Category: சினிமா Published Date Written by சுரா Hits: 6165
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
The Kid - தி கிட்
(அமெரிக்க திரைப்படம்)
1921ஆம் ஆண்டில் திரைக்கு வந்த பேசாத படம் (Silent Movie). இப்போது உலகமெங்கும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கலையுலக மேதை சார்லி சாப்ளின் எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்த படம். சாப்ளின் இயக்கிய முதல் முழு நீள திரைப் படம் இதுதான். திரைக்கு வந்தபோது, மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று, பணத்தை வாரி குவித்த படம்.
வருடங்கள் எவ்வளவோ கடந்தோடிய பிறகும் இந்தப் படம் திரைப்பட ரசிகர்களாலும், சார்லி சாப்ளினின் ரசிகர்களாலும் இப்போது கூட தலையில் வைத்து சந்தோஷத்துடன் கொண்டாடப்படுகிறது என்றால், அதற்குக் காரணம் - இந்தப் படத்தின் கதையும், அதில் இடம் பெற்ற அருமையான காட்சிகளும், மனதில் நிற்கக் கூடிய கலைஞர்களின் நடிப்புத் திறமையும்தான்.
‘The Kid’ அப்படி என்ன அருமையான கதையைக் கொண்டிருக்கிறது?
இன்னும் திருமணமாகாத நிலையில் இருக்கும் ஒரு பெண் தனக்கு புதிதாக பிறந்திருக்கும் மகனுடன், ஒரு தர்ம மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறாள்.
அந்த குழந்தையின் உண்மையான தந்தை ஒரு ஓவியன். அவன் அந்த பெண்ணின் புகைப் படத்துடன் உட்கார்ந்திருக்கிறான். அவனுக்கு முன்னால் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அவன் கையில் வைத்திருந்த புகைப்படம் கை தவறி நெருப்பில் விழுகிறது. முதலில் அதை எடுத்தவன், பின்னர் என்ன நினைத்தானோ - அந்த புகைப் படத்தை நெருப்புக்குள்ளேயே போட்டு எரியச் செய்து விடுகிறான்.
குழந்தையின் தாய் தனக்குப் பிறந்த அந்த ஆண் குழந்தையை ஒரு விலை மதிப்புள்ள காரின் பின் இருக்கையில் அனாதையாக வைத்து விட்டு, ஓடி விட வேண்டும் என்று தீர்மானிக்கிறாள். குழந்தைக்கு அருகில் ஒரு சிறு குறிப்பை எழுதி வைக்கிறாள். ‘இந்த குழந்தையைப் பார்ப்பவர்கள், அதன் மீது அன்பு செலுத்தி வளருங்கள்’ என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், வெறுமனே சாலையில் நின்றிருந்த அந்த காரை இரண்டு நபர்கள் திருடிக் கொண்டு சென்று விடுகிறார்கள். திருடிச் சென்ற இருவரும் அந்த குழந்தையைப் பார்க்கிறார்கள். இது என்னடா புதிய பிரச்னை என்று தலையைப் பிய்த்துக் கொள்ளும் அவர்கள் அந்த குழந்தையை தெருவில் போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள்.
எந்தவிதமான வேலையும் இல்லாமல், ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஏழை மனிதன் அனாதையாக கிடக்கும் அந்த ஆண் குழந்தையைப் பார்க்கிறான். அந்த குழந்தையை தான் எடுக்க வேண்டுமா என்று ஆரம்பத்தில் தயங்கும் அவன், பின்னர் தன் மனதில் உண்டான ஈரத்தின் காரணமாக அந்த குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறான்.
தனக்கென்று உலகத்தில் யாருமே இல்லாத அந்த ஏழை மனிதன், ஒரு குழந்தை தனக்கு கிடைத்திருக்கிறது என்பதை நினைத்து சந்தோஷப்படுகிறான். அதை தன் சொந்தக் குழந்தையைப் போல வளர்க்கிறான். அதற்கு ஜான் என்று பெயர் வைக்கிறான். பலவித சிரமங்களுக்கு மத்தியில் அந்த ஆண் குழந்தையைப் பொக்கிஷத்தைப் போல பாதுகாத்து வளர்க்கிறான். அந்தச் சிறுவனும் அந்த மனிதனுடன் பசையைப் போல ஒட்டிக் கொள்கிறான். அந்த ஏழை மனிதனுக்கு அந்தச் சிறுவன்தான் உலகம். அந்தச் சிறுவனுக்கு அவன்தான் உலகம். வறுமையை அந்த இரு உயிர்களும் பங்கு போட்டு வாழ்கின்றன.
