Category: சினிமா Published Date Written by சுரா Hits: 3503
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ரெட் ஒயின் – Red Wine
(மலையாள திரைப்படம்)
2013மார்ச் மாதத்தில் திரைக்கு வந்திருக்கும் படம். படத்தின் நாயகன் மோகன் லால். படத்தை இயக்கியவர் Salam Bappu.
மோகன்லாலுடன் படம் முழுக்க வரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருப்பவர்கள்- ஃபகத் ஃபாஸில், ஆஸிஃப் அலி.
ஒரு கொலையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதை.
கம்யூனிஸ்ட் கட்சியின் (இடது) மாவட்ட செயலாளராக இருக்கும் ஃபகத் ஃபாஸில் ஒரு லாட்ஜ் அறையில் கொலை செய்யப்பட்டு விடுகிறார். அந்த கொலையைச் செய்தது யார்? எதற்கு செய்தார்கள்? அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனரான ரதீஷ் வாசுதேவனாக வரும் மோகன் லால் அந்தக் கொலையை விசாரிக்கிறார். உண்மை கொலையாளியை அவர் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதுதான் கதை.
அனூப் ஒரு பொறியியல் பட்டதாரி. ஆனால், நிறைய சம்பளம் கிடைக்குமே என்பதற்காக அவன் எந்த வேலையிலும் போய் சேரவில்லை. அதற்கு பதிலாக கேரளத்தின் பின் தங்கிய பகுதியாகவும், ஏழைகள் ஏராளமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதேசமாகவும், காடுகளை நம்பி வாழ்பவர்கள் அதிகமாக இருக்கும் பகுதியாகவும், ஆதிவாசிகள் நிறைய வாழும் இடமாகவும், நக்சலைட் இயக்கம் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் மாவட்டமாகவும் இருக்கும் வயநாடு மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக அவன் இருக்கிறான். ஏழை மக்களின் வாழ்விற்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவதுதான் அவனுடைய வேலையே. கட்சி வேலைகளில் ஈடுபடும் நேரம் போக, சாயங்கால வேளைகளில் அவன் நாடகங்களில் நடிப்பான்.
அவன் நடிக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு நிறைய ஆட்கள் வருவார்கள். ஒரு அரசியல் கட்சி பிரமுகர் என்ற வகையிலும், ஒரு நாடக நடிகன் என்ற முறையிலும் அவனை எல்லோருக்கும் தெரியும். அவன் நடிக்கும் நாடகங்களில் ஒன்று- வைக்கம் முஹம்மது பஷீரின்‘ப்ரேம லேஹனம்’ (காதல் கடிதம்). அதில் கேசவன் நாயராக நடிக்கும் அனூப், பஷீரின் அருமையான காதல் வசனங்களை உயிரோட்டத்துடன் பேசி, அனைவரின் கைத் தட்டல்களையும், பாராட்டுக்களையும் பெறுகிறான்.
அவனுடைய நெருங்கிய நண்பன் நவாஸ். வெளியே பெரும்பாலும் அனூப், தன் நண்பன் நவாஸுடன்தான் இருப்பான். இருவரும் டூ வீலரில் சுற்றுவார்கள்… ரெஸ்ட்டாரெண்ட்களில் சாப்பிடுவார்கள்... சி.டி. கடைகளுக்குச் சென்று சி.டி. வாங்குவார்கள். 80களில் வெளியான மலையாள படங்களை அனூப்பிற்குப் பிடிக்கும். ‘காக்கொத்திக்காவிலெ அப்பூப்பன் தாடிகள்’ என்ற மலையாளப் படத்தின் சி.டி.ஐ தேடிப் பிடித்து அவன் வாங்குகிறான். நவாஸ் விளம்பரப் படங்களை இயக்குபவன்.
அனூப் நடிக்கும் நாடகத்தை விரும்பிப் பார்க்க வந்த இளைஞன்- ரமேஷ். கர்ப்பமான மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் அவன் என்னதான் காலையிலிருந்து மாலை வரை நாயாய் அலைந்தாலும், நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவன். நினைத்த இடங்களிலெல்லாம் கடன் வாங்கி, கடன்காரர்களால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பவன். ஒவ்வொரு முறையும் சாக்குப் போக்கு கூறி நிலைமைகளைச் சமாளித்துக் கொண்டிருப்பவன்.
வயநாட்டில் ஏராளமான நிலங்களை ஆக்கிரமித்து, மிகப் பெரிய ஒரு திட்டத்தைக் கொண்டு வர நினைக்கிறது ஒரு குழு. அந்தத் திட்டம் செயல் வடிவத்திற்கு வருவதாக இருந்தால், அதனால் அந்தப் பகுதியில் காலம் காலமாக குடியிருக்கும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். வீடு, நிலம் எதுவுமின்றி அவர்கள் நடுத் தெருவில்தான் போய் நிற்க வேண்டும்.
பொது மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் ஒரு திட்டம் செயல்வடிவத்திற்கு வருவதை ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அனூப் அந்தத் திட்டத்தை எதிர்க்கிறான். பொதுமக்களைத் திரட்டி, அந்தத் திட்டத்திற்கு எதிராக போராட வைக்கிறான். ஊர்வலம் நடத்தி, கோஷங்கள் எழுப்பச் செய்கிறான்.
அனூப் உயிருடன் இருந்தால், தங்களின் திட்டம் எந்தக் காலத்திலும் நிறைவேறாது என்பதை உணர்கிறது அந்த கொள்ளையடிக்கும் கும்பல். தங்களின் கனவுத் திட்டம் நிறைவேண்டுமென்றால், அனூப் கொலை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள் அவர்கள். அதைத் தொடர்ந்து- லாட்ஜின் அறையில் தங்கியிருக்கும் அனூப் இரவு நேரத்தில் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்படுகிறான்.
அந்த கொலையைச் செய்தது யார்?
அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் ரதீஷ் வாசுதேவன் கொலையைச் செய்தது யார் என்பதை கண்டு பிடிக்கிறார்.
விசாரணையில் ஏராளமான மர்ம முடிச்சுகள் இருக்க, அவை ஒவ்வொன்றையும் அனாயாசமாக அவிழ்த்து, உண்மை குற்றவாளியை தன்னுடைய அபாரமான புத்தி கூர்மையாலும், புலன் விசாரணை செய்யும் திறமையாலும் கண்டு பிடிக்கிறார் அவர். யார் கொலையாளி என்பதை கண்டு பிடித்து, நமக்கு முன்னால் ஒரு நபரை நிறுத்தும்போது- நமக்கு உண்மையிலேயே ஆச்சரியம் உண்டாகிறது. படம் பார்க்கும் எல்லோருக்குமே அது உண்டாகும்.
அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் ரதீஷ் வாசுதேவனாக - மோகன்லால். (மோகன் லாலுக்கு இது அல்வா சாப்பிடுவதைப் போல. எந்தவித மிகை நடிப்பும் இல்லாமல், மிகவும் இயல்பாக நடித்து, பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார்). நடை, வசனம் பேசுதல் - எதிலும் சிறிது கூட செயற்கைத்தனம் இல்லை. சர்வ சாதாரணமாக பாத்திரத்துடன் இரண்டற கலந்து, ஒன்றிப் போய் நடித்திருக்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அனூப்பாக- ஃபகத் ஃபாஸில். என்ன இயல்பான நடிப்பு! இவரின் இந்த இயல்புத் தன்மை கொண்ட நடிப்பாற்றலை வளரும் நடிகர்கள் பலரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிரச்னைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் இளைஞன் ரமேஷாக - ஆஸிஃப் அலி! (பொருத்தமான தேர்வு!)
அனூப்பின் நண்பன் நவாஸாக சைஜு குறூப்.
மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
கதையை எழுதியிருக்கும் Noufal Blathoor, திரைக்கதை எழுதியிருக்கும் Mammen K.Rajan - இருவரும் பாராட்டிற்கு உரியவர்கள்!
ரஞ்சன் ஆப்ரஹாமின் படத் தொகுப்பு-A one!
ஜெயப்ரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
மியா, மேக்னாராஜ் - இருவரும் தாங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்திருக்கிறார்கள்.
Salam Bappu ஆரம்பத்திலிருந்து இறுதி வரை மிகவும் சுவாரசியமாக படத்தை இயக்கியிருக்கிறார். அதற்கு மிகவும் உதவியாக இருப்பவை - மோகன் லாலின் கதாபாத்திரமும், வயநாட்டின் நிலப் பகுதியை ஆக்கிரமிக்க திட்டமிடும் புதுமையான கதைக் கருவும்.