
வயிற்றுப் பிழைப்பிற்கு வேறு வழியில்லை என்பதற்காகத்தான் அவள் தன் உடலையே விற்று வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால், அவளை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் அந்த குடும்பத்தில் உள்ளவர்களே அவளைச் சொந்த ஆசைக்கு பலிகடா ஆக்குகிறார்கள் என்றால்...? அப்படியொரு காரியமும் அங்கு நடக்கிறது. அந்த குடும்பத்தின் தலைவன் யாரிடமும் எதுவும் பேச மாட்டார். நடுத்தர வயதைத் தாண்டிய அந்த மனிதர் பருமனான சரீரத்தைக் கொண்டவர். அமைதியாக அமர்ந்து, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். இல்லாவிட்டால் வர்ணத்தை இழந்திருக்கும் வெளிச் சுவரில் தன்னுடைய அறிவுக்கு எப்படி முடியுமோ, அந்த அளவிற்கு மீனை தூரிகையால் வரைந்து கொண்டிருப்பார். ஜின்-ஆவின் ஒவ்வொரு செயலையும் ஆழமாக பார்த்துக் கொண்டிருப்பார்- எதுவுமே பேசாமல். மிகவும் கறராக இருக்கும் அவரைப் பார்த்தால், யாருமே பயப்படுவார்கள். சுருக்கமாக கூறுவதாக இருந்தால்- அந்த குடும்பத்தை அவர் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
அப்படிப்பட்ட அவர் ஒருநாள் யாரும் இல்லாத வேளையில் ஜின்-ஆவின் அறைக்குள் அவளைப் பின் பற்றி நுழைகிறார். தான் உள்ளே நுழைந்தவுடன், கதவை அடைக்கிறார். அதை ஜின்-ஆ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அந்த மனிதரின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்கிறாள். 'முடியாது. வெளியே செல்லுங்கள்' என சத்தம் போடுகிறாள். ஆனால், அந்த மனிதர் கேட்பதாக இல்லை. அவளுடைய விருப்பத்திற்கு எதிராக அவள் மீது பலவந்தமாக ஆக்கிரமிக்கிறார். தன் மகளின் வயது கொண்ட அந்த அழகுச் சிலையின் மீது, தொப்பை விழுந்து, பார்க்கவே சகிக்காத தன்னுடைய உடலை படர விடுகிறார். தப்பிப்பதற்கு வழியில்லை என்றவுடன் அமைதியாகி விடுகிறது அந்த இளம் கிளி. எதைப் பற்றியுமே கவலைப்படாமல், தன் காம வெறியை மட்டுமே பெரிதாக நினைத்து, அவளை பாடாய் படுத்தி தன் உடல் ஆசையை தீர்த்துக் கொள்கிறது அந்த மிருகம். எல்லாம் முடிந்து, எதுவுமே நடக்காதது மாதிரி அவர் வெளியே வருகிறார்.
அந்த இல்லத்தின் தலைவி ஜின்-ஆவை தாங்கள் உயிர் வாழ்வதற்காக, உதவ வந்திருக்கும் பிறவி என்பதைத் தாண்டி எதையுமே நினைக்கவில்லை. ஆனால், முடிந்த வரைக்கும் அவளுக்கு ஒரு குறையும் இல்லாமல் அவள் பார்த்துக் கொள்கிறாள். அவர்களுடைய பருவ வயதில் இருக்கும் மகள் (ஜின்-ஆவின் வயதுதான் அவளுக்கு) கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். மகன் உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான்.