இப்படியே ஐந்து வருடங்கள் கடந்தோடி விடுகின்றன. சிறு சிறு சட்ட விரோதச் செயல்களையும், குற்றச் செயல்களையும் செய்துதான் அந்த ஏழை மனிதன் இதுவரை தன்னுடைய வாழ்க்கையை ஓட்டி வந்திருக்கிறான். இப்போது குற்றச் செயல்களில், அந்தச் சிறுவனும் துணையாக இருக்கிறான். அவன் ஏதாவது வீட்டின் கண்ணாடியின் மீது கல்லை விட்டெறிந்து உடைப்பான். அடுத்த சில நிமிடங்களில் அந்த கண்ணாடியை சீர் பண்ணுவதற்கு போய் நிற்பான் அந்த மனிதன். இப்படி பல கில்லாடித்தனமான வேலைகளைச் செய்து அந்த இருவரும் தங்களின் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் அந்தச் சிறுவனை தெருவில் அனாதையாக போட்டுச் சென்ற அவனுடைய தாய் மிகவும் வசதி படைத்த பெண்ணாக ஆகிறாள். தான் ஏழையாக இருந்தபோது, தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை தெருவில் சர்வசாதாரணமாக போட்டுவிட்டு வந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியால் அவள் தினமும் மனதிற்குள் குமைந்து கொண்டிருக்கிறாள். தன் செயலுக்காக அவள் உண்மையிலேயே வருத்தப்படுகிறாள். அந்த குற்ற உணர்ச்சியின் காரணமாக, அவள் பல தர்மச் செயல்களையும் செய்கிறாள். நிறைய ஏழைகளுக்கு அவள் உதவிக் கொண்டிருக்கிறாள். அதன் மூலம் தன் மனதை அவள் திருப்திப்படுத்திக் கொள்கிறாள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அந்த பணக்காரப் பெண் அந்தச் சிறுவனை ஒரு இடத்தில் சந்திக்க நேர்கிறது. ஆனால், அவன்தான் தன்னுடைய மகன் என்று அவளுக்கு தெரியாது. அந்தப் பெண்தான் தன் தாய் என்று அந்தச் சிறுவனுக்கும் தெரியாது.
திடீரென்று அந்தச் சிறுவனின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. மருத்துவர் ஒருவர் அவனுக்கு சிகிச்சை செய்வதற்காக வருகிறார். அப்போதுதான் அவருக்கே தெரிகிறது - அந்தச் சிறுவனை வளர்த்துக் கொண்டிருக்கும் அந்த ஏழை மனிதன் அந்தச் சிறுவனின் உண்மையான தந்தை அல்ல என்ற உண்மை. அந்த மனிதன், தெருவில் கண்டெடுத்த குழந்தைக்கு அருகில் இருந்த எழுதப்பட்ட குறிப்பை மருத்துவரிடம் காட்டுகிறான்.
தான் பார்த்த அந்த விஷயத்தை பெரிய அதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டு செல்கிறார் மருத்துவர். இரண்டு மனிதர்கள் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்று அனாதை இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்று வருகிறார்கள். சிறுவனைத் தருவதற்கு மறுக்கிறான் அந்த ஏழை ஊர் சுற்றி மனிதன். அவனிடமிருந்து பலவந்தமாக பிடுங்கி, சிறுவனை அழைத்துச் செல்கிறார்கள் அவர்கள். தான் வளர்த்த பையனை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு மனமில்லாத அந்த மனிதன், அவர்களை விரட்டிச் செல்கிறான். அவன் விரட்ட... அவர்கள் தப்பித்துச் செல்ல... அவன் விரட்ட... இறுதியில் சிறுவன், அவனுக்கே கிடைக்கிறான்.