Lekha Books

A+ A A-

ஆரூடம் - Page 21

aaruudam

அப்போது கதவுக்கு அப்பால் வந்து நின்ற இந்திரா:

"காலையிலேயே நடக்க ஆரம்பிச்சாச்சா?"

வர்மா நிற்கிறான். பதில் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று யோசிக்கிறான்.

இந்திரா: பணயமாகப் பொருளை வாங்க முடியாதுன்னுதான் நான் சொன்னேன். பணம் கொடுத்து உதவுறதா இருந்தா, கோபாலன் நாயர்கிட்ட கொடுத்துவிட்டா போதும்.

வர்மா அவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றிருக்கிறான்.

பிறகு எதுவுமே பேசாமல் வேகமாக நடக்கிறான்.

இந்திராவின் முகத்தில் தோன்றும் உணர்ச்சி மாற்றம்.

56

ண்ணியின் கையில் ப்ரஷ். புத்தகத்தில் இருக்கும் ஒரு படத்திற்கு சாயம் தேய்க்கிறான். பிற்பகல் நேரம். வீட்டின் உட்பகுதி. படுக்கையறை. நகரத்திலுள்ள தன் சினேகிதிகளுக்கு இந்திரா கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறாள். மூன்றாவது கடிதத்திலும் முகவரி எழுதி முடித்த அவள் ஒரு வேலை முடிந்ததாக நினைத்து கட்டிலில் ஏறி படுக்கிறாள். உண்ணி தரையில் அமர்ந்து புத்தகத்தில் இருந்த படத்திற்கு சாயம் தேய்த்துக் கொண்டிருக்கிறான்.

உண்ணி:  நான் தபால் பெட்டியில போட்டுடறேன் மம்மி. எனக்குத் தெரியும் தபால் ஆபீஸ்...

இந்திரா:   வேண்டாம். இங்கேயே இருக்கட்டும்.

இந்திரா பகல் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டதைத் தொடர்ந்து படங்களுக்குச் சாயம் போடும் வேலையை நிறுத்திய உண்ணி ஓசையெழுப்பாமல் வெளியே நகர்கிறான்.

உண்ணி சமையலறைக்கு வருகிறான். நாணியம்மா சாப்பாட்டு அறையில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்தவாறே, உண்ணை வெளியே ஓடுகிறான்.

பகல்:

நீலியின் குடிசை.

நீலி பாயில் படுத்திருக்கிறாள். மிகவும் தளர்ந்துபோய் அவள் காணப்படுகிறாள். உண்ணி தயங்கித் தயங்கி அங்கு வருகிறான். கண்களை மூடியவாறு படுத்திருந்த நீலியைப் பார்த்த உண்ணிக்கு மனம் என்னவோபோல் இருக்கிறது. நீலி மெதுவாக கண்களைத் திறந்து பார்க்கிறாள். உண்ணியைக் கண்டுபிடிக்க அவளுக்கு இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகின்றன. பிறகு சிரித்தவாறு மெதுவாக எழுந்திருக்கிறாள்.

உண்ணி:  காய்ச்சல் இருக்கா?

நீலி:       (என்ன பதில் சொல்வது என்று தயங்கியவாறு) ம்... இப்போ பரவாயில்ல. (சிறு அமைதிக்குப் பிறகு) எல்லாரும் எங்கே போயிருந்தீங்க?

உண்ணி:  (விருப்பமில்லாத குரலில்) ஒண்ணாம் தேதி என்னை ஊட்டியில ஸ்கூல்ல சேர்க்குறாங்க.

நீலி: போயி நல்லா படிக்கணும். படிச்சு பெரிய ஆளாக வேண்டாமா?

உண்ணி:  டாக்டர் ஊசி போட்டாரா?

நீலி: (தயக்கத்துடன்) ம்...

உண்ணி:  (சம வயதுக்கார ஒருவரை ஆறுதல் படுத்துவது மாதிரி) ஊசி போட்டா காய்ச்சல் சீக்கிரம் இல்லாமப் போயிடும். வலிச்சா கூட பரவாயில்ல.

நீலி: (அவன் சொன்னதை ரசித்தவாறு) ஓ... எல்லாமே நல்லா தெரியுதே உண்ணி தம்புரானுக்கு!

அப்போது நீலிக்கு கஞ்சி கொண்டு வருகிறாள் பாரு.

பாரு: இந்தா கஞ்சி.

நீலி: அங்கேயே வை. நான் பிறகு சாப்பிட்டுக்குறேன்.

பாரு தான் கொண்டு வந்த பாத்திரத்தை நீலிக்கு அருகில் வைக்கிறாள்.

பாரு: (உண்ணியிடம்) ஒரு பெரிய பருந்து கோழிக் குஞ்சைக் கொத்தி தின்னுது...

உண்ணி:  (வேகமாக) எங்கே? எங்கே?

அவர்கள் வாசலை நோக்கி ஓடுகிறார்கள்.

நீலியின் பார்வையில் - உண்ணியும் பாருவும் தூரத்தில் உயரத்தில் சுட்டிக் காட்டியவாறு என்னவோ ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள். உண்ணி பருந்தை விரட்டுவதற்காக இருக்க வேண்டும், கைகளைத் தட்டுகிறான். பிறகு சத்தமிடுகிறான்.

