடனும், சந்தோஷமற்றும் இருப்பதை அவள் விரும்பவில்லை. அதனால் அவள் ஆழமாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்கிறாள். அது -- இனிமேல் குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனத்தைச் செலுத்துவது என்பது.
தன் கணவனுடனும், பிள்ளைகளுடனும் அவள் நேரத்தைச் செலவிடுகிறாள். எல்லோரும் சேர்ந்து பல இடங்களுக்குச் செல்கிறார்கள்... பார்க்கிறார்கள். வெளியே ரெஸ்ட்டாரெண்டுகளுக்குச் சென்று சந்தோஷத்துடன் சாப்பிடுகிறார்கள். அவளைப் பார்ப்பவர்கள் அவளை தலையில் வைத்து புகழ்கிறார்கள். 'நீங்கள் மிகவும் தைரியசாலி... திறமைசாலி... அடுத்து எந்த நாட்டிற்கு புகைப்படங்கள் எடுப்பதற்காகச் செல்கிறீர்கள்?' என்று கேட்கிறார்கள், அதற்கு அவள் 'நான் எங்கும் போவதாக இல்லை. இனிமேல் நான் என் குடும்பத்துடன் மட்டுமே' என்கிறாள். அதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியத்துடன் அவளையே பார்க்கிறார்கள்.
தன் இளைய மகளுக்கு பூனையொன்றை வாங்கித் தருகிறாள் ரெபேக்கா. தன் மூத்த மகள் படிக்கும் கல்விக் கூடத்திற்குச் சென்று அவள் நடனமாடுவதை அவள் மகிழ்ச்சியுடன் பார்க்கிறாள். தன் கணவனிடம் மனம் விட்டு பல விஷயங்களையும் பேசுகிறாள். இப்படியே வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறது, எல்லாவற்றையும் மறந்து விட்டு, சிரித்த முகத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறாள் ரெபேக்கா.
இதற்கிடையில் அவளுடைய நூலைப் பதிப்பிக்கும் பதிப்பாளர், அவள் அனுப்பி வைத்திருந்த சில புகைப்படங்களைப் பிரசுரம் செய்ய முடியாது என்று கூறுவதாகவும், மேலிடங்களிலிருந்து வரும் அழுத்தமே அதற்குக் காரணம் என்றும், பதிப்பகத்திலிருக்கும் ஒரு தொலைபேசியில் கூறுகிறார். அதைக் கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்று விடுகிறாள் ரெபேக்கா. 'நான் அனுப்பிய புகைப் படங்கள் கட்டாயம் பிரசுரிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், நான் வேறு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி விடும்' என்று அழுத்தமான குரலில் கூறுகிறாள் ரெபேக்கா.
ரெபேக்கா தன் கணவன், பிள்ளைகளுடன் சந்தோஷமாக நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறாள். வெளியே பொது இடமொன்றில் அவளைப் பார்த்த, அவளுக்கு நன்கு தெரிந்த நண்பர் ஒருவர் 'கென்யாவிலிருந்து வருகிறேன், நீங்கள் அங்கு போகவில்லையா? ஆபத்து எதுவும் இல்லை. நீங்கள் போகலாம்' என்கிறான், அதற்கு ரெபேக்கா 'நான் எங்குமே போவதாக இல்லை. குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறேன்' என்கிறாள்.
நாட்கள் நகர்கின்றன.
தன்னுடைய படிப்பின் ஒரு பகுதியாக ஆஃப்ரிக்காவைப் பற்றி தான் ஒரு சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்றும், அதனால் அதைப் பற்றிய தகவல்கள் தனக்கு தேவைப்படுகிறது என்றும் கூறுகிறாள் ரெபேக்காவின் மூத்த மகள் ஸ்டெப். அதைக் கேட்ட மார்க்கஸ் 'அதற்கு நான் ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறேன்... ஆமாம்... நீ உன் அம்மாவுடன் சேர்ந்து கென்யாவிற்குச் செல்லுங்கள்' என்கிறான். 'நான் இனி எங்கும் போவதாக இல்லை' என்று ரெபேக்கா கூற, 'அங்குதான் அமைதி நிலவுகிறது என்கிறார்களே! நீ நம் மகளை அங்கு அழைத்துக் கொண்டு செல்' என்கிறான் முழுமையான சம்மதத்துடன் -- ரெபேக்காவிடம். அவளின் சந்தோஷத்திற்குக் கேட்கவா வேண்டும்?
ரெபேக்காவும், மகள் ஸ்டெப்பும் கென்யாவிற்குச் செல்லும் விமானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தன்னுடைய ஒரு சிறிய கேமராவை ஸ்டெப்பிடம் தந்து, அதை வைத்து எப்படி புகைப் படங்களை எடுப்பது என்பதை அவளுக்குச் சொல்லித் தருகிறாள் ரெபேக்கா.
ஒரு காரில் ரெபேக்காவும், மகள் ஸ்டெப்பும் போய் ஒரு இடத்தில் இறங்குகிறார்கள். அது ஒரு அகதிகள் முகாம். கருப்பின மக்கள் அங்கு ஏராளமாக கூடாரங்கள் அமைத்து துயர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வளைத்து, வளைத்து தன்னுடைய பெரிய கேமராவில் புகைப்படங்கள் எடுக்கிறாள் ரெபேக்கா, ஸ்டெப் தான் வைத்திருக்கும் சிறிய கேமராவில் படங்களை எடுக்கிறாள். அவர்களை அங்கு அழைத்துச் சென்றவர்கள் 'ரெபேக்கா.... இங்கிருந்து கிளம்புவோம். நிலைமை மோசமாகிறது' என்கிறார்கள் -- பதட்டத்துடன். அதைத் தொடர்ந்து, குண்டுகள் வெடிக்கும் சத்தம். ஒரு தீவிரவாத குழு மனம் போனபடி சுடுகிறது. மக்கள் பயந்து ஓடுகிறார்கள்.
ரெபேக்கா 'என் மகளை நீங்கள் பத்திரமாக அழைத்துச் செல்லுங்கள். என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள்' என்று கூறி விட்டு, சிறிதும் பயமே இல்லாமல் கூடாரங்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு, புகைப்படங்கள் எடுக்கிறாள். ஆயுதங்களை ஏந்திய மனிதர்கள் இரக்கமில்லாமல் சுடுவது, ஏழை ஆஃப்ரிக்க அகதிகள் பயந்து ஓடுவது, செத்து மடிவது, காயங்கள் படுவது.... அனைத்தும் அவளுடைய கேமராவில் பதிகின்றன.
இரவு நேரம். தாங்கள் தங்கியிருந்த இடத்தில் வலைகளுக்குள் படுத்திருக்கிறார்கள் ரெபேக்காவும், ஸ்டெப்பும். 'இங்கு என்ன நடந்தது என்பது அப்பாவிற்குத் தெரிய வேண்டாம்' என்கிறாள் ஸ்டெப்.
மீண்டும் அயர்லேண்ட். ரெபேக்காவும், மகள் ஸ்டெப்பும் வீட்டிற்கு வருகிறார்கள். முன்பு இருந்ததைப்போல இல்லாமல், ஒரு இறுக்கமான சூழ்நிலை வீட்டில் நிலவிக் கொண்டிருக்கிறது. தன் தாய் மீது கோபத்துடன் இருக்கிறாள் ஸ்டெப். கென்யாவில் தன்னை அனுப்பிவிட்டு, உயிரைப் பணயம் வைத்து புகைப்படங்கள் எடுத்த தன் அன்னையின் செயல் அவளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவள் தன் தாயுடன் பேசுவதைக் கூட விரும்பாமல் இருக்கிறாள். ரெபேக்கா தன் மகளிடம் பேச முயற்சிக்க, ஸ்டெப் அதைத் தவிர்க்கிறாள்.
ஒரு நாள் தன் கேமராவில் பதிவான கென்யாவில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ரெபேக்கா, தொடர்ந்து ஸ்டெப்பின் சிறிய கேமராவில் படமாக்கப்பட்ட காட்சிகளையும்... அதில் ரெபேக்கா காரில் ஏற மறுத்தது, தன் மகளை மட்டும் அழைத்துச் செல்லும்படி கூறியது, அவள் மட்டும் தனியே சென்று புகைப்படங்கள் எடுத்தது... இவை அனைத்தும் பதிவாகி இருக்கின்றன. அப்போது அறைக்குள் வந்த மார்க்கஸ் அந்த காட்சிகளைப் பார்த்து விடுகிறான்.
அவ்வளவுதான் -- எரிமலையாக மாறி விடுகிறான் மார்க்கஸ். தன் மனைவி இன்னும் சிறிது கூட மாறவில்லை என்று அவன் முடிவு செய்கிறான். விளைவு -- அவளை அவன் வீட்டிலிருந்து வெளியேற்றுகிறான். அவள் மன்றாடிப் பார்க்கிறாள். ஆனால், அவனோ கேட்பதாக இல்லை.
தன் நண்பர்கள் வீட்டில் தங்குகிறாள் ரெபேக்கா, பின்னர் தன்னுடைய வீட்டிற்கு அவள் வருகிறாள். அவளை அவளுடைய கணவன், மகள்கள் இன்முகத்துடன் வரவேற்கவில்லை. ஒரு வித கோபத்துடன் அவர்கள் இருக்கிறார்கள்.