Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

தி ஒயிட் பலூன் - Page 2

The White Balloon

அவளுக்கு அழுகை வருகிறது. தங்க மீன் வாங்குவதற்காக தன் தாய் தந்த டொமான் நோட்டை இப்படி அறிவில்லாமல் ஏமாந்து கொடுத்து விட்டோமே என்பதை நினைத்து, அவள் கவலைப்படுகிறாள். 'அந்த டொமான் நோட்டைத் திருப்பித் தாங்க. எங்க அம்மா தங்க மீன் வாங்குவதற்காக எனக்கு தந்தது அது. 100 டொமனுக்கு தங்க மீன் வாங்கிவிட்டு, மீதியை வீட்டில் கொண்டு போய் கொடுக்க வேண்டும்' என்று அழுது கொண்டே கூறுகிறாள் சிறுமி ரஸியே.

சிறுமியின் அழுகையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அந்த பணத்தை பாம்பு வித்தை காட்டும் மனிதன் திரும்ப தருகிறான். மலர்ந்த முகத்துடன் அதை வாங்கும் ரஸியே, மீண்டும் அதை கண்ணாடி ஜாடிக்குள் போட்டுக் கொண்டு தங்க மீன்கள் இருக்கும் கடையை நோக்கி ஆர்வத்துடன் நடக்கிறாள்.

தங்க மீன் விற்பனை செய்யப்படும் கடைக்கு வந்த அவள், ஒரு மீனைக் காட்டி 'எனக்கு இந்த மீன்தான் வேண்டும்' என்று கூறுகிறாள். கடைக்காரர் பணத்தைக் கேட்க, பணத்தை எடுப்பதற்காக ஜாடிக்குள் கையை விடுகிறாள் ரஸியே. அப்போதுதான் தெரிகிறது- அதற்குள் அந்த டொமான் நோட்டு இல்லை. அது எங்கு போனது?

அவ்வளவுதான்- அடக்க முடியாத அளவிற்கு அவளுக்கு அழுகை வருகிறது. கண்களில் நீர் அரும்ப நின்று கொண்டிருக்கும் அந்த அழகுச் சிறுமியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஒரு வயதான பெண். அவள் மீது பரிதாபப்பட்ட அவள் 'வழியில் எங்காவது ஜாடியை வைத்தாயா?' என்று கேட்கிறாள். வழியில் ஒரு பேக்கரியின் வாசலில் வைத்ததாக கூறுகிறாள் சிறுமி.

அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டு நடக்கிறாள் அந்த பெண். இருவரும் நடந்து அந்த பேக்கரி கடைக்கு அருகில் வருகிறார்கள். அங்கு பண நோட்டு கீழே எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என்று பார்க்கிறார்கள். ஆனால்,  அங்கு இல்லை. கவலையுடன் இருவரும் நடக்க, வழியில் தரையில் பதிக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளுக்குக் கீழே, பள்ளத்திற்குள் தன்னுடைய டொமான் நோட்டு கிடப்பதைப் பார்க்கிறாள் ரஸியே. அவள் நடந்து வரும்போது, ஜாடியிலிருந்து அந்த பண நோட்டு தவறி கீழே விழுந்திருக்கிறது? அதை எப்படி எடுப்பது? அதை எடுப்பது என்றால்... அதற்கு அருகில் இருந்த கடை, புது வருடம் பிறக்க இருப்பதால் சீக்கிரமே மூடப்பட்டு விட்டது. பிறகு... என்ன செய்வது?

அந்த வயதான பெண் அருகிலிருந்த டெய்லரின் கடையில் விஷயத்தைக் கூறி. 'இந்தச் சிறுமியின் பணம் அந்த குழிக்குள் விழுந்து கிடக்கிறது. அதை எடுப்பதற்கு கொஞ்சம் உதவுங்கள்' என்கிறாள். அந்த வயதான டெய்லரிடம் சிறுமியை ஒப்படைத்து விட்டு, அந்தப் பெண் அங்கிருந்து செல்கிறாள். டெய்லர் தன் பணியாளை ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று நிமிடக் கணக்கில் திட்டிக் கொண்டிருக்கிறார். அவளுக்கு உதவும் நிலையில் அந்த மனிதர் இல்லை என்பதை அந்தச் சிறுமி புரிந்து கொள்கிறாள். நமக்கும் அது புரிகிறது.

வெளியே வந்த சிறுமி, பக்கத்து கடைக்காரர்களிடம் விஷயத்தைக் கூறுகிறாள். அவர்களும் முயன்று பார்க்கிறார்கள். ஆனால், முடியவில்லை. 'இந்தக் குழிக்குள் இருக்கும் பண நோட்டை எடுக்க வேண்டுமென்றால், அதற்கு அருகில் இருக்கும் கடைக்காரரிடம்தான் அதற்கான கருவிகள் இருக்கின்றன. ஆனால், புது வருடம் பிறக்க இருப்பதால், அவர் கடையை மூடி விட்டு போய் விட்டாரே'! என்று கூறி விட்டு, அவர்களும் தங்களின் கடைகளை அடைத்து விட்டு கிளம்பி விடுகிறார்கள்.

இதற்கிடையில் அவளுடைய அண்ணன் அலி அங்கு வருகிறான். அவனிடம் தன்னுடைய மோசமான சூழ்நிலையை விவரிக்கிறாள் சிறுமி. அலி இரும்புக் கம்பிகளின் வழியே, கீழே பார்க்கிறான். பள்ளத்திற்குள் டொமான் நோட்டு படபடத்துக் கொண்டிருக்கிறது. வேகமாக ஓடிய அலி, ஒரு ராணுவ வீரரை அழைத்துக் கொண்டு வருகிறான். அவரை வைத்து அந்த பண நோட்டை எடுப்பதற்காக இருவரும் முயற்சிக்கிறார்கள். அதுவும் தோல்வியிலேயே முடிகிறது.

இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல், கவலையுடன் கடை வீதியில் அமர்ந்திருக்கின்றனர். இருவரின் முகங்களிலும் ஏராளமான கவலை. கடை வீதியில் யாருமே இல்லை. இன்னும் சில நிமிடங்களில் புது வருடம் பிறக்கப் போகிறது. ஆனால், அவர்களிடம் மட்டும் சந்தோஷம் இல்லை.

அப்போது அந்த வழியாக ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு இளம் பலூன் விற்கும் மனிதன் நடந்து வருகிறான். அவனிடம் பலூன்கள் தொங்க விடப்படும் ஒரு கழி இருக்கிறது. எல்லா பலூன்களும் விற்பனையாகி விட்டன. ஒரே ஒரு வெள்ளை நிற பலூன் மட்டும் விற்கப்படாமல் அவனிடம் இருக்கிறது. அதைப் பார்த்த சிறுவன் அலி, அந்த கழியை வைத்து உள்ளே விழுந்து கிடக்கும் பண நோட்டை எடுத்துத் தரும்படி கேட்கிறான். அந்த இளம் வியாபாரி கழியைக் குழிக்குள் விடுகிறான். அது டொமான் நோட்டைத் தொடுகிறது. ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை.

என்ன செய்வது என்று மூவரும் யோசிக்கிறார்கள். அந்த பின் இரவு வேளையில் கடைவீதியில்  இருப்பதே அந்த மூன்று பேர்தாம். சிறுவன் ஓடிச் சென்று வேறொரு இடத்திலிருந்த கடையிலிருந்து ஒரு 'சுவிங்கம்' வாங்கிக் கொண்டு வருகிறான். அதை அந்த கழியின் ஓரத்தில் ஒட்ட வைத்து, குழிக்குள் விழ, பண நோட்டு அதனுடன் ஒட்டிக் கொண்டு வெளியே வருகிறது.

டொமான் நோட்டு கையில் கிடைத்தவுடன், சிறுமி ரஸியேவிற்கு உண்டான சந்தோஷம் இருக்கிறதே...! அப்பப்பா...!

இனி என்ன? தங்க மீனை வாங்க வேண்டியதுதானே! காணாமல் போன பணம்தான் கைக்கு வந்து விட்டதே!

ரஸியேவும், சிறுவன் அலியும் தங்க மீனை வாங்குவதற்காக அங்கிருந்து வேகமாக ஓடுகிறார்கள். வெள்ளை நிற பலூன் தொங்கிக் கொண்டிருக்கும் கழியுடன் நடக்கிறான் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம் வியாபாரி.

ரஸியேவாக நடித்திருக்கும் சிறுமியின் பெயர்- Aida Mohammadkhani. சிறுவன் அலியாக நடித்திருப்பது- Mohsen Kalifi. பாத்திரங்களாகவே இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக- சிறுமி!

எத்தனை வருடங்கள் ஆனாலும், நம்மால் 'The White Balloon' படத்தை மறக்கவே முடியாது- அந்தச் சிறுமியையும்தான்....

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version