என்னதான் ஜின்-ஆ தங்களுடைய வீட்டின் ஒரு அறையில்தான் தங்கியிருக்கிறாள் என்றாலும், அவள் மற்றவர்களுடன் உடலைப் பங்கு வைப்பதன் மூலம்தான் தங்களுடைய தேவைகளே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாலும், இல்லத்து உரிமையாளர்களின் மகள் ஹை-மி (Hye-mi), ஜின்-ஆவை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் இருக்கிறாள். எப்போதும் அவளை ஒரு கேவலமான பிறவியாகவே அவள் பார்க்கிறாள். சரீரத்தை விற்று பிழைப்பு நடத்துபவள்தானே என்று புழு, பூச்சியைப் பார்ப்பதைப் போல வெறுப்புடன் பார்க்கிறாள். தங்கள் குடும்பத்துடன் சரி சமமாக, வட்டமாக உட்கார்ந்து கையில் குச்சியை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அருகில் அமர்ந்திருக்கும் ஹை-மி, சகித்துக் கொள்ள முடியாததைப் போல ஜின்-ஆவைப் பார்க்கிறாள். 'நான் எத்தனை முறை கூறியிருக்கிறேன்? இனிமேல் எங்களுடன் சேர்ந்து நீ சாப்பிடக் கூடாது. நீ உன்னுடைய அறைக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடு' என்கிறாள். அப்படி அவள் ஏளனமாக பேசுவதைக் கேட்டு மனதிற்குள் வருத்தப்பட்டாலும், எதையும் காட்டிக் கொள்ளாமல், அமைதி புறாவாக இருந்து விடுகிறாள் ஜின்-ஆ. இந்த அவமான சம்பவங்கள் ஒரு முறை, இருமுறை அல்ல... பல தடவைகள் நடக்கின்றன. ஹை-மியின் இந்த அடாவடித் தனங்கள் ஒவ்வொன்றையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்கிறாள் ஜின்-ஆ.
அறைகளுக்கு வெளியே நீர் வரும் குழாய் இருக்கும். அங்கு தான் நீர் எடுப்பது, பாத்திரங்கள் கழுவுவது, குளிப்பது, பல் துலக்குவது... அனைத்தும். குழாய்க்கு அருகியேலே இருக்கும் ஒரு தூணில் தொங்கிக் கொண்டிருக்கும் ப்ளாஸ்ட்டிக் உறையில் அங்குள்ள எல்லோருடைய டூத் ப்ரஷ்களும் இருக்கும். அவரவர்கள் வந்து, பல் துலக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஜின்-ஆ வந்து, பேஸ்ட்டை எடுக்கும்போது, பல நேரங்களில் அவளிடமிருந்து அதை வெறுப்புடன் பிடுங்கியிருக்கிறாள் ஹை-மி. 'ச்சீ... கேவலமான பிறவியான நீ எந்த கையை வைத்து டூத் பேஸ்ட்டை எடுக்கிறாய்? இனிமேல் இங்கே இருக்கும் டூத் பேஸ்ட்டை நீ எடுக்கக் கூடாது' என்பாள் கண்டிப்பான குரலில் அவள். அப்போதெல்லாம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பாள் ஜின்-ஆ. நமக்கே அவளைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கும்!
ஒரு நாள் ஹை-மி கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறாள். அப்போது கையில் குடை இல்லை. திடீரென மழை வந்து விடுகிறது. என்ன செய்வது என்று தெரியாமல், மழையில் நனைந்து கொண்டே அவள் புறப்பட்டு போய்க் கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்து கவலைப்பட்ட ஜின்-ஆ, அவளுக்குப் பின்னால் ஓடி வந்து, தன்னுடைய வர்ண குடையைக் கொண்டு அவள் மீது மழை நீர் விழாமல், தலைக்கு மேலே பிடிக்கிறாள். ஆனால், அதை ஒதுக்கி விட்டு ஹை-மி வேகமாக நடக்கிறாள். பிறகும், விடாமல் அவளை குடை பிடித்து காப்பாற்ற பார்க்கிறாள் ஜின்-ஆ. ஆனால் ஹை-மியோ வெறுப்புடன் குடையைப் பிடுங்கி எறிய, தெருவில் பெய்து கொண்டிருக்கும் மழையில் நனைந்து கொண்டு கிடக்கிறது குடை. தான் உதவி செய்ய வந்து, அவமானப்பட்டு நிற்கும் கேவலமான நிலையை நினைத்து நொந்து கொண்டு கவலையுடன் நின்றிருக்கிறாள் ஜின்-ஆ.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook