Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ஆதாமின்டெ மகன் அபு

Adaminte Makan Abu

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

ஆதாமின்டெ மகன் அபு

(மலையாள திரைப்படம்)

தாமின்டெ மகன் அபு (மலையாள திரைப் படம்) – 2011ஆம் ஆண்டில் சிறிய பட்ஜெட்டில் டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்டு திரைக்கு வந்த இந்தப் படம், தேசிய அளவிலும், மாநில அளவிலும் நிறைய விருதுகளை பெற்று பலரும் ஆச்சரியப்படச் செய்தது.

அபு எழுபது வயதைத் தாண்டிய ஒரு வயதான ஏழை முஸ்லீம் பெரியவர்.

அவருடைய மனைவி அய்ஷூம்மா. அத்தர், முஸ்லீம் மத நூல்கள், யுனானி மருந்துகள் ஆகியவற்றை தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கனமான பையில் வைத்து கொண்டு, கால் நடையாக நடந்து சென்று தெருக்களிலும், மசூதி இருக்கும் பகுதிகளிலும் அவற்றை விற்று, அதன் மூலம் கிடைக்கும் சிறிய ஆதாயத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர் அவர். அவருடைய மனைவி ஆடுகளையும், கோழிகளையும் வளர்த்து அதன் மூலம் ஒரு சிறிய தொகை குடும்பத்திற்காக சம்பாதித்துக் கொண்டிருக்கிறாள்.

அவர்களுடைய ஒரே மகன் என்றோ குடும்பத்துடன் வளைகுடாவிற்குச் சென்றவன், கிட்டத்தட்ட தன் தந்தையையும் தாயையும் மறந்தே விட்டான்.

இறப்பதற்குள் மெக்காவிற்கு தானும் மனைவியும் ‘ஹஜ்’ பயணம் போய்விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அபு. அந்த தம்பதிகள் தாங்கள் சம்பாதிக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்களைக் கூட சேமித்து உண்டியலில் போட்டு வைக்கின்றனர். அவ்வப்போது இரவு நேரங்களில் அவற்றை எடுத்து எண்ணி பார்ப்பார்கள்.

ஹஜ் பயணம் போக வேண்டுமென்றால், இன்னும் நிறைய பணம் வேண்டும். அதற்கு என்ன செய்வது? அந்த ஊரில் பள்ளிக்கூட ஆசிரியராக இருக்கும் அபுவின் நண்பர், தன்னுடைய மகளின் திருமணத்திற்காக தான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை கடனாக தர தயாராக இருக்கிறார். ஆனால், அதை அபு வாங்கிக் கொள்ள மறுத்து விடுகிறார். கடன் வாங்கி ‘ஹஜ்’ பயணம் சென்றால், அதன் புண்ணியம் பணம் கொடுத்தவர்களுக்குத்தான் என்றும், அதை வாங்கியவர்களுக்குக் கிடைக்காது என்றும் அவர் கூறுகிறார்.

கையில் இருக்கும் பணம் போதாது. அதனால் தன் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருக்கும் பலா மரத்தை விலை பேசுகிறார். அதற்கு முன் பணம் தரப்படுகிறது. கையில் இருந்த பணத்தையும், மரத்திற்காக தரப்பட்ட முன் பணத்தையும் ஒரு ‘ட்ராவலிங் ஏஜென்ஸி’யில் கொண்டு போய் கொடுக்கிறார். அங்கிருக்கும் ஒரு நல்ல குணம் கொண்ட மனிதர் மெக்கா பயணத்தைப் பற்றியும், அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், தவணை முறையில் பயணத்திற்கான பணத்தைக் கட்டலாம் என்றும் அபுவிற்கு விளக்கி கூறுகிறார்.

புகைப்படம் எடுத்தல், பாஸ்போர்ட் ஏற்பாடு செய்தல், மருத்துவ சான்றிதழ் வாங்குதல், புதிய ஆடைகள் வாங்குதல்- அனைத்தும் முடிவடைகின்றன.

ஹஜ் பயணத்திற்கான நாள் நெருங்குகிறது. தன் வீட்டின் முன்னால் நின்றிருந்த பலா மரத்தை வெட்டிய மர வியாபாரியிடம் மீதி பணத்தை வாங்குவதற்காக செல்கிறார் அபு. மர வியாபாரி அப்போதுதான் ஒரு குண்டைத் தூக்கி போடுகிறார். வெட்டப்பட்ட பலாமரம் கெட்டுப் போன ஒன்று என்றும், உள்ளே முற்றிலும் கரையான்களால் அரிக்கப்பட்டு விட்டது என்றும், அதை வைத்து எதுவுமே பண்ண முடியாது என்றும் கூறுகிறார். அவ்வளவுதான்… இடிந்து போகிறார் அபு.

எனினும், ‘ஹஜ்’ பயணத்திற்காக எதிர்பார்த்திருந்த பணம் என்பதால், அந்த மர வியாபாரி அபுவிற்கு மரத்திற்காக இல்லையென்றாலும், தான் கூறிய பணத்தைத் தர தயாராக இருக்கிறார். ஆனால், அபுவோ கடனாக பணத்தை வாங்குவதற்கு மறுத்து விடுகிறார்.

அபுவைச் சுற்றி இருக்கும் எல்லோரும் ஜாதி, மதத்தைத் தாண்டி ‘மனிதர்களாகவும், நண்பர்களாகவும்’ அவருக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். ஆனால். அபுதான் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்.

அபு மீண்டும் தன் வீட்டிற்கு வருகிறார். இரவு நேரம்… இந்த வருடம் ‘ஹஜ்’ பயணம் செய்ய முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட அபுவும் அவருடைய மனைவியும் தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள்.

‘இந்த வருடம் நாம் அங்கு செல்வதில் அல்லாவுக்கு விருப்பமில்லை… மரத்தை வெட்டி அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மெக்காவிற்குப் போகலாம் என்று நினைத்தோம். அது எவ்வளவு பெரிய தவறு? ஒரு மரமும் உயிர்தானே? அதை வெட்டுவது என்பது பாவம்தானே? தவிர, அந்த மரத்தை வெட்டும்போது, அதில் இருந்த எவ்வளவு உயிர்கள் இறந்திருக்கும்! அது எவ்வளவு பெரிய பாவம்! அதனால்தான் கடவுள் நம்மைத் தடுத்து நிறுத்தி விட்டார். அடுத்த வருடம் செல்வோம். அதற்காக இப்போதிருந்தே உழைப்போம்’ என்கிறார் அபு தன் மனைவியிடம்.

பொழுது புலர்கிறது. தன் வீட்டிற்கு முன்னால் சிறிய பலா மரக் கன்று ஒன்றைக் கொண்டு வந்து நட்டு, அதற்கு நீர் ஊற்றும் அபு, மசூதியில் கடவுளைத் தொழுவதற்காக தள்ளாடியவாறு நடந்து செல்கிறார். அவரையே பார்த்தவாறு நின்று கொண்டிருக்கிறாள் அவருடைய மனைவி அய்ஷூம்மா.

அபுவாக சலீம் குமாரும், அவருடைய மனைவி அய்ஷூம்மாவாக ஜரீனா வஹாப்பும் நடிக்கவில்லை – பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

பள்ளிக் கூட ஆசிரியராக நெடுமுடி வேணுவும், ‘ட்ராவலிங் ஏஜென்ஸி’ மனிதராக முகேஷூம், மர வியாபாரியாக கலாபவன் மணியும் நடித்து நம் இதயங்களில் இடம் பிடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்கியவர் சலீம் அஹமத் என்ற இளைஞர். அவருக்கு இது முதல் படம். முதல் படமே முத்திரைப் படம்! படத்திற்கு ஒளிப்பதிவாளர் – நட்சத்திர ஒளிப்பதிவாளரான மது அம்பாட்.

சிறப்புச் செய்தி :  தேசிய அளவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி இசை (ஐசக் தாமஸ் கொடுக்காப்பள்ளி) ஆகியவற்றிற்கான விருதுகளை இப்படம் பெற்றது.

கேரள அரசாங்கத்தின் சிறந்த படம். சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை ஆகியவற்றிற்கான விருதுகளை இப்படம் பெற்றது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version