பிறகு அவர்கள் திடீரென்று விளையாட்டில் இறங்குகிறார்கள். பாரு ஓட்டமாக ஓட, அவன் அவளை விரட்டுகிறான். சடுகுடு போல ஒரு விளையாட்டு.

உண்ணியும் பாருவும் சடுகுடு விளையாடுகிறார்கள். உண்ணியைத் தொட்டு திரும்ப முயன்ற பாருவை உண்ணி இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறான். இருவரும் கீழே விழுகிறார்கள். சிரித்தவாறு அவர்கள் கட்டிப் பிடித்துக் கொண்டு உருளுகிறார்கள்.

நீலியின் குரல்:

"அடியே பாரு"

பாரு எழுந்திருக்கிறாள். உண்ணியும்.

அவர்களின் பார்வையில்- நீலி அழைக்கிறாள்:

"உண்ணித் தம்புரான், இங்கே வாங்க"

உண்ணி முன்னாலும், பாரு அவனுக்குப் பின்னாலும் நீலியை நோக்கி வருகிறார்கள்.

57

நீலியின் முன்னால் நின்று கொண்டிருக்கிறார்கள். உண்ணியும் பாருவும். அவர்களிடம் ஒரு பதைபதைப்பு இருக்கிறது. கோபத்துடன் நீலி அழைப்பது மாதிரி இருந்ததே காரணம். நீலி அவர்களையே உற்று பார்க்கிறாள்.

நீலி: (உண்ணியைப் பார்த்து சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்தவாறு) உண்ணி தம்புரான், நீங்க ஸ்கூலுக்குப் போயிட்டா அதுக்குப் பிறகு இங்கே வரமாட்டீங்கள்ல?

உண்ணி:  வருவேன். ஸ்கூல்ல லீவ் விடுறப்போ இங்கே வருவேன்.

நீலி: (கடுமையான குரலில்) எதுக்கு வரணும்?

உண்ணி:  (பதறியவாறு) எல்லாரையும்... எல்லாரையும் பார்க்குறதுக்கு.

நீலி: எல்லாரையும்னா?

உண்ணி:  (தயங்கியவாறு) உன்னை... பிறகு பாருவை...

நீலி: இந்தப் பொண்ணை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?

உண்ணி:  (வெட்கத்துடன்) ம்...

நீலி: (தன்னுடைய பேசும் முறையை மாற்றி) இனிமே இந்தப் பக்கம் விளையாட வரக் கூடாது. இந்தப் பொண்ணு கூட விளையாடக் கூடாது. இவளைப் பார்க்கக்கூடாது.

நீலியின் மனதிற்குள் என்னவோ போராட்டங்கள் நடக்கின்றன. உண்ணி என்னவோபோல் ஆகிறான். பாருவும்தான். இதுவரை அடக்கி வைத்த துக்கங்களும், யாருடனோ கொண்ட கோபமும் நீலியின் மனதில் புயல் வீச வைக்கின்றன.

நீலி: (மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு- யாரிடம் என்றில்லாமல் உண்ணியைப் பார்க்காமலே) சின்னப் பிள்ளையா இருக்கறப்போ உங்களை மாதிரி தம்புரான்மாருங்க விருப்பப்படுவீங்க. (துக்கம் கலந்த குரலில்) தொட்டும் தடவியும் விளையாடுவீங்க. உலகம்னா என்னன்னு தெரியாத அப்பாவிப் பொண்ணுங்க கனவுல மிதந்து திரிவாங்க.(தன் பேச்சை நிறுத்துகிறாள். நீண்ட பெருமூச்சு விடுகிறாள். கடுமையான குரலில் தொடர்கிறாள்) பெரிய ஆளுங்களா ஆன உடனே உங்களுக்கு சுய உணர்வு வந்திடும்- நீங்க தம்புரான்மார்கள்னும் நாங்க புலையப் பெண்கள்னும்.

உண்ணிக்கு நேராகப் பார்த்தவாறு கடுமையான குரலில்:

"இவ கூட சேர்ந்து இருக்குறதை இனியொரு முறை நான் பார்த்தா..."

மனதில் எழுந்த ஆவேசம் அடங்கியதைப் போல, சன்னமான குரலில்:

"நான்... நான் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல..."

அவள் மெதுவாக அவர்களை முகத்தை உயர்த்தி பார்க்கிறாள். பாருவிடம்:

"இங்கேயிருந்து போடி..."

பாரு அந்த இடத்தைவிட்டு நகர்கிறாள். மனதில் ஒரு வித பதைபதைப்புடன் உண்ணி நின்று கொண்டிருக்கிறான். கலக்கமும் அச்சமும் மேலோங்க ஒரு மாதிரி ஆகிப்போய் நின்று கொண்டிருக்கும் உண்ணியைப் பார்க்கும்போது கோபம் உண்டானாலும், அதை அடக்கிக் கொண்டு சாந்தமான சூழ்நிலையைக் கொண்டுவர நீலி முயற்சிக்கிறாள். சிறிது நேரத்திற்கு ஒரே நிசப்தம்.

நீலி: போங்க சின்ன தம்புரான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel