
இன்னொரு முறை தனக்கு ஒரு 'வாக் மேன்' வேண்டும் என்று தன் தாயிடம் கேட்கிறாள் ஹை-மி. சாயங்காலம் திரும்பி வரும்போது, அவளுடைய அறையில் ஒரு மஞ்சள் நிற வாக்மேன் இருக்கிறது. தன் அன்னைதான் வாங்கி வைத்திருக்கிறாள் என்று நினைத்து, சந்தோஷத்துடன் அதை பயன்படுத்துகிறாள் ஹை-மி. ஆனால், பின்னர் அது ஜின்-ஆவிற்குச் சொந்தமானது, தான் தன் அன்னையிடம் கூறியதைக் கேட்டு அவள் தன்னுடைய வாக்மேனைக் கொண்டு வந்து வைத்திருக்கிறாள் என்பது தெரிந்ததும், அதை ஜின்-ஆவிடமே திருப்பித் தந்து விடுகிறாள் ஹை-மி. அத்துடன் நின்றால் பரவாயில்லை. 'இந்த மாதிரி வேலைகளையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே. மழையில் குடையைக் கொண்டு வந்து என் மீது பிடிக்கிறாய். இப்போது உன்னுடைய வாக்மேனை என் அறையில் கொண்டு வந்து வைக்கிறாய். இவையெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. நீ எங்களுடைய வீட்டில் தங்கியிருக்கலாம். அதற்காக நீ எங்களுக்கு இணையாகி விட மாட்டாய். நாம் இருவரும் வெவ்வேறு வகைப்பட்டவர்கள். நான் ஒழுக்கத்தைப் பெரிதாக நினைப்பவள். உடலைப் புனிதமாக நினைப்பவள். நீ சரீரத்தை வைத்து பிழைத்துக் கொண்டிருப்பவள். நீ வேறு உலகம்... நான் வேறு உலகம்' என்று கூறுகிறாள். அவள் பேசுவதைக் கேட்டு, சிலையென நின்று கொண்டிருக்கிறாள் ஜின்-ஆ.
பொதுவாகவே ஹை-மி தன்னை ஒரு ஆணைப் போலவே நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஆண்களைப் போல, தலை முடியை ஒட்ட வெட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள். பெரும்பாலும் அவள் அணிவது ஆண்கள் அணியக் கூடிய பேண்ட்டையும், அரைக் கை வெள்ளை நிற சட்டையையும்தான். பெண்களுக்கே உரிய நளினம், மென்மைத்தனம் எதுவும் இல்லாமல், முகத்தை எப்போதும் சீரியஸாக வைத்துக் கொண்டு மிடுக்கான தோரணையிலேயே ஒவ்வொரு செயலிலும் இருக்கிறாள் அவள். அவளுக்கு ஒரு 'பாய் ஃப்ரண்ட்' இருக்கிறான். அவனைப் பெரும்பாலும் தன் அருகிலேயே நெருங்க விடுவதில்லை அவள். ஒரு நாள் தனித்திருக்கும் வேளையில் ஹை-மியை உடல் ரீதியாக அடைவதற்கு முயற்சிக்கிறான் அவன். ஆனால், அவளோ உறுதியாக மறுத்து விடுகிறாள். 'திருமணம் ஆவதற்கு முன்பு இந்த விஷயத்திற்கு நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்' என்கிறாள் பிடிவாதமான குரலில். தான் நினைத்தது நடக்கவில்லை என்ற ஏமாற்றத்துடன், அவளையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவளுடைய 'பாய் ஃப்ரண்ட்.'
விஷயம் அத்துடன் நிற்கவில்லை. ஹை-மியிடம் ஆசைப்பட்டது நடக்கவில்லை என்றவுடன், வேறு ஏதாவது பெண்ணுடன் உறவு கொண்டால் என்ன என்று நினைக்கும் அந்த 'பாய் ஃப்ரண்ட்', விபச்சாரம் நடக்கும் 'Bird Cage Inn' என்ற இல்லத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு வருகிறான். அதுதான் ஹை-மியின் வீடு என்பதோ, விபச்சாரம் நடத்தி கிடைக்கும் பணத்தில்தான் அவர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதோ அவனுக்கு தெரியாது. அவன் ஜின்-ஆவின் அறைக்குள் நுழைகிறான்.
இரவு ஆரம்பமாகும் நேரத்தில் வீட்டிற்குத் திரும்பி வருகிறாள் ஹை-மி. ஜின்-ஆவின் அறையின் வாசலில் கழற்றிப் போடப்பட்டிருக்கும் ஷூக்களைப் பார்க்கிறாள். அவை தன்னுடைய 'பாய் ஃப்ரண்ட்'டுக்குச் சொந்தமானவை போல இருக்கின்றனவே என்று சந்தேகத்துடன் பார்க்கிறாள்.
அறைக்குள் போன 'பாய் ஃப்ரண்ட்' தன் ஆடைகளைக் கழற்றுகிறான். ஜின்-ஆவும். அதற்குள் தன் காதலி ஹை-மியின் ஞாபகம் வந்து விடவே, அவளுக்கு துரோகம் செய்யலாமா என்று நினைத்து, பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, எந்த 'தப்பும்' செய்யாமல் அங்கிருந்து அவன் வெளியேறுகிறான். அவனைப் பற்றிய தகவல் தெரிந்து, அவனையே வினோதமாக பார்க்கிறாள் ஜின்-ஆ.
வெளியே வந்து பார்க்கிறாள் ஹை-மி. ஷூக்கள் இருந்த இடத்தில் இப்போது அவை இல்லை. அப்படியென்றால், அவன் போய் விட்டானோ என்ற நினைப்புடன் அவள் நின்று கொண்டிருக்கிறாள்.
இதற்கிடையில் ஹை-மியின் உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் தம்பி ஹ்யுன்-வூ (Hyun-woo), எப்போது பார்த்தாலும் ஜின்-ஆவையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறான். அவனிடம் ஒரு கேமரா இருக்கிறது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவன் அவன். அவளை நிர்வாணமாக படமெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான் அவன். அதை அவளிடம் பல முறைகள் அவன் கூறுகிறான். ஆனால், ஜின்-ஆ அதற்கு மறுத்து விடுகிறாள்.
இருப்பினும், விடாமல் அவளை நச்சரித்துக் கொண்டே இருக்கிறான் பையன். ஒருநாள் கடலோரத்தில் அமர்ந்திருக்கிறாள் ஜின்-ஆ. அங்கு சிறுவன் ஹ்யுன்-வூ வருகிறான். 'புகைப்பட போட்டி நடக்கப் போகிறது. நான் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். யார் யாரிடமெல்லாமோ, நிர்வாணமாக மறுப்பே கூறாமல் நீ படுத்துக் கிடக்கிறாய். எனக்கு ஒரே ஒரு முறை ஒரு புகைப் படத்திற்காக நிர்வாணமாக 'போஸ்' தரக் கூடாதா?' என்று கெஞ்சுகிறான். பையனின் பரிதாபமான நிலையைப் பார்த்து, இறுதியில் அவள் சம்மதிக்கிறாள். கடலோரத்தில் நின்றிருந்த ஒரு கப்பலில் அவளை நிர்வாணமாக புகைப்படங்கள் எடுக்கிறான் ஹ்யுன்-வூ. புகைப்படங்கள் எடுத்து முடித்தவுடன், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் அவன், அவளுடன் உடலுறவு கொள்ள நினைக்கிறான். ஆரம்பத்தில் மறுக்கும் அவள், கடைசியில் சம்மதிக்கிறாள். அவர்களுக்கிடையே உடல் ரீதியான உறவு உண்டாகிறது.
ஜின்-ஆவின் 'சகோதரன்' என்று கூறிக் கொண்டு அவளை வைத்து முன்பு பிழைப்பு நடத்திய ஒருவன் அவ்வப்போது அந்த இல்லத்திற்கு வருகிறான். அவளுடன் உடலுறவு கொள்கிறான். இறுதியில், அவள் சம்பாதித்து வைத்திருக்கும் பணம் முழுவதையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறான். இது பல தடவைகள் நடக்கிறது.
ஹ்யுன்-வூ புகைப்படப் போட்டிக்கு அனுப்பி வைத்த புகைப்படத்தைப் பார்த்த ஒரு பத்திரிகையின் உரிமையாளர், சிறுவனைத் தேடி வருகிறார். சிறிய ஒரு தொகையைத் தந்து விட்டு, அவனிடமிருந்த முழு நெகட்டிவ்களையும் வாங்கிக் கொண்டு செல்கிறார் அவர். அந்த புகைப்படங்கள் ஒரு மாத இதழின் அட்டையிலும், உள்ளேயும் பிரசுரிக்கப்பட்டு, வெளியே வருகிறது. அனைத்தும் ஜின்-ஆவின் நிர்வாண படங்கள்!
அவற்றைப் பார்த்த 'சகோதரன்' என்று கூறிக் கொண்டு ஜின்-ஆவைத் தேடி வரும் மனிதன், மீண்டும் வருகிறான். அந்த புகைப்படங்களின் மூலம் அவள் பெரிய தொகையை வாங்கியிருப்பாள் என்று நினைத்து, பணத்தைக் கேட்கிறான். தான் எதுவுமே வாங்கவில்லை என்கிறாள் அவள். கோபத்தில் அவளை அடிக்கிறான் அவன். அப்போது ஹை-மி அங்கு வருகிறாள். ஜின்-ஆவை அவள் காப்பாற்றுகிறாள். தான் மீண்டும் வருவதாக கூறிவிட்டுச் செல்கிறான் அந்த 'சகோதரன்.'
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook